இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 19: ஆழாக்கு பால் போல ஆளாக்கு!

19th Oct 2021 06:00 AM | -ஆர். நடராஜ்

ADVERTISEMENT


உலக அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்ஸில், டென்னிஸ், ஹாக்கி போன்றவற்றில் சாதனை படைத்து நாடு திரும்புபவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதுவும் அவர்களது சொந்த மாநிலத்திற்கு வரும்போது மக்கள் திரண்டு வரவேற்று ஊர்வலமாக நகர் வலம் வருவதைப் பார்க்கிறோம். ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த லவ்லினா ஆகியோருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாதனையாளர்கள் போற்றப்பட வேண்டும். இது ஒரு நல்ல மரபாக வளர்ந்திருக்கிறது; மெச்சக்தக்கது. ஆனால் அதே மாதிரியான அங்கீகாரம் மற்ற துறை சாதனையாளர்களுக்கும் அளிக்க வேண்டும். அதே வேளையில் வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெற்ற களிப்பில் வெற்றியின் பின்னால் அடித்தளம் வகுத்த உழைப்புக் கட்டமைப்புகளின் பின்புலங்களை மறக்கலாகாது. மேலும் உச்சத்தை எட்ட எல்லாவிதமான ஆதரவும் அளிக்கப்பட்டால்தான் சாதனையாளர்கள் உருவாவார்கள். தொடர்ந்து எல்லாத்துறைகளும் விருத்தி பெறுவதற்கு ஒன்றுபட்ட செயலாக்கம் தேவை.
இந்தியா தொன்மையான நாடு.

எவ்வளவோ மகத்தான சாதனை புரிந்தவர்கள் வாழ்ந்து மறைந்த நன்னாடு. அதனாலேயோ என்னவோ நாம்சாதனைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நல்ல மதிப்பெண் எடுத்தாலும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து மற்றவர் அளவில் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள் இருக்கிறார்கள். தனக்கு மட்டும் கிடைத்து மற்றவர்களுக்கு கிடைக்காதது கிடைத்தால் இன்னும் ஆனந்தம்! இழவு வீட்டிலும் பிணமாக வேண்டும் என்றுஆர்ப்பரிக்கும் அற்ப மனிதர்கள். "எல்லாம் எனக்கே எனக்கே' என்றுஅபகரிக்கும் மன நிலையில் உள்ளவர்களை என்ன சொல்வது!

விடா முயற்சி என்பது ஒரு தொடர் ஓட்டம் அல்ல; அது பல சிறு முயற்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக பின்னப்பட்டவை. ஒரு மாளிகை எழுப்ப முதலில் அடிக்கல் நாட்டுவது போல் எந்த ஒரு சாதனைக்கும் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். "எண்ணித் துணிக கர்மம்' என்பாரேவள்ளுவர் அது போல!

ADVERTISEMENT

நமக்குப் பிடித்தமானவற்றையேவாழ்க்கையில் வேலையாக எடுத்துக் கொண்டால் அதைவிட நிம்மதியான நிலை வேறொன்றுமில்லை. ஒவ்வொருவருக்கும் இது அமைவது அவரது மனநிலையைப் பொருத்தது. பிடித்ததை முழுநேரப் பணியாக எடுப்பது அல்லதுகிடைத்ததைப் பிடித்ததாக மாற்றி முழுவீச்சுடன் செயல்படுவது என்ற அணுகுமுறை சாதனைகளுக்கு தளம் வகுக்கிறது.

பல வகைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. அதில் கணிதத்திற்கு கொடுப்பதில்லை. அதற்கு ஈடான விருது "ஃபீல்ட்ஸ் மெடல்', கணிதவியலுக்கு அளிக்கப்படுகிறது. 1924 - ஆம் வருடம் சர்வதேச கணித நிபுணர்கள் கூட்டமைப்பு கனடா நாட்டின் கணித நிபுணர் ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் தலைமையில் நடந்த மாநாட்டில் கணிதத்தில் சாதனை படைக்கும் நாற்பது வயதுக்கு உட்பட்ட இளம்விஞ்ஞானிகளுக்கு விருது வழங்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. பேராசிரியர் ஃபீல்ட்ஸ் பதக்கம் வடிவமைத்து அதற்கான நிதி ஆதாரத்தையும் அளித்தார். அவரது பெயரிலேயே இந்த பரிசு 1936- ஆம் வருடத்திலிருந்துவழங்கப்படுகிறது. இதுவரை 60 கணிதஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்கள் இந்த அரிய விருதைப் பெற்றிருக்கின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் மஞ்சுள் பார்கவா என்ற இளம் கணித நிபுணருக்கு 2014 - ஆம் வருடம் இவ்விருது வழங்கப்பட்டது. இளம் வயதிலிருந்தேகணிதத்தில் அதிக ஈடுபாடோடு படித்ததற்கு கணித ஆசிரியரான இவரது அன்னை மீரா பார்கவா பின்புலமாக இருந்திருக்கிறார். பிரசித்தி பெற்ற ஹார்வர்ட்,பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் படித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு கணித உலகில் முத்திரை பதித்துள்ளார். இந்திய அரசு 2015 - ஆம் வருடம் பத்ம பூஷண் பட்டம் கொடுத்து கௌரவித்தது.

எவ்வளவுதான் மற்றவர்கள் நமக்கு பக்க பலமாக இருந்தாலும், முயற்சி எடுக்க வேண்டியது நமது கையில்தான் உள்ளது. சரியான நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பினை திறமையோடு கையாண்டால் உயரிய நோக்கங்கள் நிறைவேறும். இளம் விஞ்ஞானி பார்கவாதனக்கு அனுக்கிரகமான திறன்களை அர்ப்பணிப்போடு செயலாக்கியதால் கணித உலகிற்கும் நாட்டிற்கும்நற்பெயரை ஈட்டித் தர முடிந்தது.

பண்டைக் காலத்திலிருந்து கணிதத்தில் பல வல்லுநர்களை நமது நாடு ஈன்றெடுத்துள்ளது. ஆரியபட்டா, பிரம்மகுப்தா, பாஸ்கரா, ஹேமசந்திரா, தற்காலத்தில் ராமானுஜம், சத்யேந்திர போஸ், சி. ஆர். ராவ், மெஹலனோபிஸ், சகுந்தலா தேவி. அந்த வரிசையில் பார்கவா இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

"ஒவ்வொரு மனிதனுக்கும் திடீரென சவால்கள் வரும். அதனைத் துணிவோடு வெள்ளப்போக்கோடு எதிர்கொண்டுபயணித்தால் பிரம்மாண்ட சாதனைக் கதவுகள் திறக்கும்' என்கிறார் ஷேக்ஸ்பியர். அத்தகைய சாதனையாளர் சந்திர
மண்டலத்தில் கால் பதித்த நீல்ஆர்ம்ஸ்ட்ராங்.

வானத்தில் ஏறி சந்திரமண்டல
வாசலைத் தொடலாமா?

என்ற கேள்விக்கு, சந்திர மண்டலப்பயணத்தின் வெற்றியை மையமாக வைத்து,

ஞானம் பிறந்து வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு

என்ற கவிதை நயத்தோடு பதில் கொடுக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

ஜுலை 20, 1969 - ஆம் வருடம்மனிதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால் பதித்தான். அமரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி 1962 - ஆம் வருடம், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள்அமெரிக்க விண்வெளி கலம் சந்திரமண்டலத்தில் தரை இறங்க வேண்டும் என்ற கெடு விதித்தார். அதற்கான எல்லா ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது மட்டுமல்ல, தேவையான எல்லா நிதி ஆதாரங்களையும் மக்களவையில்தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார்.

அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிற்கும், கம்யூனிஸ்ட் நாடான ரஷ்ய நாட்டிற்கும் விண் வெளி ஆராய்ச்சியில் யார் முந்துவது என்ற போட்டி இருந்தது. விஞ்ஞான ஆளுமையைத் தாண்டிஇராணுவ பலத்தை நிரூபிக்க இரு நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சியை விரிவு படுத்தினர். அமெரிக்கா அப்பல்லோ 11 விண்வெளிகலத்தை சந்திரமண்டலபயணத்திற்கு, நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் அல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியது.

வெற்றிகரமாக சுமார் 103 மணிநேர விண்வெளிப்பயணத்திற்கு பிறகு "லூனார் மாட்யூல்' நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் அல்ட்ரினோடு தரை இறங்கியது. லூனார் மாட்யூலிலிருந்து யார் முதலில் இறங்குவதுஎன்பது பற்றி ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. திட்டமிட்டபடி அல்ட்ரின்முதலில் இறங்க வேண்டும்; அதற்கு பிறகு ஆர்ம்ஸ்ட்ராங். அல்ட்ரினுக்கு என்ன தயக்கமோ அல்லது சந்திர பிரம்மாண்டத்தைப் பார்த்த பிரமிப்போ தெரியவில்லை, அவர் இறங்குவதற்கு தாமதித்தார். உடன் இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்தயக்கம் காட்டாமல் சந்திர மண்டலத்தில் முதல் கால் பதித்து சரித்திர புகழ் பெற்றார். அதற்கு பிறகு அல்ட்ரின் சந்திரமண்டலத்தில் இறங்கினாலும் முதலில் கால் பதித்த சாதனையை ஆர்ம்ஸ்ட்ராங் தட்டிச் சென்றார்! ஒரு கணத்தில் எடுக்க வேண்டிய முடிவை கரணம் தப்பாது எடுத்தார். வெற்றி கண்டார்! "துணிந்தபின்எண்ணுவதென்பது இழுக்கு' என்பதை நினைவில் கொள்ளாமல் எண்ணியதால் அரிய வாய்ப்பை இழந்தார் அல்ட்ரின்!

இதைத்தான் மேனாள் அமெரிக்கஜனாதிபதி பெஞ்சமின் ப்ராங்ளின் எடுத்த செயலை காலம் தாழ்த்தாது முடிப்பதை ஒரு சாசனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

இன்னொரு சமீபத்திய இளம் சாதனையாளர் கிரிஷ் மாத்ருபூதம். மாத்ருபூதம், தாயுமானவரான திருத்தகிரி அதாவது திருச்சிராப்பள்ளி நகரில் கோலோச்சும் சிவபெருமானைக் குறிக்கும். ஸ்தலபுராணபடி வைசிய குலத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ரத்னாவதியின் பேறுகாலத்தில் காவேரியில் வெள்ளம் காரணமாக அவளது தாய் வர இயலவில்லை, சிவபெருமான் தாயாக அவதரித்துரத்னாவதிக்கு குழந்தை பெற உதவினார் என்றும் அதனால் அவருக்கு தாயுமானவர், சமஸ்கிருதத்தில் மாத்ருபூதம் என்ற பெயர். தீஷிதரின் அழகான கிருதி மாத்ருபூத சிவனைப் போற்றி உள்ளது.

உன்னதமான மாத்ருபூதம் என்ற பெயரை தாங்கிய கிரிஷ் அற்புதமான முறையில் தனது நிறுவனத்தை மேல் நோக்கி எடுத்து சென்றுள்ளார். வர்த்தகர்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு தயாரித்த மென்பொருள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறுகியகாலத்தில் பன்மடங்கு வணிகச் சந்தையில் உயர்ந்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் கிரிஷ் தன்னோடு பணி செய்யும் பணியாளர்களையும் நிறுவனத்தின்பங்குதாரர்களாக்கி லாபத்தில் அவர்களுக்கும் பங்கு கொடுத்துள்ளார்.

சந்தையில் பங்கு விலை உயர்ந்ததில் வேலை செய்பவர் எல்லாரும் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகியுள்ளார்கள்!

அமெரிக்க பங்குச் சந்தை "நாஸ்டாக்கில்' மாத்ருபூதத்தின் நிறுவன பங்கு சேர்க்கப்பட்டநாளிலிருந்தே உயரத் தொடங்கியது. ப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பலத்தைக் காட்டுகிறது. சமுதாயப் பணியாக கால்பந்து போட்டியில் உலக தரமான வீரர்களை உருவாக்க ப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனம் சென்னை கால்பந்து கிளப்பை தத்தெடுத்து முயற்சி எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

எல்லா வெற்றிகளும் சாதாரணமாக வருவதில்லை. பல வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து தான் சாதனைகள் தோன்றுகின்றன.

மக்கள் ஜனாதிபதி என்று போற்றப்படும் அப்துல் கலாம், விண்வெளி ஆராய்ச்சியில் 1979 - ஆம் வருடம் செயற்கைகோள் தயாரித்து விண்வெளியில் செலுத்தும் எஸ் எல் வி - 3 திட்டக் குழுவிற்குத் தலைமை வகித்தார். விண்வெளியில் செலுத்தும் நாள் வந்தது. மேல் நோக்கிச் சென்ற செயற்கை கோள் இரண்டாவது கட்டத்தில் செயலிழந்து கடலில் விழுந்தது. எல்லாருக்கும் மிகப்பெரிய ஏமாற்றம். ஆனால் விண்வெளி ஆராய்ச்சி தலைவர் சதீஷ் தவான் தோல்விக்குப் பொறுப்பை தான் ஏற்று டாக்டர் கலாம் மற்றும் திட்ட பொறியாளர்களுக்கு ஊக்கம் அளித்தார். அடுத்த ஆண்டிலேயே வெற்றிகரமாக ரோஹிணி செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தனர்.
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்;

ஆனால் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை வீண் போவதில்லை.

ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் ஒரு பொக்கிஷம். இக்காலத்து பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியதொன்று. "எனது மகனுக்கு வாழ்க்கை மேடு, பள்ளங்கள் நிறைந்தது என்பதை உணர்த்துங்கள். தோல்வியைத் துவளாது தழுவ அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்' என்று எவ்வாறு ஆசிரியர் இரண்டாவது பெற்றோராக இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதை தெளிவுபட குறிப்பிட்டுள்ளார்.
"சோஷியல் பாரண்டிங்' என்ற வகையில் சமுதாயத்தில் எல்லாரும் இளைஞர்களை நல்வழிப்படுத்த முனைவார்கள். இத்தகைய சமுதாய வளர்ப்பு ஒரு பாதுகாப்பு வளையமாக இருந்தது. ஆனால் இப்போதோ பிரபல நடிகர் மகன் போதைப் பொருள் உட்கொள்ளும் கும்பலோடு சிக்குகின்றான். ஆனால்
அவனுக்கு வக்காலத்து வாங்க பலர் முனைகின்றனர்! இன்னொரு நடிகரின் மகன் சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் பெறுகிறான். அதைப் பாராட்ட யாருமில்லை!

"ஆழாக்குப் பாலை சுண்ட காய்ச்சி, பின்பு தயிராக்கி, அதைக் கடைந்து வெண்ணையாக்கி, அதை உருக்கினால் நெய்யாய் திரண்டு வருவது போல, ஒருவரை புடம் போட்ட தங்கம் போல் ஆளாக்க வேண்டும்' என்கிறார் வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம்!

ஆழாக்கு பால் போல இளையவர்களை ஆளாக்குவோம்.

சென்ற வார கேள்விக்குப் பதில்: சோழ மன்னன் கரிகாலன் திருச்சிரா பள்ளியில் காவிரிக்கு குறுக்கே கட்டிய கல்லணை உலகின் பழமையான நான்கு அணைகளில் ஒன்று.

இந்த வார கேள்வி: எந்தெந்த பிரிவுகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

Tags : Ilaignarmani Make beauty like milk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT