இளைஞர்மணி

எங்கே செல்கிறது இளைஞர்களின் பாதை

12th Apr 2022 06:00 AM | -கோமதி எம்.முத்துமாரி

ADVERTISEMENT


இன்றைய தலைமுறை இளைஞர்களும் பைக்கும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்று சொல்லுமளவுக்கு நிலைமைஉருவாகியுள்ளது. சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவதும் அதில் சாகசம் செய்வதும் அவர்களின் ஆகச்சிறந்த சாதனையாகவும்பிறரைக் கவரும் விஷயமாகவும் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு இளைஞர்களிடத்தில் பைக் மோகம் பன்மடங்கு வேகத்தில் அதிகரித்து வருகிறது.

தங்கள் பிள்ளைகள் "வேகமாக வளர்கிறார்கள்' என்ற அடிப்படையில் விதிமுறைகளை மீறி, பள்ளிப் பருவத்திலேயே வாகனங்களை இயக்க சிறுவர்களுக்கு அனுமதியளிக்கும் பெற்றோர்களே இன்று அதிகம் உள்ளனர். இதன் எதிரொலியாகவும் இன்று பைக் ரேஸ் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அடுத்ததாக மோட்டார் வாகனச் சட்டங்களில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படாததும், கடுமையான விதிகள் இல்லாததும் காரணமாக இருக்கிறது.

"பைக் ரேஸ் கலாசாரம்..' இளைஞர்களின் நவீன போதை எனலாம். தலைநகரங்களில் மட்டுமே இருந்து வந்த பிரச்னை இப்போது அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் மிகப்பெரும் பிரச்னை. ஆனால், இளைஞர்களுக்கோ நல்ல பொழுதுபோக்காக இருப்பதுடன் "ஹீரோயிசம்' உணர்வை அடைவதாகக் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

சாலை விபத்துகள் குறித்து இன்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 4.50 லட்சம் வரை சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் அதில் 1.5 லட்சம் பேர் இறப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 53 சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் நான்கு நிமிடங்களுக்கு ஓர் இறப்பு ஏற்படுவதாகவும் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

சாலை விதிகள் என்று வகுக்கப்பட்டு அது நடைமுறையில் இருந்தும் அனைத்து சாலைகளிலும் வேகத்தடை முதல் போக்குவரத்து காவலர் வரை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டும் இவ்வளவு விபத்துகள் நடைபெறுகின்றன என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம்.. பல இடங்களில் சாலை விதிகளை மதிக்காமல் செல்பவரை தினமும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

இந்த சூழ்நிலையில்தான், "பைக் ரேஸ் கலாசாரம்' மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. இளைஞர்கள் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி, கம்பிகளைக் கொண்டு சாலைகளில் உரசி தீப்பொறி ஏற்படுத்தி, அலறல் சத்தமிட்டும் சாலைகளில் செல்லும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்துவது என்பதும் காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு காவல்துறை தடை விதித்தும் சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை முற்றிலும் ஒழிக்க நகரங்களில் இரவு முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக இளைஞர்களிடமும் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107-ன் படி, மோட்டாôர் சைக்கிள் பந்தயத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறவர்கள் மீதும் பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, பைக் ரேஸில் சிறுவர்கள் ஈடுபட்டால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும் இளைஞர்களின் பைக் மோகம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு, வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாத காலம் பணியாற்ற நிபந்தனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்றும், தனது பணி அனுபவம் குறித்து நாள்தோறும் அறிக்கையாக தயார் செய்து மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்கவும், அதுபோல ஒரு மாத கால பணி முடிந்ததும், இளைஞரின் பணி குறித்து மருத்துவமனை முதல்வர் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறையும் நீதிமன்றமும் இளைஞர்களை நல்வழிப்படுத்த சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முயற்சி எடுத்து வருகின்றது. இருப்பினும் சாலை விபத்துகளை குறைக்கவும் இதுபோன்ற பைக் ரேஸ் கலாசாரங்களை ஒழிக்கவும் விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.

பொதுவெளியில் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும், பிரபலமாக உருவாக வேண்டும் என்ற நோக்கிலும் பிற இளைஞர்களை கவர வேண்டும் என்ற ஆசையிலும் இளைஞர்கள் இதுபோன்று ஈடுபடுகின்றனர். இதற்கு சமூக வலைத்தளங்கள் மிகவும் உந்துதலாகவும் ஆதரவாகவும் இருக்கின்றன.

சமீபத்தில் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு வந்த பிரபல யூடியூப் பைக் ரேசர்கள் இருவரைக் காண நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடியது, இன்றைய இளைஞர்கள் என்ன மாதிரியான கலாசாரத்தில், மனநிலையில் இருக்கிறார்கள் என யோசிக்கத் தோன்றுகிறது.

இதுபோன்ற பைக் ரேஸ் நிகழ்வுகளைப் பார்த்து சிறுவர்கள் கூட பள்ளிகளுக்கு பைக்கில் வருகின்றனர். 18 வயது முடியும்போது தங்களுக்கென ஒரு பைக் இருக்க வேண்டும் என பெற்றோர்களிடம் அடம்பிடித்து வாங்கிக் கொள்கின்றனர். முன் சக்கரத்தைத் தூக்கிக்கொண்டு பைக் ஓட்டுவது(வீலிங்) இன்றெல்லாம் அவ்வளவு பெரிய சாகசமாகமாறிவிட்டது.

இதுகுறித்து இன்றைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. தங்களுடைய பிள்ளைகள் இதுபோன்று பைக் ஓட்டுவதை சில பெற்றோர்கள் பெருமையாக நினைப்பதுதான் இதில் சிந்திக்க வேண்டிய விசயம்.

நவீன கலாசாரத்தின் ஒரு பகுதியாக இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளிடம் நட்பு பாராட்டுகிறோம் என்ற அடிப்படையில் அவர்களை கண்டிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்து வளர்க்கின்றனர். தனித்து செயல்பட விடுவது தப்பில்லை என்றாலும் தவறு செய்யும்போது அதைத் திருத்தி அவர்களை சரியான பாதையில் பயணிக்க வைக்கும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டிக்கும் கடமையும் ஆசிரியருக்கு இருக்கிறது. ஏனெனில், இன்று பொது மக்கள் கூடும் இடங்களில் பைக் ரேஸில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பைக் ரேஸ் பயிற்சி பெறுவோரிடம் இது குறித்து கேட்டால், "முறையாக பயிற்சி பெறுபவர்கள் இவ்வாறு மக்கள் செல்லும் சாலைகளில் செல்ல மாட்டார்கள். பைக் ரேஸ் பயிற்சிக்கென விதிமுறைகள் உள்ளன. சிசி அதிகமுள்ள பிரத்யேக பைக்குகள்தான் ரேஸூக்கு பயன்படுத்தப்படும்; ஆனால், சிறுவர்கள்/இளைஞர்கள் சிலர் சாதாரண பைக்குகளில் இதுபோன்று சாகசங்களில் ஈடுபடும்போது ஆபத்து ஏற்படுகிறது. உண்மையில் அவர்கள் செய்வது பைக் ரேஸ் அல்ல' என்கின்றனர்.

"இன்றைய இளைஞர்கள்தான் நாளைய சமுதாயம்' என்பதால் அடுத்த தலைமுறையினரை சரியான வழியில் நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு இன்றைய மூத்த சமூகத்திற்கு இருக்கிறது. பைக் ரேஸ் கலாசாரத்தில் இருந்து இளைஞர்களை விடுவிக்க பெற்றோர்-ஆசிரியர்கள் உரிய முயற்சிகளையும் அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

 

கனவை சிதைக்கிறார்கள்!


"கனவு காணுங்கள், கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல. தூங்க விடாமல் செய்வது எதுவோ, அதுவே கனவு என்றார்' முன்னாள் குடியரசு தலைவர். அப்துல் கலாம் . இன்றைய இளைஞர்கள் கைகளில் தான் நம் தேசத்தின் எதிர்காலம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்றைய இளைஞர்களோ பொறுப்பற்று இரு சக்கர வாகனங்களில் பந்தயங்களை வைப்பது போன்ற தனக்கும்,

சமுதாயத்திற்கும் பயனற்ற காரியங்களை செய்வது வருத்தமளிக்கிறது.

சமீபத்தில் வாகன பந்தயங்களில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய பல இளைஞர்கள் முதுகு தண்டுவடம் பாதித்து கைகள் செயலிழப்பு, கால்கள் செயலிழப்பு, கோமா எனும் முழு மயக்க நிலையை அடைந்து அவர்களின் கனவையும், அவர்களின் பெற்றோர்களின் கனவையும் சிதைத்து மீண்டும் இயல்பு நிலைக்கு வர முடியாத இறுதி நிலைப் பாதையில் புரள்வது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு.

வாகனத்தின் வேகம் அவர்களின் வாழ்க்கையை சோகத்தின் விளிம்பில் கொண்டு செல்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. கடன் வாங்கி மாத தவணை செலுத்தும் தகப்பனின் வலியும், வேதனையும் புரியாத நிலையில் இன்றைய இளைஞர்கள் இருப்பது பெற்றோர்களின் மெத்தனப்போக்கே. அவர்களை நன்னெறிப்படுத்தி நல்லதொரு வழியில் திசை திருப்புவதும்,சமுதாய பொறுப்பை விளங்க வைக்க வேண்டியதும் அவர்களின் கடமையே.

"கற்க கசடற' என்ற குறளில் வள்ளுவர் "நிற்க அதற்குத் தக' என்று குறிப்பிடுவதை குறளை வெறும் மதிப்பெண்ணாக மட்டும் பார்க்காமல் வாழ்வியலில் பின்பற்ற வேண்டியது அவசியம். படித்த பட்டம் இளைஞர்கள் கூட இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வள்ளுவன் வாக்கை புறந்தள்ளி நடப்பது போன்றது.

அயல் நாட்டினரும் போற்றும் வகையில், இளைஞர்களுக்கு அடையாளமாய் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் இருந்த புண்ணிய பூமி இது. அத்தகைய பூமியில் இன்றைய இளைஞர்கள் பொறுப்பற்றவர்களாய் இருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடைக்கல்.

இன்றைய இளைஞர்கள் அவர்களின் கனவை மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களின் கனவை, நம் நாளைய இந்தியாவின் கனவையும் சேர்த்து தான் தொலைக்கின்றனர். இன்றைய இளைஞர்கள் தாம் செய்யும் செயல்களில் தமக்கு என்ன ஆதாயம், நம் சமுதாயத்திற்கு என்ன ஆதாயம் என்று யோசித்து திறம்பட செயல்பட்டால் வாழ்வில் வெற்றி அடைய முடியும். நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முடியும்.

இனியாவது சரியான பாதையில் இலக்கின்றி பயணம் செய்வதை, இது போன்ற இளைஞர்கள் கைவிடுத்து, அவர்கள் கனவையும், அவர்களின் பெற்றோர்களின் கனவையும் நனைவாக்க பாடுபட வேண்டும்.

- மரு.சோ.தில்லைவாணன்

ADVERTISEMENT
ADVERTISEMENT