இளைஞர்மணி

பயன்படுத்திக் கொள்ளலாம் ... மன அழுத்தத்தையும்!

19th Oct 2021 06:00 AM | - வி.குமாரமுருகன்

ADVERTISEMENT


சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி எல்லோராலும் உச்சரிக்கப்படும் வார்த்தையாக ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தை மாறிவிட்டது. 

மன அழுத்தம் ஏற்படக் கூடிய சூழலில் அந்த மன அழுத்தத்தை விட்டு வெளியே வருவதற்காக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.  அந்த மன அழுத்தத்தை எவ்வாறு மாற்றி அமைப்பது   என்று யோசித்தால் மன அழுத்தம் கூட புதிதாக பரிணமிக்கத் தொடங்கும். 

பொதுவாக சவாலான சூழலை எதிர்கொள்ளும் வகையில் மனிதனின் ஸ்ட்ரெஸ் ரெஸ்பான்ஸ் செயல்பாடுகள் இருக்கும். 

ஏற்கெனவே அத்தகைய திறன்கள் படைத்தவன் தான் மனிதன். இத்தகைய ஸ்ட்ரெஸ் எதிர் செயல்பாடுகள் தான் நமக்கு ஏற்படும் தடைகளைத் தாண்டி செயல்படுவதற்கான புதுப்புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். 

ADVERTISEMENT

சிறந்த அறிவு உடையவர்களால் மன அழுத்தத்தை விட்டு எளிதில் வெளியேற முடியும் என்றாலும் கூட, மிக விரைவாக மன அழுத்தத்தை விட்டு வெளியேற நினைப்பது தவறு என்கின்றன ஆய்வு முடிவுகள். 

ஒரு சில வித்தியாசமான ஆய்வு முடிவுகளும் ஸ்ட்ரெஸ் தொடர்பாக வெளிவந்துள்ளன. மன அழுத்தத்துடன் கணிதத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் , மன அழுத்தம் இல்லாத மாணவர்கள் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதாகவும் ஓர் இதழ் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம்,  மன அழுத்தம் உள்ள மாணவர்கள் தங்களின் மன அழுத்தத்தை கணிதத் தேர்வை எழுதுவதில் செலவழித்து வெற்றி பெற்றுள்ளதாக  அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

பல காலங்களாக மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்கள்,  மன நலம் மற்றும் உடல் 
நலத்தில் பாதிப்பு அடைகின்றனர் என்றும், மற்றவர்கள் மன அழுத்தத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் எனவும் உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இயற்கையாக மனிதனில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் அனைத்துமே சிறந்த வளங்கள் தான் எனவும், அவை வெற்றி என்ற இலக்கை நோக்கி நம்மைப் பயணிக்கத் தூண்டுகின்றன என்றும்  உளவியல் நிபுணர்கள் 
தெரிவிக்கின்றனர். 

மன அழுத்தம்   உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மனிதனை வேகமாகச் செயல்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். உதாரணமாக, திடீரென்று தீப்பற்றிக் கொள்ளும் சூழலில் அதில்  சிக்கிக்கொண்ட ஒருவருக்கு ஏற்படும் மனஅழுத்தம், அவரை மிக விரைவாக அதிலிருந்து தப்பிப்பதற்கான உந்து சக்தியை ஏற்படுத்தும் என்கின்றன ஆய்வுகள்.  

மன அழுத்தத்தை கருவியாகப் பயன்படுத்துபவர்கள் வெற்றி கொள்ள முடியும். அதை பாதிப்பாக கருதுபவர்கள் இழப்பைச் சந்திக்க நேரிடும். 

மாணவர்களைப் பொருத்தவரை தேர்வு காலம் என்பது மிகவும் மன அழுத்தம் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதுவும் பொதுத் தேர்வுகள் வரும்போது மாணவர்கள் அடையும் மன அழுத்தத்திற்கு அளவே இல்லை எனலாம். 

இத்தகைய காலகட்டத்தில் பலநூறு கல்லூரி மாணவர்களை ஒரு நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன் ஆய்வின் மூலம் மன அழுத்தத்துடன் மாணவர்கள் இருக்கிறார்களா? அல்லது இல்லையா? என்பதை கண்டறிந்தது. அந்த மாணவர்களில் தேர்வு குறித்து மன அழுத்தம் இல்லாதவர்களை ஒரு குழுவாகவும், தேர்வு குறித்து மன அழுத்தம் உள்ளவர்களை ஒரு குழுவாகவும் பிரித்து ஆய்வினை மேற்கொண்டது.   

அதன் பின் தொடர்ச்சியாக அந்த மாணவர்களுக்கு கணிதத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்தபோது மன அழுத்தத்துடன் சென்றவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததும், மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதியவர்கள் அவர்களை விட குறைவான மதிப்பெண்களைப் பெற்று இருந்ததும் தெரிய வந்தது. இதன் மூலம் மன அழுத்தத்தை சரியான வழியில் திசை திருப்பி பயன்படுத்தியவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற முடிந்தது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

நேர்முகத் தேர்விற்கு செல்லும் ஒருவருக்கு நேர்முகத் தேர்வு குறித்த பயம் காரணமாக மன அழுத்தம் ஏற்படக்கூடும். இந்த மன அழுத்தம் தான் நேர்காணலை எதிர்கொள்ளத் தேவையான திறன்களை வெளிப்படுத்த உதவிகரமாக இருக்கும். அத்துடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு தேவையான சரியான வழிகாட்டுதல்களையும் யோசிப்பதற்கு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கும்.  

மேலும், எந்த விதமான கேள்விகளை நேர்காணல் நடத்துபவர் கேட்கக்கூடும் என்பதை யோசிக்க வைக்கும். அதற்கான விடை தெரியா விட்டால் ஏற்படும் மன அழுத்தம் அந்த விடையைத் தேடுவதற்கான வழியை உருவாக்கி கொடுக்கும். இப்படி மன அழுத்தம் என்பது மாற்றுச் சிந்தனையை உருவாக்கி புதிய புதிய வழிகளை அமைத்து புதிய பாதையில் பயணிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் என்றால் மிகையில்லை.

அதேசமயம் மன அழுத்தம் ஏற்படும் நிலையில் அதைவிட்டு வெளியே வருவதற்கான வளங்கள், திறன்கள் நம்மிடம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு மன அழுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் 
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் மீது வீசப்படும் கற்களைக் கண்டு பயந்து ஓடாமல் அவற்றை பயன்படுத்தி வீடு கட்டிக் கொள்ள முடியும் என்று ஒருவர் நினைத்தால்,  அவர் மன அழுத்தத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர் என்று சொல்லலாம்.   மன அழுத்தத்தை  எதிரியாக நினைக்காமல் அதை ஒரு கருவியாகக் கருதி அதை சரியான வழியில் பயன்படுத்தி கொண்டால் புயல் கூட புன்னகை பூக்கும்.

Tags : Ilaignarmani Take advantage of
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT