இளைஞர்மணி

தடுமாறாதீர்கள்... தடம் மாறாதீர்கள்!

14th Sep 2021 06:00 AM | -சுரேந்தர் ரவி

ADVERTISEMENT

 

இளம் வயது. உலகில் எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் துளிர்விடும் வயது. இளமைப் பருவத்தைக் கடந்தே அனைவரும் வாழ்க்கைக்குள் நுழைய முடிகிறது. அத்தகைய இளமைப் பருவத்தில் நம் செயல்பாடுகள் எந்த மாதிரி உள்ளன என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

பதின்பருவம் என்பது பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து சற்று விடுதலை கிடைக்கும் காலம். இத்தனை ஆண்டுகளாகக் கிடைத்திராத விடுதலையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களிடம் இருப்பது இயல்பு. அந்த விடுதலை பல்வேறு மாற்றங்களை இளைஞர்களுக்குள் கொண்டு வரும்.

அத்தகைய மாற்றங்களுள் ஒன்று, பெற்றோரை வில்லன்களாகப் பார்க்கும் மனப்பான்மை. நாம் என்ன செய்தாலும், அதற்குப் பெற்றோர் தடையாக இருப்பதாக ஒருவித மனோபாவம் இளைஞர்களுக்குத் தோன்றும். அதனால், பெற்றோரை எதிர்க்கும் குணம் பெரும்பாலான பதின்பருவ இளைஞர்களுக்குப் பிறக்கும்.

ADVERTISEMENT

"நாம் செய்வது அனைத்துமே சரி; பெற்றோர் தேவையின்றி நம்மைக் கட்டுப்படுத்துகின்றனர்' என்ற எண்ணத்தால் தவறான பழக்க வழக்கங்கள் அனைத்தும் அழையா விருந்தாளியாக நம்மை வந்தடையும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல், தவறான நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுதல், வாகனத்தை அதிவேகமாக இயக்குதல், ஆபத்தான விஷயங்களை விரும்பிச் செய்தல் உள்ளிட்ட அனைத்திலும் ஈடுபடத் தோன்றும். இவையெல்லாம் நமக்குப் புதிதான விஷயங்கள் என்பதால் அந்த விஷயங்களை நோக்கி நம் மனம் அதிவேகமாக உந்தப்படும்.

இவற்றையெல்லாம் செய்வதற்கான சுதந்திரமும் நமக்கு இருக்கும். ஆனால், பெற்றோர் அதை ஏற்க மறுப்பர். இவற்றையெல்லாம்செய்யக் கூடாது எனக் கட்டுப்படுத்துவர். குடும்பங்களில் பெற்றோருக்கும் பதின்பருவத்தினருக்கும் இடையே பிரச்னை தோன்றுவதற்கு முக்கியக் காரணம் இத்தகைய கட்டுப்படுத்த முயலும் செயல்பாடுகள் தான்.

நம்மை சரியான பாதையில் செலுத்தவே பெற்றோர் விரும்புவர். தேவையற்ற விஷயங்களுக்காக பெற்ற குழந்தைகளை தண்டிக்க வேண்டும் என எந்தப் பெற்றோரும் நினைப்பதில்லை. பெற்றோர் கண்டிப்புடன் இருந்தால் மட்டுமே தடம் மாறாமல் நாம் சரியான திசையில் செல்ல முடியும் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் பதின்பருவத்தை எட்டினாலும், உரிய முடிவெடுக்கும் திறனும் தேவையில்லாதவற்றில் ஈடுபடும் ஆர்வக் கோளாறைக் கட்டுப்படுத்தும் மன ஆற்றலும் நமக்கு இன்னும் வளரவில்லை என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.

பதின்பருவத்தில் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தின் மூலம், நமக்கான வாழ்க்கையை நாமே கட்டமைக்க முடியும். எந்தச் செயலையும் நம்மால் செய்யமுடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட செயலில் ஈடுபடுவதற்கு முன் அந்தச் செயலைச் செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள் அனைத்தையும் குறித்து பதின்பருவத்தினர் தீவிரமாக ஆராய வேண்டும்.

இத்தகைய யோசனையில் ஈடுபடுவதைக் கூட பல இளைஞர்கள் விரும்பமாட்டார்கள். இதன் விளைவுகளை வாழ்க்கையின் பிற்பகுதியை அடைந்த பின்னரே அவர்கள் உணர்வார்கள்.

எனவே நாம் தவறான திசையில் பயணிக்க நேரிட்டால் பெற்றோரே நம்மைச் சரியான பாதைக்கு அழைத்து வருவார்கள்.

அதற்காக அவர்கள் சில கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அதை பதின்பருவத்தினர் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அல்லாமல் பெற்றோர் எப்போதும் நம்மைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர் என அவர்கள் மீது குறை கூறுவதும், கோபித்துக் கொள்வதும் பயனற்றது. அத்தகைய செயல்பாடுகள் நம்மை வீழ்த்துவதற்கு நாமே குழி தோண்டிக் கொள்வதைப் போல ஆகும்.

பெற்றோர் சில விஷயங்களை வலியுறுத்தினால், அவர்கள் ஏன் அதைக் கூறுகிறார்கள் அவர்கள் கூறுவது போல் நடந்தால் என்ன ஆகும் நடக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்பதைப் பதின்பருவத்தினர் நன்கு சிந்திக்க வேண்டும். பெற்றோர் கூறுவதில் தவறு இருந்தால், அதை அவர்களிடம் பொறுமையாக எடுத்துரைக்கலாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.

குறிப்பிட்ட விஷயத்தில் காயப்பட்டு அவதிப்படுவதை விட, காயமடைவதற்கு முன்பே பெற்றோர் சொல் கேட்டு தப்பிக்க இயலும். பெற்றோரை எதிரியைப் போல் பார்க்கும் கண்ணோட்டத்தை பதின்பருவ இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.

அவர்கள் நம்மிடம் நண்பர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் நாம், அவ்வாறு நாமும் நடந்து கொள்கிறோமா என்பதைச் சிந்திக்க வேண்டும். அத்தகைய சிந்தனை மேலோங்கினால் பெற்றோருக்கும் பதின்பருவத்தினருக்கும் இடையேயான உறவு, மகிழ்ச்சியின் ஊற்றாக மாறும்.

Tags : Ilaignarmani stumble
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT