இளைஞர்மணி

காணொளலி வழி கல்வி... வருங்கால கல்விமுறை!

கோமதி எம். முத்துமாரி

கரோனா பெருந்தொற்றின் காரணமாக இன்று கற்றல் முறைகளும் கற்பித்தல் முறைகளும் எதிர்பாராத அளவுக்கு உருமாறியுள்ளன. பெருந்தொற்று காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு ஓரளவுக்குக் கல்வி கிடைத்தது என்றால் அதற்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல்தொடர்பு சாதனங்களுமே காரணம் என்று சொல்லலாம்.

இன்று ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் வாட்ஸ்ஆப், யூ ட்யூப் என்று ஆன்லைன் வழியாக பல்கிப் பெருகியுள்ளன.

காட்சிவழியாக மாணவர்களுக்கு பாடங்கள் விளக்கப்படுவதால் மாணவர்களின் புரிதல்திறன் மேம்பட்டுக் கொண்டிருக்கிறது. யூ ட்யூப் போன்ற பொதுவான தளங்களில் பல்வேறு ஆசிரியர்கள் பல்வேறு முறைகளில் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குபாடங்கள் எளிதில் விளங்குகின்றன.

ஆன்லைன் வழிக் கற்றலில் குறிப்பாக விடியோ காட்சிகள் மூலமாக கற்பித்தல் மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காணொலிக் கற்றலில் நன்மைகள் அதிகம் இருக்கும்பட்சத்தில் அதனைத் தொடர்வதில் தவறில்லை. ஏன், வகுப்பறைகளில் கூட விடியோக்கள் மூலமாகப் பாடங்கள் கற்பிக்கப்படுவது மாணவர்களிடையே படிப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

காதால் கேட்பதைவிட கண்களால் பார்த்து கற்கும் இந்த நவீன கற்றல் மற்றும் கற்பித்தல் முறையே சிறந்தது என்றும் நிபுணர்கள்கூறுகின்றனர்.

காணொலிவழி கற்றல்:

விடியோக்கள் மூலமாக கல்வி கற்பது மாணவர்களின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புகைப்படங்கள், விடியோக்களின் மூலமாக காட்சிப் பதிவுகள் மூளையில் குறிப்பிடத்தக்க நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் மாணவர்கள் விரைவாகப் பதிலளிக்கவும் முடிகிறது. மேலும், காட்சிகளைப் பார்க்கும்போது அந்த குறிப்பிட்ட விடியோ சார்ந்த தகவல்களை மூளை வேகமாக உள்வாங்கிக் கொள்கிறது.

கதைகள் மூலமாக கற்றல்

புகைப்படங்கள் அல்லது விடியோக்கள் வாயிலாக மாணவர்கள் கற்கும்போது, பாடங்களை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள கதைகளைக் கையாளலாம். வெவ்வேறு கதைகளின் மூலமாக புதிய கற்றல் வழிமுறையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். பாடத்துடன் ஒன்றிய கதைகளை உருவாக்கி கூறும்போது மாணவர்களுக்கு கவனம் அதிகரிக்கும்.

சுய கற்றல்

அச்சிடப்பட்ட புத்தகத்திலிருந்து வாசிப்பது, மனப்பாடம் செய்வதை விட காணொலிவழி கற்பது, மாணவர்களை அதுசார்ந்த ஆய்வில் ஈடுபடத் தூண்டுகிறது. மேலும், பள்ளி, கல்லூரி பாடங்கள் தவிர்த்து பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் கூடுதல் பயிற்சிகளுக்காகவும் மாணவர்கள் சுயகற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு இணையதளங்கள் உதவியை நாடலாம்.

இப்போது யூ ட்யூப் போன்று விடியோ தளங்கள் பல இருப்பதால் சுய கற்றலுக்கு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூடத் தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

நேரம் குறைவு

வகுப்பறையில் மணிக்கணக்கில் அமர்ந்து ஒரு பாடத்தை படிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பாடம் சார்ந்த ஒரு அரை மணி நேர
விடியோவைப் பார்ப்பது மாணவர்களுக்கு கற்றலை எளிதாக்குகிறது. இதன் பின்னர் புத்தகத்தில் உள்ள பாடத்தை வாசிக்கும்போது எளிதாக விளங்குகிறது. எனவே, இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்று கூறலாம்.

தொலைதூர ஆன்லைன் கல்வி

இன்று புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களால் இணையங்களில் நடத்தப்படும் ஆன்லைன் தொழில்முறை படிப்புகள் பிரபலமடைந்து வருகின்றன. முன்னதாக கடல்கடந்து வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி எடுத்துக்கொண்ட பலரும் இன்று எளிதாக இருந்த இடத்திலேயே ஆன்லைன் வழியாக கற்றுக்கொள்கின்றனர். ஆன்லைன் வகுப்புகள் கற்றலின் சிரமத்தைக் குறைக்கின்றன.

செய்முறைப் பயிற்சிகள்

ஆசிரியர் ஒரு பயிற்சியை செய்யச்சொல்லி வாய்மொழி அறிவுரைகளை வழங்குகிறார். இப்போது நீங்கள் ஒரு விடியோவைப் பார்த்து ஒரு பயிற்சியை கற்றுக்கொள்கிறீர்கள். இரண்டு முறைகளில் எதனை எளிதாக உணர்வீர்கள்? எந்த முறையில் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்? சில பயிற்சிகளை செய்முறை கற்றல் மூலமாக கற்றுக்கொள்வதே எளிதாக இருக்கும். எனவே, கடினமான பாடங்களை செய்முறைப் பயிற்சிகள் மூலமாக பயிலுங்கள்.

ஆசிரியர் நேரடியாகப் பாடம் நடத்தும் போது எழும் ஐயங்களை நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நிறைய மாணவர்கள்-நிறையப் பாடச்சுமைகள்- உள்ள இக்காலத்தில் நேரடியாகக் கற்றுத் தெளிவதற்கு நேரம் போதாமை ஒரு தடையாக இருக்கிறது. காணொலி மூலம் கற்றுக் கொள்ளும்போது தேவைப்படும் இடத்தில் விடியோவை நிறுத்தி முன்னோக்கி, பின்னோக்கி நகர்த்தி, நன்றாகப் புரியும் வரை பார்த்து தெளிவு பெற முடியும்.

வேடிக்கையான அனுபவம்

வழக்கமாக வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது எவ்வளவு ஆர்வமாக இருந்தாலும் சிறிது நேரத்தில் அலுப்பு,
தூக்கம் வந்துவிடும். ஆனால், ஆன்லைன் கற்றல் அல்லது காணொலி வழிக் கற்றல் ஒரு வேடிக்கையான அனுபவத்தைத் தருவதால் மாணவர்களுக்கு கற்றலின் மீது ஆர்வம் கூடும். வகுப்பறைக் கல்வியும் அவசியம்தான் என்றாலும் கற்றலில் புதுமையைப் புகுத்த அவ்வப்போது காணொலிவழிக் கற்றலை ஆசிரியர்கள் கையில் எடுக்கலாம்.

ஆசிரியர்-மாணவர் நட்புறவு

வகுப்பறைகளைவிட காணொலிவழி கற்றலில் ஆசிரியர்- மாணவர்கள் நட்புறவு நன்றாகப் பேணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, வகுப்பறையை விட காணொலிவழி கற்றலில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் அதிகம் பேசுவது, சந்தேகங்கள் கேட்பது நிகழ்கிறது. மேலும் இந்த காணொலி உரையாடல் மனதில் ஓர் அழியாத தாக்கத்தை ஏற்படுத்துவதால் கற்பவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர்களுக்கும் இடையே ஒரு நட்பு பாலத்தை ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT