இளைஞர்மணி

இளம் தொழில்முனைவோர்... எப்போதும் கற்க வேண்டும்!

7th Sep 2021 06:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT


"படிப்பதே வேலைக்குப் போவதற்குத்தான்' என்ற நிலை எப்போதோ வந்துவிட்டது. அதிலும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான படிப்பைப் படிப்பவர்கள், படிக்கும்போதே வளாக நேர்காணல்களின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்று, உடனே வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். சொந்தமாகத் தொழில் செய்வதை அவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், படிக்கும் காலத்திலேயே சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் இறங்கி, இப்போது இளம் தொழில்முனைவோராக மிளிர்கிறார் 26 வயது இளைஞரான நிஷாந்த் பிரபு. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த அவர், தற்போது "யாபிடெக்' என்கிற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

உலகமே கணினிமயமாகிவிட்ட இக்காலத்தில் கணினியில்லாமல் ஓரணுவும் அசையாது என்கிற நிலை உருவாகி வருகிறது. அதற்கேற்றவகையில் தனது தொழில் முயற்சிகளைத் தொடர்கிறார் நிஷாந்த் பிரபு. அவரிடம் பேசியதிலிருந்து....

""நான் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஐடி கேம்பஸில் பி.இ. எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் என்ஜினியரிங் படித்தேன். இறுதியாண்டு படிக்கும்போது, என்னுடன் பயிலும் பிற மாணவர்களுக்கு போட்டோ ஷாப் பயிற்சி வகுப்புகளை எடுத்தேன். 5- 6 வகுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொரு வகுப்பிலும் புதிய புதிய மாணவர்கள் பங்கேற்கத் தொடங்கினர். பிற கல்லூரி மாணவர்களும் வந்தனர். அதைப் பார்த்த எனது ஆசிரியர்கள் போட்டோஷாப்பிற்கான பயிற்சிப் பட்டறையாக இதை நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கினர்.

ADVERTISEMENT

அதன் பிறகு முகநூல் போன்றவற்றில் வொர்க்ஷாப்பிற்கான விளம்பரங்களை வெளியிட்டேன். அதற்குப் பிறகு நடத்திய பயிற்சி பட்டறையில் 40- 50 பேர் கலந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் 150 பேர் கலந்து கொண்டனர். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. நமக்குத் தெரிந்ததைப் பிறருக்குக் கற்றுத் தர வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

இதனால், பொறியியல் படிப்பு முடித்தவுடன் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தேன். வேலைக்குப் போக வேண்டும் என்ற வீட்டின் வற்புறுத்தல் அதிகமானது. வேறு வழியில்லாமல் குமாரபாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அது கல்வி தொடர்பான தகவல்களைத் தரும் நிறுவனம் என்பதால், அந்தப் பணியிலும் முழுமையாக ஈடுபட முடிந்தது. அவர்கள் வெளியிட்ட ஒரு சிறு புத்தகத்துக்கான வடிவமைப்பைச் செய்து கொடுத்தேன். என்றாலும் 6 மாதங்களுக்கு மேல் என்னால் அங்கே வேலை செய்ய முடியவில்லை. வேலையை விட்டுவிட்டேன்.

பிறகு சிறிய நிறுவனங்களுக்கு லோகோ வடிவமைத்துக் கொடுப்பது, வெப்சைட் ஏற்படுத்திக் கொடுப்பது என்று சொந்தமாக வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். பெரிய அளவுக்கு வருமானமில்லை என்றாலும் செய்யும் தொழில் பிடித்தமானதாக இருந்தது. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

நான் படித்த கல்லூரியைத் தொடர்பு கொண்டு பயிற்சிப் பட்டறைகளை மீண்டும் நடத்தத் தொடங்கினேன். கல்லூரியில் மட்டுமல்லாமல், வெளியிலும் தனியாக பயிற்சிப் பட்டறைகளை நடத்தினேன்.

நான் ஒருவனே இந்த வேலைகளைச் செய்யாமல், பிறரையும் துணைக்கு வைத்துக் கொண்டு செய்தால் கூடுதலான அளவில் வேலைகளைச் செய்ய முடியுமே என்பதால் 2016 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் "யாபிடெக்' நிறுவனத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனத்தின் மூலமாக, பலவிதமான பயிற்சிப் பணிகளைத் தொடங்கினேன். வெப் சைட் ஏற்படுத்திக் கொடுப்பது, யூ ட்யூப் சேனலை ஏற்படுத்தித் தருவது, ஒரு நிறுவனத்துக்குத் தேவையான மென்பொருளை உருவாக்கிக் கொடுப்பது, ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் மொபைல் போன்களுக்கான மொபைல் ஆப் ஏற்படுத்தித் தருவது, கிராபிக் டிசைன் செய்வது, ஆன்லைன் எஃப்எம்- ஐ உருவாக்கித் தருவது உள்பட பல பணிகளைச் செய்யத் தொடங்கினேன். ஒவ்வொரு பணி செய்யும்போது நான் கற்றுக் கொண்டவை அதிகம்.
 


இதற்கிடையில் கரோனா தொற்று, உலகத்தில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. அதேபோன்று புதிய பல வழிகளையும் திறந்துவிட்டது.

எல்லாமே ஆன்லைன் மூலமாக நடைபெறுவது அதிகரித்துவிட்டது. நடைபாதை காய்கறிக் கடை முதல் பெரிய வணிகநிறுவனங்கள் வரை பணப்பரிமாற்றம் டிஜிட்டல் முறையில் நடைபெறத் தொடங்கியது.

இது எங்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியது.

சிறிய, பெரிய நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி பில்லிங் மற்றும் இன்வாய்ஸ் மென்பொருள், பெர்சனல் பைனான்ஸ் மென்பொருள், ஸ்கூல், காலேஜ் மேனேஜ்மெண்ட் மென்பொருள், ஆடை, அலங்கார நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள், நிறைய எஸ்எம்எஸ்களை அனுப்பத் தேவையான பல்க் எஸ்எம்எஸ் மென்பொருள் என பல மென்பொருள்களை உருவாக்கிக் கொடுக்கிறோம். இந்த மென்பொருள்களை ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப தயாரித்துத் தருகிறோம்.

என்றாலும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் அதிகமாக இருப்பதால், கரோனா காலத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கினேன். இதில் 460 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். வெளிநாட்டில் உள்ளவர்களும் இதில் பங்கேற்றனர். இதன்மூலம் கிடைத்த விளம்பரத்தால், எனக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெப்டிசைனிங் செய்வதற்கான ஆர்டர்கள் கிடைத்தன.

இப்போது முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றில் பலரும் தங்களுடைய கருத்தைப் பதிவிடுவதைப் போல, எல்லாரும் பயன்படுத்தக் கூடிய வகையில் எம்எஸ்ஜிபாண்டா.காம் என்ற பெயரில் ஓர் இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறோம். இதில் யார் வேண்டுமானாலும், தங்களுடைய கதை, கட்டுரை, கவிதை, சிரிப்பு என தங்களுடைய படைப்புகளைப் பதிவு செய்யலாம்.

பொறியியல் படித்தவுடன் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தால், பிறருக்குப் பயன்படக் கூடிய இவ்வளவு பணிகளை நான் செய்திருக்க முடியாது. என்னைப் போல சுயமாக தொழில் தொடங்கி நடத்த விரும்புபவர்கள், தொடக்கத்தில் ஏற்படக் கூடிய சிரமங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொருநாளும் புதியனவற்றைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.

Tags : Ilaignarmani Young Entrepreneurs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT