இளைஞர்மணி

தேவையை நிறைவு செய்யுங்கள்... முன்னேறலாம்!

12th Oct 2021 06:00 AM | ந.ஜீவா

ADVERTISEMENT

 

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த ஒருவர் எந்த வேலையை விரும்பிச் செய்வார்? கம்யூனிட்டி டெவலப்மெண்ட் பிரிவில் மாஸ்டர் ஆஃப் சோசியல் வொர்க் பட்டம் பெற்ற ஒருவர் என்ன வேலையை விரும்புவார்? நிச்சயமாக பொம்மைகள் செய்யும் தொழிலைச் செய்ய யாரும் விரும்பமாட்டார்கள்.

ஆனால் சென்னையைச் சேர்ந்த வசந்த் தமிழ்ச்செல்வனும் அவருடைய மனைவி நிஷா ராமசாமியும் "ஆரிரோ' என்ற பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். படிப்புக்குத் தொடர்பில்லாத ஒரு வேலை கிடைத்து, அதில் வேறு வழியில்லாமல் வேலை செய்வது என்பது வேறு. படிப்புக்குத் தொடர்பில்லாத வேலையைத் தாங்களே விரும்பித் தேர்ந்தெடுப்பது என்பது வேறு. இதைப் பற்றி வசந்த் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்:

""நான் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் பிரிவில் எம்எஸ்டபிள்யூ படிப்பை முடித்துவிட்டு எம்டிஎம் கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். என் மனைவி நிஷா ராமசாமி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தாலும், குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் மாண்டிசோரி பயிற்சியை முடித்துவிட்டு, மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் வேலை பார்த்து வந்தார்.

ADVERTISEMENT

பொம்மைகள் விளையாட மட்டுமல்ல, குழந்தைகளின் அறிவு வளர்ச்சியிலும் பொம்மைகளுக்கும் தொடர்பு உள்ளது. அதிலும் 3 வயதுக்குள் உள்ள குழந்தைகள் பொம்மைகளின் மூலம் கற்றுக் கொள்வது அதிகம்.

எங்களுடைய மகள் நட்சத்திராவுக்கு நிறைய பொம்மைகள் வாங்கிக் கொடுத்தோம். குழந்தைகள் எதை எடுத்தாலும் வாயில் போட்டுக் கொள்வார்கள். அதை எப்போதும் பெற்றோரால் கவனித்துக் கொண்டே இருக்கவும் முடியாது. அப்படி ஏதோ நிகழ்ந்ததில் எங்கள் மகளுக்கு அழற்சி நோய் வந்துவிட்டது. அட்டோபிக் டெர்மடைட்டிஸ் என்ற தோல் அழற்சி நோயால் அவளுடைய தோல் முழுவதும் சிவப்பாகிவிட்டது. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், பொம்மைகளின் மூலம் நோய் எளிதில் தொற்றிக் கொள்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், நாங்கள் எங்களுடைய மகளுக்குப் பாதுகாப்பான பொம்மைகளைத் தேடினோம். எத்தனை கடைகளில் ஏறி இறங்கினாலும், எல்லாக் கடைகளிலும் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொம்மைகளே இருந்தன. மரபொம்மைகள் கிடைக்கவில்லை. அப்படியேகிடைத்தாலும் அவை நல்ல வடிவமைப்பில் இல்லை.

எனவே எங்களுடைய மகளுக்கு நாங்களை பொம்மை செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து, எங்களுக்குத் தெரிந்த தச்சர் ஒருவரின் மூலமாக நாங்களே டிசைன் செய்த மர பொம்மைகளைச் செய்து கொடுத்தோம்.

எங்களுடைய வீட்டுக்கு வந்த நண்பர்களின் குழந்தைகள், அந்த பொம்மைகளைப் பார்த்து, அதைப் போல தங்களுக்கும் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். நண்பர்களும் பொம்மைகள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். தங்களுடைய குழந்தைகளுக்கும் இதுபோன்ற பொம்மைகள் வேண்டும் என்றார்கள். அப்போதுதான் எங்களுக்கு மரபொம்மைகளுக்கான தேவை இருப்பது தெரிய வந்தது.

நம்நாட்டில் கிடைக்கும் பொம்மைகளில் 95 சதவீதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவற்றில் பெரும்பான்மையானவை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. நாமே பொம்மைகள் தயாரித்தால் என்ன என்று எனக்கும் என் மனைவிக்கும் தோன்றியது.

பொம்மைகள் தயாரிப்பு தொடர்பான நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக பல வெளிநாடுகளுக்கும் சென்றோம். குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்குச் சென்றோம். சீனாவுக்குச் சென்றோம். சீனாவில் ஒவ்வோராண்டும் மிகப் பெரிய பொம்மைக் கண்காட்சியை நடத்துவார்கள். அதைப் பார்த்து நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.

பொம்மைகளுக்கான சந்தை எவ்வாறு உள்ளது? எத்தனை வடிவங்களில் பொம்மைகளைத் தயாரிக்கிறார்கள்? மக்கள் பெரிதும் விரும்புகிற பொம்மைகள் எவை? என எல்லா விஷயங்களையும் ஆராய்ந்தோம்.

அடுத்து பொம்மைகளைத் தயாரிக்கும் பணியில் இறங்கினோம். கர்நாடகா மாநிலத்தில் மரப்பாச்சி பொம்மைகளைத் தயாரிப்பவர்கள் இருப்பதைக் கேள்விப்பட்டு அவர்களைத் தொடர்பு கொண்டோம். ஆந்திராவில் எத்திகோபா என்ற கிராமத்தில் நிறைய பொம்மை செய்பவர்கள் இருக்கிறார்கள்.

காரைக்காலிலும் இருக்கிறார்கள். காரைக்குடி பகுதியில் வேப்ப மரங்களை வாங்கி, பொம்மை செய்பவர்களுக்குக் கொடுத்து, 2 வகையான வடிவ அமைப்பில் உள்ள 800 பொம்மைகளைத் தயாரித்தோம். அமேசான் மூலம் விற்பனையை 2019- இல் தொடங்கினோம்.

அமேசான் மூலம் பொம்மைகளை வாங்கிய 200க்கும் மேற்பட்ட தாய்மார்களிடம் எங்களுடைய பொம்மைகளைப் பற்றிய கருத்துகளைக் கேட்டோம். அவர்கள் கூறியது எங்களுக்கு மிகவும் ஊக்கம் தருவதாக இருந்தது. 2020 - ஜூன் மாதத்தில் நாங்களே சொந்தமாக ஆரிரோடாய்ஸ்.காம் என்ற மின்வணிக நிறுவனத்தைத் தொடங்கினோம்.

இப்போது எங்களுடைய பொம்மைகள் இந்தியா முழுவதும் உள்ள ஹேம்லீஸ் பொம்மைக் கடைகளில் கிடைக்கின்றன. நாங்கள் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு மாதமும் 10 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது. 6 பேர் கொண்டதாக இருந்த எங்களுடைய குழு, இப்போது 30 பேர் கொண்டதாக மாறிவிட்டது.

இதுதவிர, கர்நாடகாவில் 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எங்களுக்காகப் பொம்மைகளைத் தயாரித்துக் கொடுக்கிறார்கள். சென்னை கீழ்க்கட்டளையிலும் நாங்கள் ஒரு தொழில் கூடத்தை உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் 1000 ஆர்டர்கள் வரை கிடைக்கின்றன.

வெளிநாடுகளுக்கும் எங்கள் பொம்மைகளை அனுப்ப நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சிங்கப்பூருக்குப் பொம்மைகளை அனுப்பி இருக்கிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் அமெரிக்காவுக்கு எங்களுடைய பொம்மைகளை அனுப்பிவிடுவோம்.

சுயதொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள், எந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதில் முழுகவனம் செலுத்த வேண்டும்.

பிறகு அந்தத் தொழில் தொடர்பான எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். மக்களுக்கு எது தேவையோ அதைக் கண்டுபிடித்து அது தொடர்பான தொழிலைத் தொடங்கினால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடலாம். எங்களுடைய அனுபவத்திலிருந்து நான் சொல்வது இதைத்தான்'' என்கிறார் வசந்த் தமிழ்ச்செல்வன்.

Tags : Ilaignarmani let's move forward!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT