இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 15:  சொல்லின் செல்வர்!

ஆர். நட​ராஜ்

ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும் இரண்டு வரப்பிரசாதம், அவனை உச்சத்தில் வைக்கிறது. ஒன்று அதீத மூளை; மற்றொன்று  பேச்சாற்றல். கற்றதனால் என்ன பயன், அதை பொருள் விளங்க மற்றவருக்குச் சொல்ல முடியாவிட்டால்?.

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

(குறள்: 650)

 "சொல்வன்மை இல்லாதார் மணமில்லா மலர்' என்கிறார் வள்ளுவர்.

பவணந்தி முனிவர் நல்லாசிரியருக்கான குணாதிசயங்களை விவரிக்கிறார்: 

சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி 
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைந்து 
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து 
கொள்வான் கொள் வகை அறிந்து அவன் உள்ளம் கொள்ள 
கோட்டம் இல் மனதில் நூல் கொடுத்தல் என்ப  
கற்றலை இனிமையாக்க எவ்வளவு சிந்தித்திருக்
கிறார்கள் நமது முன்னோர்கள்! தற்போது இத்தகைய 
குணவான்களைக் காண்பதரிது.  

மாணவர்கள் எவ்வாறு பயில வேண்டும் என்பதையும் முன்னோர்கள்,   பாக்கோ தியானம் - கொக்குக்கு ஈடான கவனம் ; காக சேஷ்ட - காக்கை போல் சுறுசுறுப்பு; ஷ்வான் நித்ர - நாய்களை போல் லேசான தூக்கம்; அல்ப ஆகாரி - தேவையான அளவான உணவு; கிருஹ தியாகி-வீட்டை துறந்து குருகுல வாசம்  என்று பட்டியலிட்டுள்ளார்கள்.  

மாணவர்களுக்கு சிந்திக்கும் திறன், விவாதிக்கும் முறை, முழுமையான புரிதலுக்கு கேள்வி கேட்கப் பழகுவது போன்ற பகுத்து உணரும் தன்மையை கல்வி, பாடத்திட்டம் மூலம் வளர்க்க வேண்டும். அந்தந்த பாடங்களுக்கு வெறும் பாடத்திட்டங்களை நிரப்புவது, புரிதல் இல்லாமல்  மனனம் செய்து தேர்வில் கொட்டுவது ஆகியவற்றால் எந்தவிதத்திலும் உபயோகம் இல்லை. 

இத்தகைய தரம் தாழ்ந்த கல்வியைப் பயிற்றுவிக்கும் முறையால் நமது மாணவர்கள் "நீட்' போன்ற போட்டித் தேர்வு என்றாலே அஞ்சுகிறார்கள். எளிதான கேள்விகள் அதற்கேற்றால் போல் விடைகள், புரிகிறதோ இல்லையோ மனப்பாடம் செய்து ஒப்பிக்க பழக்கப்பட்டவர்கள் சிறிது கேள்விகளைத் திரித்து கேட்டால் விடை அளிக்க முடியாது 
விழிப்பார்கள்! 

இளைஞர்களைக் குறை சொல்ல முடியாது. எல்லாவற்றையும் எளிதாக்க வேண்டும் என்று முனையும் அரசியல் பின்னணி உள்ள கல்வியாளர்களைச் சொல்ல வேண்டும். கடினத்துக்கு நம் மாணாக்கர்களைப் பழக்க வேண்டும்.

இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது, கருத்து செறிந்த விவாதிக்கும் திறமையை- க்ரிடிகல் திங்கிங்க்.எழுதும் திறமை, பேச்சாற்றல், செயலாக்கம் இவை ஒரு சேரப் பெற்றவர் முழுமையான கருத்து பரிமாற்ற வல்லவர்.  கிரேக்க இலக்கிய பிதாமகர் ஹோமர் இல்லியட் என்ற காவியத்தில் நாயகன் அக்கிலீசின் ஆசிரியர்  பயிற்றுவிக்க வேண்டிய அடிப்படைக் கலை "ஸ்பீக்கர் ஆஃப் வேர்ட்ஸ் டூயர் ஆஃப்  டீட்ஸ்' பேச்சிலும் செயலிலும் வல்லவனாக்க வேண்டும் என்று விவரிக்கிறார். "வாய்ச்சொல்லில் வீரரடி' என்பது போல் பேசுவதில் மட்டுமல்ல செயலிலும் வல்லவராக இருக்க வேண்டும். இதுதான் "கம்யூனிகேஷன்' திறனுக்கு அடிப்படை.

பலருக்கு மேடையில் பேசுவது என்றாலே சிம்ம சொப்பனம். மனிதனுக்கு பயம் அளிக்கக் கூடிய செயல்களில் மேடைப் பேச்சும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அரசியல் கட்சிகள் பொது மேடையில் பேசுவதற்கு பயிற்சி, பயிலரங்கம் மூலமாக நடத்துகிறார்கள். ஆனால் ஒருவர் மீது ஒருவர் அவதூறு பரப்புவதற்கான பயிற்சியாக உருவாகிவிட்டது என்பது தான் வேதனை. அது ஒரு தினுசான பேச்சாற்றல்!  

பகுத்தறிவு என்பது விவாதித்து சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை குறிக்கும். ஆனால் விபரீத கருத்தியல் மூலம் சிலவற்றை உதாசீனப்படுத்துவது பகுத்தறிவு என்று ஓர் அர்த்தம் புகுத்தப்படுகிறது. இது பாரபட்சமற்ற புரிதலுக்கும் கருத்து செறிந்த விவாதிக்கும் திறனுக்குத் தடையாக உள்ளது என்பதை உணர வேண்டும்.

"ஷேக்ஸ்பியர் போல உரைக்க பழகுங்கள்' என்கிறார் அமரிக்க பேச்சுப்பட்டறை நிபுணர் தாமஸ் லீச்.

"ஷேக்ஸ்பியர் நடையில் உள்ள சொல்வளம் கருத்து களஞ்சியம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. பேச்சாற்றலை வளர்க்க முறையான வழிகள் அனைத்தும் ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் தெளிவு படுத்தியுள்ளார்' என்று தாமஸ் லீச் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

பேச்சாற்றலை வளர்ப்பதற்கு முக்கியம் வாசிப்பு. பல புத்தகங்களைப் படிக்க வேண்டும். தேன் கூடு போன்றது புத்தகங்கள். பலரின் படைப்புகள், கற்பனைகள் நமது கையில். பருகப் பருக தெவிட்டாதது. ஆனால் கைபேசி யுகத்தில் புத்தக வாசிப்பு குறைந்து வருகிறது. புத்தகக் கண்காட்சி எப்போதும் இல்லாத வகையில் பல நகரங்களில் நடத்தப்படுகின்றன. கூட்டமும் வருகிறது. ஆனால் அங்குள்ள உணவு மையங்களில் பணம் செலவிடுவதில் சிறு பங்கு கூட புத்தகங்கள் வாங்குவதில் செலவிடுவதில்லை!

உறவுகள் இணைவதும் பிரிவதும் நாம் பேசும் விதத்தில் உள்ளது. "நன்றி மறப்பது நன்றன்று' என்பதை நாம் அறிவோம், ஆனால் எவ்வளவு முறை நமக்கு உதவி செய்பவருக்கு நன்றி பாராட்டுகிறோம்? கமலஹாசன் ஒரு படத்தில் தூய்மைப்பணியாளரைக் கட்டி பிடித்து நன்றி தெரிவிப்பார். நற்செயலைப் பாராட்டும்விதமாக ஒருவரை அணைப்பது -"கட்டிப்பிடி வைத்தியம்'-  நல்லுணர்வைப் பரப்புகிறது என்று உணர வைப்பார். கருத்துப் பரிமாற்றத்தில் இத்தகைய செய்கைகள் மூலம் வரும் வெளிப்பாடுகள் உறவுகளைப் பலப்படுத்துகின்றன.  

பேசும்போது நமது உடல் அசைவுகள் பல அர்த்தங்களைக் கொடுக்கின்றன. சில சமயம் மௌனம் காத்தால் கூட அது அங்கு  இருப்பவர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுக்கும். "பேச வேண்டிய தருணத்தில் பேசாமல் இருப்பது கோழைத்தனம்' என்கிறார் கருப்பினர் உரிமைகள் போராளி மார்டின் லூதர் கிங். கேள்வி கேட்க துணிவு வேண்டும் . 

மாமன்னர் அலக்சாண்டரின் தந்தை மன்னர் பிலிப்ஸ், அலக்சாண்டர் பிறந்த போது "எனது மகன் சிறந்த ஆசான் அரிஸ்டாட்டிலிடம் பயிலப் போகிறான் அதில்தான் எனக்கு உண்மையான  மகிழ்ச்சி' என்றார். 

அரிஸ்டாட்டில் மிகச் சிறந்த ஆசிரியர். அவர் பயிற்றுவிக்கும் முறை அலாதியானது. மாணவர்களிடம் முதலில் எவ்வாறு கேள்வி கேட்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பார். ஒரு கருத்தை உள்வாங்கும் போதுதான் சந்தேகங்கள் பிறக்கும். சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ளும் முறை அறிவை வளர்க்காது. 

அலக்சாண்டர் தனது வெற்றிக்குக் காரணம் அரிஸ்டாட்டில் என்றார். "ஏனென்றால் அவர்தான் எனக்கு கேள்வி கேட்க கற்பித்தார், அதன் மூலம் தான் எனக்கு வரும் இடையூறுகளை அலசி ஆராய்ந்து தகர்த்து வெற்றிப் பாதையில் பயணிக்க முடிந்தது' என்றார். 

தொடர்பியலில் "பாடி லாங்வேஜ்' எனப்படும் உடல் அசைவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேர்ந்த பேச்சாளர்கள் தமது உடல் அசைவுகள் மூலம் தமது கருத்துகளுக்கு வலிமை சேர்த்து கேட்போருக்கு நன்றாகப் பதிவாகும் வகையில் பேசுவார்கள்.  அண்ணா இதில் வல்லவர். அவர் மேடையில் நின்று பேச ஆரம்பித்தால் கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தைத் தனது பேச்சாற்றல் மூலம் கட்டிப்போட்டு ஆர்வமாகக் கேட்க வைப்பார்.

"கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது' என்பார்கள். சிந்தித்துப் பேச வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள், கண்ணியம் குறையாத வகையில் கேட்போர் மனம் 

புண்படாதவாறு அமைய வேண்டும். 
ஒளவை எவ்வாறு பிறரை மெச்ச வேண்டும் என்பதை வகை
படுத்தியுள்ளார்;
நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர்தமை நெஞ்சில் 
வினையாளை வேலை முடிவில்! 

இதை எதையுமே நாம் செய்வதில்லை; மாறாக நமக்கு வேண்டியவர்களை மற்றவர் எதிரில் குறை சொல்லித் தீர்க்கிறோம்! பிரபலமான பன்னாட்டு நிறுவனத்தில் மேற்பார்வையாளர்களிடம் எவ்வளவு முறை தங்கள் கீழ் பணி புரிபவரை மெச்சியிருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு 82% ஆம் என்றனர். அதே கேள்வியை பணியார்களிடம் கேட்ட போது 13% பணியாளர்கள் தான் தங்களை மேற்பார்வையாளர்கள் மெச்சியதாகக் கூறினர்! 

குறை கூறுவதில் நாம் வல்லவர்கள். ஆளுமையில் மிக முக்கிய வழிமுறை: வெளிப்படையாக மெச்சுவது, குறை கூறுவது தனிமையில். இதுவும் ஒருவகை பேச்சாற்றல். 

உலகின் சிறந்த தலைவர்களின் உரை சரித்திரத்தில் திருப்பு முனையாக அமைந்துள்ளது, அமரிக்க விடுதலை போராட்டத் தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் "கெட்டிஸ்பர்க்' என்ற இடத்தில் ஆற்றிய  272 வார்த்தைகள் அடங்கிய சிறிய   உரை. அது ஜனநாயக மக்களாட்சி   அரசியல் அமைப்பிற்கு வித்திட்டது. ரோம் நகர் மன்னன் சீசரின் கொலைக்குப் பிறகு மார்க் ஆண்டனி நிகழ்த்திய "நாம் எல்லோரும் கனவான்களா' என்ற எழுச்சி உரை, விவேகானந்தர் உலக மதங்கள் மாநாட்டில் நிகழ்த்திய "சகோதரர்களே, சகோதரிகளே' உரை, இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப் போர் நடக்கையில்,  " எதிரிகளைக் கடலிலும் நிலத்திலும் மலைகளிலும் எதிர்கொண்டு வீழ்த்துவோம்'  என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய நம்பிக்கை உரை, கருப்பினர் உரிமைப் போராளி மார்டின் லூதரின் " ஐ ஹாவ் எ ட்ரீம்" என்ற உரை, இந்தியா சுதந்திரம்  பெற்ற போது பிரதமர் நேரு ஆற்றிய "ட்ரிஸ்ட் வித் டெஸ்டினி'  உரை, அமரிக்க ஜனாதிபதி கென்னடி அமெரிக்க மக்களுக்கு விடுத்த " நாடு என்ன செய்தது என்று கேட்காதே...  நீ அதற்கு என்ன செய்தாய்' என்ற வேண்டுகோள், 2004- ஆம் வருடம், முதல் கருப்பர் இன ஜனாதிபதி ஓபாமா ஆற்றிய உரை ஆகியவை சிறந்த உரைகளாகக் கருதப்படுகின்றன.

பண்டைக் காலத்தில், ஞானம் பெற்ற புத்தர் தமது 
பக்தர்களுக்கு ஆற்றிய அருளுரை, ஆதி சங்கரர் நாட்டின் பல 
பகுதிகளுக்குச் சென்று வழங்கிய அத்வைத ஞானோப
தேசம், அதற்கும் முன்னால் பாரதப்போரில் தேரோட்டி 
கண்ணன் அருளிய கீதோபதேசம், ஏசுநாதர், நபிகள் 
நாயகம் போதித்த சன்மார்க்க அருள்மொழி இவை
யெல்லாம் மனித சமுதாயத்தை நிலை நிறுத்தின. 

பேச்சாற்றலின் வலிமை அதை உபயோகிக்கும் திறன் என்பதை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வால்மீகி இராமாயணத்தில் அனுமனை உதாரணமாக வைத்து சொல்லப்பட்டிருக்கிறது. 

இராமனின் தூதுவராக அனுமன் இலங்கைக்குச் சென்று திரும்பி இராமனை சந்திக்கிறான். இலங்கையில் தான் கண்டதை விவரிக்கிறான். கம்பர் இதை மிக அழகாகப் புனைந்துள்ளார்: 

கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்' என்று, அனுமன் பன்னுவான்.
கண்டேன் தேவியை என்று அனுமான் இராமரிடம் சொன்ன ஸ்தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டதேவி! 
விலாவாரியாக இல்லாமல் சுருங்கச் சொல்லும் திறன், குழப்பமில்லாது தெளிவாக மொழிதல், சுத்தமான 
இலக்கணம், தீர்க்கமான சொல்லாட்சி, பதற்றமின்றி உணர்ச்சிவசப்படாமல் தெளிந்த நீரோடை போல மொழிதல், பளிச்சென்ற உச்சரிப்பு, ஒவ்வொரு வார்த்தையும் அக்ஷரம் பிசகாமல் பேசும் திறன் ஆகியவை கேட்போரின் சிந்தையையும் ஹிருதயத்தையும் வசப்படுத்தவல்லவை என்று இராமன் சொல்லின் செல்வன்அனுமனின் பேச்சுத் திறமையை மெச்சுகிறார். 

தமிழ்மொழியை தாய்க்கு ஈடாக பூஜிக்கிறோம். அன்னை அளிக்கும் வார்த்தைகள் உயிருள்ளவை. அவற்றை மரியாதையுடன் சரியாக உச்சரித்து மிருதுவாக உபயோகித்தால் வார்த்தைகள் நம்மோடு அழகாக உட்காரும்; தேவைப்படும்போது சுலபமாக வரும்!  கரடு முரடான உச்சரிப்பு வார்த்தைகளோடு பகையைக் கிளப்பிவிடும், நாம் அழைக்கையில் வராது என்பதை உணர வேண்டும். நா நலம் காப்போம்! 

சென்ற வார கேள்விக்குப் பதில்: சகோதரி நிவேதிதா 

இந்த வார கேள்வி: சுவாமி விவாகனந்தர் உரையாற்றிய உலக மதங்கள் மாநாடு எந்த வருடம் எங்கு நிகழ்ந்தது? 
(விடை  அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT