இளைஞர்மணி

நல்ல பழக்க, வழக்கம்... நல்லுறவு!

19th Oct 2021 06:00 AM | -சுரேந்தர் ரவி 

ADVERTISEMENT


மனிதன் ஒரு சமூக விலங்கு. தனித்திருப்பதும் இயங்குவதும் நமக்கு சாத்தியமில்லாத ஒன்று. அன்றாடம் ஏதாவதொரு விஷயத்துக்காக மற்றவரைச் சார்ந்திருக்கும் சூழலிலேயே நாம் இருக்கிறோம். இத்தகைய நிலையில், மற்றவர்களுடன் நடந்து கொள்ளும் விதத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

நல்ல பழக்க வழக்கங்களே மற்றவர்களுடனான நமது உறவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த பழக்க வழக்கங்கள் பல்வேறு விதங்களில் நமக்குப் பலன் தருபவையாக இருக்கின்றன. அந்த பழக்க வழக்கங்களே நம்முடைய அடையாளமாகவும் இருக்கின்றன. 

வீட்டிலோ, கல்லூரியிலோ, பணியிடத்திலோ எந்த இடத்தில் இருந்தாலும் முறையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது மற்றவர்களிடம் நம் மீதான ஈடுபாட்டை இன்னும் அதிகரிக்கும். மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதேபோல் நாமும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். 

என்றும் நேர்மறைச் சிந்தனையாளராக இருங்கள். சக பணியாளர்களையோ தோழர்களையோ ஊக்குவிப்பவராக இருங்கள். மற்றவர்களுக்குத் தகுந்த நேரத்தில் உதவி செய்பவராகவும் திகழுங்கள். அதே நேரத்தில் மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு மரியாதை கொடுங்கள்.  

ADVERTISEMENT

பேசும்போது கவனமாகப் பேசுங்கள். சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்துப் பேசுங்கள். வாயில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளை எந்நேரத்திலும் அழிக்க முடியாது. எனவே, நன்கு சிந்தித்து இந்த இடத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று முடிவெடுத்துப் பேசுங்கள். 

பேசும்போது உயர்தொனியில் பேசுவதைத் தவிர்க்கலாம். அது மற்றவர்களை நம்மிடம் நெருங்கிப் பழகவிடாது. பொறுமையாக இனிமையாகப் பேசுவதைக் கடைப்பிடியுங்கள். அதே வேளையில், நிறைய பேசுவதை விட மற்றவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேளுங்கள். அதில் இருந்து நமக்குப் பாடம் கிடைக்கும். நாம் எந்தச் சூழலில் எப்படிப் பேச வேண்டும் என்பதை மற்றவர்களின் பேச்சில் இருந்தே கற்றுக் கொள்ள முடியும். 

மற்றவர்களுடன் பேசும்போது (அது யாராக இருந்தாலும்) மரியாதையுடனேயே பேசுங்கள். மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவதை அறவே தவிர்த்துவிடுங்கள். எதிர்மறையாகவும் பேச வேண்டாம். அது உங்கள் நட்பு வட்டத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதையும் நிறுத்திவிடுங்கள். 

எத்தகைய இடத்திலும் கேலி, கிண்டலுக்காகக் கூட மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும்படி பேச வேண்டாம். பெற்றோர் உள்பட அனைத்து மூத்தோர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களது வாழ்க்கையில் இருந்து நமக்கு அதிக பாடங்கள் கிடைக்கும். பெற்றோர்கள் குறித்து மற்றவர்களிடம் ஒருபோதும் குறை கூறாதீர்கள். குடும்ப விஷயங்களை நெருங்கிய நட்பு வட்டாரத்தைத் தவிர, பொதுவெளியில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். 

சிறு விஷயத்துக்குக் கூட நன்றி கூறக் கற்றுக் கொள்ளுங்கள். நமக்கான சிறு சிறு வேலையை யார் செய்தாலும், அவர்களுக்கு நன்றி கூறுங்கள். தவறேதுமில்லை. அவர்களுக்கு நன்றி கூறுவதால், நம்முடைய மரியாதைக்கு எந்தவிதக் குறைபாடும் ஏற்பட்டுவிடாது. மற்றவர்கள் உங்களை எளிதில் நெருங்கும்படி நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் குறிப்பிட்ட கருத்துகளைக் கூறுவதற்கு யாருக்கும் எந்தவிதத் தயக்கமும் ஏற்படக் கூடாது. அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். 

தரங்கெட்ட சொற்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். அது மற்றவர்கள் நம் மீது வைத்துள்ள மரியாதையைப் பெருமளவில் குறைத்துவிடும். நம்மை சிறந்த பண்பாளராகவும் காட்டாது. 

மற்றவர்களுடனான உறவை சிறப்புடன் பேணுவதில் பழக்க வழக்கங்களுக்குத் தனிச்சிறப்பு உள்ளது. அவற்றைச் சிறப்பாகக் கடைப்பிடித்து நல்லுறவையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்துவோம். 

Tags : Ilaignarmani Good habits
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT