இளைஞர்மணி

சேவைக்கு கிடைத்த விருது!

19th Oct 2021 06:00 AM | - தி. இன்பராஜ்

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் செயல்பாட்டில் உள்ள நாட்டுநலப்பணித் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 10 திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்களை கண்டறிந்து அவர்களைக் கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கிவருகிறது.

நாட்டில் உள்ள சிறந்த 10 நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகளில் 2019-2020 -ஆம் ஆண்டுக்கான விருது பெற்றோர் பட்டியலில் இடம்பெற்று தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றுள்ளார் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவரான பேராசிரியர் ஆ. தேவராஜ். தில்லியில் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் இந்த விருதை வழங்கியிருக்கிறார். இது குறித்து பேராசிரியர் ஆ. தேவராஜ் நம்மோடு பகிர்ந்துகொண்டதாவது:

""பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் சேவை மனப்பான்மை மற்றும் தலைமைப்பண்பைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாட்டில் மொத்தம் 40 ஆயிரம் நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் உள்ளன.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள 48 பல்கலைக்கழகங்களில் 5,405 நாட்டுநலப்பணித் திட்ட அலகுகள் உள்ளன. இதில், சிறப்பாக பணியாற்றியதற்காக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட 54 ஆவது அணி எண் 2019-20 ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. அந்த அணியின் திட்ட அலுவலரான நான் சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட அலுவலராக தேர்வு செய்யப்பட்டேன்.

1963 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களில் இதுவரை என்னோடு சேர்த்து 5 பேர் மட்டுமே குடியரசுத் தலைவர் விருது பெற்றுள்ளோம்.

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் எங்களது அணி செய்த சேவைக்கு கிடைத்த விருதாகவே குடியரசுத் தலைவர் விருதைக் கருதுகிறேன்.

எங்களது நாட்டு நலப்பணித் திட்ட அணி மூலம் இதுவரை 2 ஆயிரம் யூனிட் ரத்ததானம் செய்துள்ளோம். கேரளத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது அங்கு பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களைத் திரட்டி அனுப்பினோம். தூத்துக்குடி மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளைத் தத்தெடுத்து அங்கு மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம்.

குறிப்பாக, கோவங்காடு என்ற கிராமத்தைத் தத்தெடுத்து அங்குள்ள ஆற்றங்கரைப் பகுதியில் சூழ்ந்திருந்த அமலைச் செடிகளை அகற்றி அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தோம். சில்வர்புரம் என்ற பகுதியைத் தத்தெடுத்து அங்கு மாற்றுத்திறனாளிகள் பலருக்கு வீடு கட்டிக் கொடுக்க உறுதுணையாக இருந்தோம்.

மஞ்சள்நீர்காயல் கிராமத்தில் குப்பை இல்லாத கிராமம் என்ற திட்டத்தின் கீழ் திருநங்கைகள் உதவியோடு துப்புரவுப் பணியில் ஈடுபட்டோம்.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களைக் குறித்து கிராமப்புற மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்தது என எண்ணற்ற பணிகளை நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் செயல்படுத்தி உள்ளோம். இதுவரை 700 மாணவர்களைத் தன்னார்வலர்களாக உருவாக்கி உள்ளோம். இந்த விருது என்பது முழுக்க முழுக்க எங்கள் சேவைக்கு கிடைத்த விருது மட்டுமே.

தொடர்ந்து எங்களது சேவைப் பணி தொடரும். நாட்டு நலப்பணித் திட்டம் மட்டுமின்றி மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு பணிகளை கல்லூரி நிர்வாகத்தின் உதவியோடு தொடர்ந்து செய்து வருகிறோம். அந்த பணி எப்போதும் தொடரும்'' என்றார்.

Tags : Ilaignarmani Award for service!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT