இளைஞர்மணி

சமூக ஊடகங்கள்... கல்வி!

12th Oct 2021 06:00 AM |   வி. குமாரமுருகன் 

ADVERTISEMENT

 

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . சமூக ஊடகத்தினைப் பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற அளவிற்கு அதனுடைய வளர்ச்சி அபரிமிதமாக உயர்ந்து வருகிறது.

லட்சக்கணக்கான மக்களை எளிதில் சென்றடையக் கூடிய இத்தகைய சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கற்பித்தலும் தற்போது நடைபெற்று வருகிறது. அதுவும் கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் வீடுகளில் இருந்தே கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்த காலகட்டத்தில் மாணவர்களின் கல்விக்கு கை கொடுப்பதில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது இத்தகைய சமூக ஊடகங்கள். 

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே இவை ஒரு பாலமாக மாறிவிட்டன. புதிய கற்றல் முறைகளையும், கற்றல் அனுபவங்களையும் இத்தகைய மின் கற்றல் முறை இந்த சமூகத்திற்கு வழங்கி விட்டது. 

ADVERTISEMENT

முகநூல் 

முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் இன்றைய கற்றல் முறைக்கு உதவியாக உள்ளது. குறிப்பிட்ட வகுப்புக்கு என்று முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் வீட்டுப் பாடங்களையும் அசைன்மென்ட்களையும் போஸ்ட் செய்து விட்டால் போதும். அந்த முகநூல் பக்கத்தில் உள்ள மாணவர்கள் அதைப் பார்த்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கற்க முடியும். ஆனால் இதை பொதுவெளியில் உள்ளவர்களும் பார்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

இதுதவிர ஆசிரியர்கள், ஒவ்வொரு வகுப்பிற்கும் முகநூல்  குழுக்களை  உருவாக்கலாம். பப்ளிக் அல்லது பிரைவேட் மோடுகளை பயன்படுத்தி முகநூல்  லைவ் விரிவுரைகளை ஸ்ட்ரீம் செய்யலாம். கேள்விகளைக்  கேட்கலாம். கல்வி தொடர்பான அறிவிப்புகளை தெரிவிக்கலாம். முகநூல்  குழுக்களை உருவாக்கும் ஆசிரியர்கள், தொடர்புடைய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு அதற்கான லிங்க்-ஐ அனுப்பி வைத்து விட்டு கல்விப் பணியைத் தொடங்கலாம். 

சுட்டுரை

அதேபோல் ட்விட்டர்  எனப்படும் சுட்டுரை சமூக தளமும் கல்விக்கு பெரும் பங்காற்றி வருகிறது. ஆசிரியர்- மாணவர் கலந்துரையாடலுக்கு ட்விட்டர் ஒரு வரப்பிரசாதம் தான். 

ஒவ்வோர் ஆசிரியரும் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு டுவிட்டர் கணக்கைத் தொடங்கி பயன்படுத்தலாம். இதன் மூலம் மிக சுருக்கமாக கருத்துக்களைத் தெரிவிக்க முடியும். 

அத்துடன் மாணவர்களுக்கான அசைன்மெண்ட்களை வழங்கவும், அவர்களுக்கு நினைவூட்டவும் இந்த சமூக ஊடகத்தைப் பயன்படுத்த முடியும். மாணவர்களுக்கு உத்வேகம் தரக்கூடிய மேற்கோள்கள் மற்றும் பயனுள்ள இணைப்புகளை இதன் மூலம் பகிர முடியும். ஆசிரியர்  ஒரு குறிப்பிட்ட ஃஹேஸ்டேக்கை உருவாக்கி அது குறித்த விவாதங்கள் மற்றும் அரட்டைகளை மாணவர் மத்தியில் கொண்டு செல்லலாம். 

இன்ஸ்டாகிராம்

அதேபோல், இன்ஸ்டாகிராமும் பெருமளவு கற்றலுக்குப் பயன்பட்டு வருகிறது. தொடர்ச்சியான படங்கள் அல்லது தொடர்ச்சியான கிராபிக்ஸ் வடிவமைப்புகள் போன்ற பாடத்திட்டங்களைக் கொண்ட மாணவர்களுக்கு இன்ஸ்டாகிராம் மிக பயனுள்ளதாகவே இருக்கும். டிஜிட்டல் வடிவத்தில் உள்ள பாடங்களின் பல்வேறு அம்சங்களை இன்ஸ்டாகிராம் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்வது எளிது. அது சிறப்பான அனுபவத்தை மாணவர்களுக்கு கொடுக்கும். ஒவ்வொரு மாணவரும் , வகுப்பு சார்ந்த இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி பயன்படுத்தலாம்.  

வலைதளங்கள்:

பிளாக்குகள் எனப்படும் வலைதளங்கள் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்து வருகின்றன. மாணவர்கள் தங்களுக்கான வலைதளங்களை உருவாக்கி அதில் தேவையான விபரங்களை போஸ்ட் செய்ய முடியும் . இத்தகைய போஸ்டுகளை அவர்கள் மிக எளிதாக சமூக ஊடகங்கள் உடன் இணைக்கவும் 
முடியும். வேர்ட்பிரஸ், ஸ்கொயர்பேஸ், பிளாக்கர், டம்ப்ளர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவர்களும், ஆசிரியர்களும் கற்பித்தல், கற்றல் பணியை செயல்படுத்த முடியும். ஆசிரியர்கள் வகுப்பிற்கான வலைதளத்தைத் தொடங்கி டிஜிட்டல் செய்திகளைப் பகிர முடியும்.  மாணவர்கள் சொந்தமாக வலைதளத்தை உருவாக்கி அதில் கட்டுரைகளை எழுதலாம். அதை சமூக ஊடகங்களுடன் இணைக்கலாம்.

பின்டெரஸ்ட்:

ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பின்டெரஸ்ட் போர்டுகளை உருவாக்கலாம். அதில் தொடர்புடைய பாடங்கள் குறித்த தகவல்களைக் கொடுக்கலாம். ஆசிரியர்கள் தங்கள் பாடத்திட்டம், அதற்கான வளங்கள், நடத்தும் முறைகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து ஒழுங்கமைக்க பின்டெரஸ்ட் ஒரு சிறந்த சமூக ஊடக தளமாகவுள்ளது.  

கற்றல், கற்பித்தலுக்கு சமூக ஊடகங்கள் பெருமளவு பயன்படுவது போலவே, கல்வி நிறுவனங்களை, கல்வி நிறுவனம் குறித்த விவரங்களை லட்சக்கணக்கான மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கும் சமூக ஊடகங்கள் 
உதவுகின்றன. 

ஒவ்வொரு பள்ளிகளும் அவர்களின் இணையப் பக்கத்தில் பள்ளிகளின் சமூக ஊடக முகவரி இணைப்பை வழங்கினால், பெற்றோர்களும், எதிர்கால மாணவர்களும் அந்த லிங்க்குகளைப் பயன்படுத்தி கல்லூரி குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இன்றைய மாணவ சமூகம் சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதால், கல்வி நிறுவனங்கள் தங்கள் சமூக ஊடகங்களில்,தங்களின் பள்ளி தொடர்பான விவரங்களைப் பதிவேற்றுவது அவசியம். கடந்த காலங்களில் தங்கள் கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் எந்த அளவிற்கு சாதித்துள்ளனர் என்பதை வீடியோ வடிவில் பதிவேற்றினால் அது பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும். 

பல கல்வி நிறுவனங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மிகப்பெரும் வெற்றியை ஈட்டி வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் இந்த பணியை செய்வதற்காகவே, சில பணியாளர்களை கல்வி நிறுவனங்கள் நியமித்துள்ளன. 

எனவே , சிறிய அளவிலான கல்வி நிறுவனங்களும் இத்தகைய சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் பணியை நடத்துவதுடன், தங்களின் வணிகத்தையும் பெருக்க முடியும் என்றால் அது மிகையில்லை.

Tags : Ilaignarmani Social Media
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT