இளைஞர்மணி

உலகிலேயே அதிவிரைவான மனித கால்குலேட்டர்!

14th Sep 2021 06:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT

 

"எனக்கு கணக்கே வராது' என்று சொல்லும் மாணவர்களைப் பார்த்திருப்பீர்கள். "நான் கணக்கில் புலி' என்று பெருமையுடன் சொல்லிக் கொள்பவர்களையும் பார்த்திருப்பீர்கள். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். "உலகிலேயே அதிவிரைவான மனித கால்குலேட்டர்' என்று அழைக்கப்படுபவர்.

உலகம் தழுவிய அளவில் நடந்த 2020- ஆம் ஆண்டிற்கான போட்டியில் வென்று "இன்டர்நேஷனல் மேத்ஸ் ஒலிம்பியாட் -2020' பட்டமும், தங்கப் பதக்கமும் பெற்றவர்.

பானு பிரகாஷின் கணிதத் திறமை வெளி உலகுக்குத் தெரிய வந்ததும், அவருக்கு பல பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வந்தது. சில அரசியல் கட்சிகள் தங்களுடைய கட்சியில் அவரைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார்கள். ஆனால் இவையெல்லாம் பானு பிரகாஷைக் கவரவில்லை. அவர் பன்னாட்டு நிறுவன வேலைக்குப் போகவில்லை.

ADVERTISEMENT

இதற்கு மாறாக, அவர் "எக்ஸ்பிளோரிங் இன்ஃபினிட்டிஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். மாணவர்களிடம் நிலவி வரும் கணித அச்சத்தைப் போக்குவதும், மக்களிடம் எண்களைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவதையும் குறிக்கோளாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சொன்னால் நம்பமாட்டீர்கள்... இந்த "உலகிலேயே அதிவிரைவான மனித கால்குலேட்டர்' தனது ஆறு வயது வரை கணக்கைப் பொருத்தவரை "சாதாரண' மாணவராகவே இருந்திருக்கிறது. கணக்குப் போடுவதில் அதிகமான திறமை எதுவும் பானு பிரகாஷிடம் இல்லை. ஆனால் அதற்குப் பிறகு தலைகீழாக அவர்
மாறிவிட்டார்.

ஆறு வயதில் ஒரு சாலை விபத்தில் அவருடைய தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. மண்டையோடு உடைந்துவிட்டது. தலையில் 90 தையல்கள் போடப்பட்டன. பானு பிரகாஷ் பள்ளிக்குச் செல்லாமல் ஓராண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருக்க நேர்ந்தது. அதுவே அவரிடம் மாற்றம் ஏற்படக் காரணமாக
இருந்திருக்கிறது.

பானு பிரகாஷை மன அளவில் சோர்ந்து போகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பானு பிரகாஷின் தந்தையிடம் சொல்லியிருக்கிறார்கள்.

பானு பிரகாஷின் தந்தை தனது மகனுக்கு நிறைய புதிர் விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுத்தார். நிறைய கணிதப் புதிர்களும் அதில் இருந்தன. வீட்டில் தங்கியிருந்த அந்த ஓராண்டும் பானு பிரகாஷ் கணிதத்தில் மூழ்கிக் கிடக்க, தூக்கத்திலும் கூட கணிதம் தொடர்பான விஷயங்களே அவர் மூளைக்குள் சுழன்று கொண்டு இருந்திருக்கின்றன.

அதற்குப் பிறகு பானு பிரகாஷ் பள்ளிக்குச்செல்லத் தொடங்கினார். அவருடைய 7- ஆம் வயதில் (2007- இல்) ஆந்திரமாநிலத்தின் மாநில அளவிலான கணக்குப் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றார். அதற்குப் பிறகு பல போட்டிகளிலும் வென்ற பானு பிரகாஷ், 2011- ஆம் ஆண்டு, தேசிய அளவிலான கணிதப்போட்டியில் முதல் பரிசு பெற்றார். 2013- இல் சிங்கப்பூரில் நடந்த சர்வதேச விரைவு கணிதப் போட்டியில் உலக அளவில் வெற்றி பெற்று கணக்கு சாம்பியன் ஆனார். அதற்குப் பிறகு, உலக அளவில் நடந்த பல கணிதப் போட்டிகளில் பானு பிரகாஷ் வெற்றி பெற்றிருக்கிறார்.

தன்னைப் போலவே பிறரும் கணிதத்தில் கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் இருக்கவேண்டும் என்பதே பானு பிரகாஷின் விருப்பம். 2018- ஆம் ஆண்டு "எக்ஸ்பிளோரிங் இன்ஃபினிட்டிஸ்' கல்வி நிறுவனத்தை அதற்காகத் தொடங்கினார்.

காமன்வெல்த் அமைப்பு போன்ற பல சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, 23 நாடுகளில் கணிதம் தொடர்பான கருத்தரங்குகளில் பேசியிருக்கிறார். கணித கல்வி எவ்வாறு ஒட்டுமொத்த குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை அவர் இந்த கருத்தரங்குகளில் விளக்கியிருக்கிறார்.

""கணக்கு என்றாலே முகம் சுளிக்கும்நிலை ஏற்பட கணிதத்தைச் சொல்லிக் கொடுக்கும் நமது கல்விமுறையே காரணம். கணிதத்தை மிகவும் சிக்கலானது என்று மாணவர்கள் நினைப்பதை மாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம். நமது நாட்டில் மூன்றில் இரண்டு பகுதி மாணவர்கள் கணிதம் குறித்த பயத்துடனேயே இருக்கிறார்கள். கணிதத்தை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கற்றுத் தராததே இதற்குக் காரணம்.

கணக்கை விளையாட்டு போல எண்ணும் மனநிலை எல்லாருக்கும் ஏற்பட வேண்டும். அதை ஒரு சுமையாகக் கருதும் எண்ணம் மாற வேண்டும் என்பதற்காகவே எக்ஸ்பிளோரிங் இன்ஃபினிட்டிûஸத் தொடங்கினேன். இதற்காக மாணவர்களின் மத்தியில் நேரிலும், ஆன் லைன் மூலமாகவும் கணித வகுப்புகளை நடத்துகிறேன். நான் நடத்தும் கணித பாட வகுப்புகளில் ஆன்லைன் விளையாட்டுகளும் உண்டு.

கணிதத்தில் ஆர்வமுடையவன் என்கிற முறையில் பிறரின் கணிதப் பயத்தைப் போக்குவதும், கணிதத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதும் என் கடமை என்று நினைக்கிறேன். எனவே நான் கற்றுக் கொடுக்கும் கணித பாடங்களுக்கு எந்த ஓர் இறுகிய பாடத்திட்டத்தையும் நான் வைத்துக் கொள்ளவில்லை. ஆக்கப்பூர்வமான பல வழிமுறைகளின் மூலம் கணிதம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். நான் கணிதத்தைக் கற்றுக் கொடுக்க இசை, வரலாறு என எல்லாவற்றையும் பயன்படுத்துகிறேன்.

ஒவ்வொரு மாணவரும் தனது சொந்த அனுபவத்தின் மூலமாக கணிதத்தைக் கற்றுக் கொள்ளும் வழிமுறையை எனது கணித வகுப்புகளில் கடைப்பிடிக்கிறேன்.

இன்றைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கூட கணிதத்தைக் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 6 வயதிலிருந்து 10 வயது வரை உள்ளவர்களுக்கான பாடத்திட்டம் என்றும் 10 வயதிலிருந்து 16 வயது வரை உள்ளவர்களுக்கான பாடத்திட்டம் என்றும் இரு பிரிவாகப் பிரித்து, கணித வகுப்புகளை நடத்துகிறேன்'' என்கிறார் பானு பிரகாஷ்.

பானு பிரகாஷின் கணிதம் கற்பிக்கும் இந்த முன் முயற்சிக்கு, தெலங்கானா மாநில அரசு ஊக்கமளித்து வருகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பானு பிரகாஷ் தனது கற்பிக்கும்முறையில் கணிதத்தைக் கற்றுக் கொடுக்க தெலங்கானா அரசு அனுமதி அளித்திருக்கிறது. பள்ளிகளில் மட்டுமல்லாமல், பல்வேறு நிறுவனங்களின் உதவியுடனும் பானு பிரகாஷின் கல்விநிறுவனம் தனது பணியைச் செய்து வருகிறது.

Tags : இளைஞர்மணி human calculator
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT