இளைஞர்மணி

ஸ்டீவ் ஜாப்ஸ் கொடுத்த ஆப்பிள்!

கே.பி. மாரிக்குமார்


உங்களுக்குப் பேரார்வம் இல்லையெனில், உங்கள் இலக்கைவிட்டு வெளியேறிவிடுவீர்கள்.

- ஸ்டீவ் ஜாப்ஸ்

கணினி உலகில் தனக்கும், தனது நிறுவன தயாரிப்பிற்கும் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி, வாழ்ந்து, வரலாறாகி நிற்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஓர் அமெரிக்க தொழில் முனைவோர் என்பது நாம் எல்லாரும் அறிந்ததே. பிப்ரவரி 24, 1955 -ஆம் வருடம் ஸான் பிரான்சிஸ்கோவில் பிறந்து அக்டோபர் 5, 2011 - ஆம் வருடம் தனது 56 வது வயதிலேயே கலிபோர்னியாவில் மரணித்த இந்த கம்ப்யூட்டர் ஜாம்பவான், அவரது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும், தொட்ட உயரங்களும் வளரத் துடிக்கும் ஒவ்வோர் இளைஞருக்கும் ஒரு மிகப் பெரிய பாடம்; உந்து சக்தி.

"இந்த பிரபஞ்சத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்' என்று பிரகடனம் செய்து பல கோடி மனிதர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக நின்று சாதித்துக் காட்டிய இந்த அமெரிக்க தொழில்முனை வோரின் ஆன்மிக ஈடுபாடு பலருக்கும் தெரியாத, ஆச்சரியமான விஷயம். 

"வெற்றியை பணத்தால் மட்டும் அளக்க முடியாது. மனம் விரும்பிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி. அப்படி வாழ முடிந்தவன், பணத்தை சம்பாதிக்க முடியாது என்பது முட்டாள் தனம்' என்று நிரூபித்த ஜாப்ஸ், அவரது 17 ஆவது வயதில் வறுமையின் காரணமாக தனது கல்லூரிப் படிப்பிற்கு பாதியிலேயே முற்றுப் புள்ளி வைத்தவர்.

நண்பர்களின் அறைகளில் தரையில் படுத்தும், வீதிகளில் கிடக்கும் கோகோ பாட்டில்களை சேகரித்து அதன் மூலம் பொருளீட்டியும், ஹரே கிருஷ்ணா கோயிலில் கிடைக்கும் அன்னதானத்திற்காக ஒவ்வொரு ஞாயிறும் ஏழு மைல் தூரம் நடந்ததையும் அடிக்கடி நினைவு கூர்ந்த ஜாப்ஸ், பிடித்ததை விடவும் பிடிக்காத விஷயங்களைப் போய் கல்லூரியில் படிக்க விரும்பாததால், அவர் தனக்குப் பிடித்த கையெழுத்துக் கலை   வகுப்புகளுக்குச் சென்று அதில் நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.

""நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20-வது வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்குப்பின்  4,000 பேரை வேலையில் அமர்த்திய என் நிறுவனம், 30 - வது வயதில் அந்நிறுவனத்திலிருந்து என்னை வெளியேற்றியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களைத் தொடங்கி, "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி'யை என்னால் உருவாக்க முடிந்தது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக "பிக்ஸர்' உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியவுடன், நான் மீண்டும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்''  என்று தனது வரலாற்று சுயசரிதையில் கூறுகிறார் ஜாப்ஸ்.

""உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்'' என்கிற வாசகம் ஜாப்ஸ்க்கு சிறு வயது முதலே மிகவும் பிடித்தமானது. இதை அவர் தொடர்ந்து கடைப்பிடித்ததாகவும், அதனால் தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் "இன்றே நமக்கு இறுதி நாள்'   என்று நினைத்துக் கொண்டு வேலைகளைத் தொடங்கியதாகவும் கூறுகிறார். 

2004 -ஆம் ஆண்டு அவருக்கு கணையத்தில் ஒருவித கொடிய புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டபோது, ""கணையம் என்றால் என்ன என்று கூட அப்போது எனக்குத் தெரியாது'' என்று கூறுகிறார், கணினி அறிவில் உச்சம் தொட்டிருந்த ஜாப்ஸ். ஜாப்ஸின் கணையப் புற்று அவருக்கும் குடும்பத்தாருக்கும் பேரிடியாக இருந்தாலும்,  முன்பு போலவே அதையும் இயல்பாக எடுத்துக்கொண்டு அவர் பயணித்தது வெற்றியாளர்களுக்கே உண்டான தனித்த போர்க்குணம்.

மாற்றங்களும், இழப்புகளும் கசப்பாக இருந்தாலும் கூட, நாம் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் இழக்காத வரை மிகப்பெரிய நன்மையையே ஏற்படுத்தும் என்பது அவருடைய தீர்க்கமான அறிவுரை. அதனால், ""எதை நேசிக்கிறீர்களோ அதை விட்டு விட வேண்டாம்''  என்றும் ""எதை நேசிக்கிறோம் என்று தெரியாவிட்டால் அதைக் கண்டுபிடிக்கிற வரை ஒய்ந்து விட வேண்டாம்''   என்றும், ""அதைக் கண்டு பிடிக்கிற போது அதை இதயம் அறியும், அதன் பிறகு எல்லாமே முன்னேற்றப் பாதையில் முடியும்''  என்றும் திண்ணமாக கூறுகிறார் இந்த சாதனை மனிதர். 

""தோல்விக்குப் பயந்தால் நீங்கள் வெகுதூரம் செல்ல மாட்டீர்கள்; உண்மையான திருப்தியை அடைய ஒரே வழி... சிறந்த வேலை என நீங்கள் நம்பும் வேலையைச் செய்வதாகும்; 
பிரச்னையைச் சரியாக வரையறுத்துவிட்டாலே கிட்டத்தட்ட தீர்வு உங்களிடம் இருக்கும்; எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள். ஒரு விடயத்தைச் சிறப்பாகச் செய்யுங்கள்; புத்தாக்கம் என்பது மாற்றத்தை ஒரு வாய்ப்பாகக் காணும் திறனாகும். 

மாற்றத்தை அச்சுறுத்தலாக காண்பதல்ல; எதையாவது எளிமையாக மாற்றியமைப்பதற்கு, ஏராளமான கடின உழைப்புத் தேவைப்படுகிறது'' என்பதெல்லாம்ஜாப்ஸ் இன்றைய இளைஞர்களுக்காக  சொல்லியிருக்கும் தன்னம்பிக்கைச் சூத்திரங்கள்.

மரணம் நிச்சயமானது; வாழ்க்கை குறுகியது என்பதால் முழுமையான வெற்றிகரமான வாழ்க்கையை வாழ விரும்புபவன் ஒவ்வொரு நாளையும் வீணாக்காமல் இருக்க அவர் அறிவுறுத்துகிறார். அந்தக் குறுகிய வாழ்க்கையை அடுத்தவர்கள் அபிப்பிராயங்களுக்காக வாழாமல் இருக்கும்படியும் இதயபூர்வமாக உள்ளுணர்வு காட்டும் வழியில் தைரியமாக வாழும்படியும் கூறும் ஜாப்ஸ், ""பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'' என்று நமக்கு அறைகூவலிட்டிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT