இளைஞர்மணி

சிலம்பம்... சாதனை படைக்கும் இளம் வீரர்கள்!

14th Sep 2021 06:00 AM | - ச.பாலசுந்தரராஜ்

ADVERTISEMENT


தமிழகத்தில் பல கலைகள் இருந்தாலும் சிலம்பக்கலைக்கு என தனிச்சிறப்பு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தங்களை காட்டு விலங்குகளிருந்து காப்பாற்றிக்கொள்ள கம்பை ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த கம்பை கையாண்ட முறையே பின்னர் சிலம்பு விளையாட்டாக மாறியது எனக் கூறுகிறார்கள். இந்த சிலம்பு விளையாட்டு தற்போது தற்காப்பு கலையாக வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆண் மற்றும் பெண் என இருபாலரும்இந்தக் கலையைக் கற்கலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.கோவில் விழா, கல்லூரி மற்றும் பள்ளி விளையாட்டு விழா, ஊர்வலங்கள்உள்ளிட்டவற்றில் சிலம்பாட்டம் தவறாமல் இடம் பெறும்.

சிலம்பு விளையாட்டில் பல உட்பிரிவுகள் உள்ளன. மெய்ப்பாடம், உடற்கட்டுபாடம், மூச்சுப்பாடம், குத்துவரிசை, தட்டுவரிசை, பிடிவரிசை, அடிவரிசை என பல பிரிவுகள் உள்ளன. தற்போது சிலம்பத்தில் சுமார் 50 பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த சிலம்பு விளையாட்டுப் போட்டியில் பயிற்சி பெற்ற விருதுநகரைச் சேர்ந்தவர்கள் தேசிய சிலம்பு விளையாட்டுப் போட்டியில் பல சாதனைகளைப் புரிந்து பதக்கம் மற்றும் சான்றிதழைப் பெற்று வந்துள்ளனர். இது குறித்துவிருதுநகரில் சிலம்பம் பயிற்சி அளித்து வரும் எஸ்.முத்துக்குமார், பி.ஆரீஸ் ஸ்ரீகுமார்ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொ ண்டதாவது:

""நாங்கள் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக விருதுநகரில் 6 வயது முதல் 30 வயது வரை உள்ள ஆண்கள், பெண்களுக்கு சிலம்பு விளையாட்டுப் பயிற்சி அளித்து வருகிறோம். தொடக்கத்தில் வெறும் 6 பேரைக் கொண்டு தொடங்கினோம். தற்போது 110 பேர் எங்களிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள். நாங்கள் சிலம்பு விளையாட்டில் உள்ள பிரிவுகளான குத்துவரிசை,  தெறிகுச்சி, வாழ்வீச்சு உள்ளிட்ட பல பிரிவுகளில் பயிற்சி அளித்து வருகிறோம். தினசரி காலை 6 மணி முதல் 8 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணிவரையிலும் பயிற்சி அளிக்கிறோம்.

ADVERTISEMENT

சிலம்பு விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள், அதற்கான சான்று இருந்தால் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மாநில அளவில் முதலிடம் பெற்றவர்கள் அதற்கான சான்று இருந்தால் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம் என விதிமுறை உள்ளது. இதில் பல உட்பிரிவுகள் உள்ளதாலும், வயது பிரிவு உள்ளதாலும்எந்தப் போட்டியானாலும் அதிகமானோர் கலந்து கொள்ள வாய்பு கிடைக்கிறது.

எங்களிடம் பயிற்சி பெற்றவர்களில் 15 பேர் மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றிருந்ததால், ஆகஸ்ட் 6 - ஆம் தேதி முதல் 8 - ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற தேசியப் போட்டியில் கலந்து கொண்டார்கள்.

மத்திய அரசின் கீழ் உள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கழகம் இந்த போட்டியை நடத்தியது. இது 4- ஆவது சிலம்பு விளையாட்டு தேசியப் போட்டியாகும்.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து சென்னை, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் எதிராளியைத் தாக்குவதுபோல பாவனை செய்ய வேண்டும். அப்போது, கம்புவீச்சின் வேகம், வீசும் முறை உள்ளிட்டவற்றைப் பார்த்து நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்குவார்கள். அதன்படி பதக்கம் வழங்கப்படும். எங்களிடம் பயிற்சி பெற்றவர்களில் தேசிய சிலம்புப் போட்டியில் பங்கேற்று பலர் பதக்கம் பெற்றிருக்கிறார்கள்.

9 வயது பிரிவில் நெடுங்கம்பு, தொடுகம்பு பிரிவில் வி.ஹரிபாலன் தங்கப் பதக்கமும், 11 வயது பிரிவில் சுருள்வாள், நெடுங்கம்பு பிரிவில் எம். இளவளவன் தங்கபதக்கமும், 14 வயது பெண்கள் பிரிவில் வாள்வீச்சு நெடுங்கம்பு பிரிவில் வி.நிதர்சினி தங்கப் பதக்கமும் பெற்றிருக்கின்றனர். அதே எடைபிரிவில் 35 நபர்களுக்கு மேல் இருந்ததால் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

20 வயது பெண்கள் பிரிவில் சுருள்வாள், நெடுங்கம்பு பிரிவில் பி.தீக்ஷிதா தங்கப் பதக்கமும், 16 வயது பிரிவில் சுருள்வாள், நெடுங்கம்பு பிரிவில் எம்.பரணிராஜ் தங்கப் பதக்கமும், 17வயது பிரிவில் வேல்கம்பு, நெடுங்கம்பு பிரிவில் சூரியா தங்கப் பதக்கமும் பெற்றிருக்கின்றனர். இவை தவிர, வெண்கலப் பதக்கம் பெற்றவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.

சிலம்பம் என்பது தற்காப்புக் கலை மற்றும் வீரவிளையாட்டு வகையைச் சேர்ந்தது எனக் கூறலாம். இந்தக் கலையை அனைவரும் பயின்றால் உடல் திடமாவதோடு, மனமும் ஒருமுகப்பட்டு செயல்படும் என்பதில் இருவேறு கருத்து இல்லை'' என அவர்கள் கூறினார்கள்

Tags : Ilaignarmani Silambam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT