இளைஞர்மணி

தவிர்க்கலாமே... தவறான புரிதலை!

12th Oct 2021 06:00 AM | -சுரேந்தர் ரவி

ADVERTISEMENT


நட்பு, உலகின் அனைத்து உறவுகளிலும் தலைசிறந்தது. எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பையும் பரஸ்பர ஆதரவையும் மட்டுமே எதிர்நோக்கும் உறவு என்றால் அது நட்பே. சிறந்த நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்கள் பெரும் செல்வந்தர்கள். 

பொங்கிப் பெருகும் அருவியாய் மகிழ்ச்சியை நட்பு வழங்கும். ஆனால், நண்பர்களுக்கு இடையேயும் தவறான புரிதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய தவறான புரிதல்களுக்கு முடிந்தவரை உடனடியாகத் தீர்வு கண்டுவிட வேண்டும். இல்லையெனில், அது நிரந்தரப் பிரிவுக்குக்  காரணமாகிவிடும். 

தவறான புரிதல்கள் இயல்பானவை:

தவறான புரிதல்கள் இயல்பானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணநலன்கள் உள்ளன. ஒருவரது குணம் மற்றொருவரின் குணத்துடன் ஒத்துப்போகாது. இத்தகைய வேறுபாடுகள் இயற்கையாகவே நிலவுவதால், தவறான புரிதல்கள் ஏற்படுவதும் இயல்பே. அதைப் புரிந்து கொண்டு விட்டாலே பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுவிட முடியும். 

ADVERTISEMENT

அடிப்படைக் காரணத்தை அறிய வேண்டும்:

நண்பர்களுக்கிடையே தவறான புரிதல் ஏற்பட்டால், அதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். அதுவே தீர்வைக் காண்பதற்கான அடிப்படை. காரணத்தைக் கண்டறிந்த பிறகு, ஒருவேளை தவறு நம் மீது என்றால், அதை ஏற்றுக் கொண்டு நண்பர்களிடம் மன்னிப்பு கோரத் தயங்கக் கூடாது. 

தவறு நம் நண்பர்கள் மீது என்றாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் கோபமாக இருந்தாலும் கூட, நாமே சென்று அவர்களிடம் பேசலாம். இந்த இடத்தில், "அவர்கள் செய்த தவறுக்கு நாம் ஏன் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்' என்ற தன்முனைப்பு (ஈகோ) தோன்ற வாய்ப்புள்ளது. 

ஈகோவை தூக்கி எறியுங்கள்:

ஈகோ முக்கியமா நட்பு முக்கியமா என்பதைத் தீவிரமாக யோசிக்க வேண்டும். ஒருவருடன் நீண்டகாலம் பழகி நட்பை வளர்த்துக் கொள்வதென்பது  சாதாரணமானதல்ல. அது எல்லாருக்கும் அமைந்தும் விடாது. எனவே, ஈகோவைத் தூக்கியெறிந்துவிட்டு நட்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவறான புரிதல்களுக்குத் தீர்வு காண நண்பரே முன்வர வேண்டும் என்று  எதிர்பார்க்காமல் நாமே முயலலாம். 

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்:

அவ்வாறு தீர்வுகளைக் காண முயலும்போது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பிரச்னைகள் குறித்து பேசும்போது கோபம் ஊற்றெடுக்க வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிரச்னைகள் குறித்து பேசி தீர்வு காண்பது நல்லது. அதுவே சிறந்த தீர்வைக் காண உதவும். 

மனம்விட்டுப் பேசுங்கள்:

நண்பர்களிடம் பேசும்போது மனம்விட்டு அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பேசிவிடுவது நல்லது. அந்த சமயத்தில் பழையகால நினைவுகள் குறித்தும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் குறித்தும் நினைவூட்டிப் பேசலாம். அத்தகைய நினைவூட்டல், கோபமாக இருக்கும் நண்பர்களையும் சாந்தப்படுத்தும். 

சரியான காலம்... சரியான இடம்:

நண்பர்களுடனான தவறான புரிதல்களுக்குத் தீர்வு காண்பதற்காகப் பேச முயலும்போது, சரியான காலத்தையும் இடத்தையும் தேர்வு செய்ய வேண்டும். நண்பர்கள் வேறுசில விவகாரங்களில் பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கும்போது நம்முடைய பிரச்னை குறித்து பேசலாகாது. அது அவர்களுக்கு மேலும் எரிச்சலையே ஏற்படுத்தும். அதனால், பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாமலேயே போய்விடலாம். அதேபோல், சரியான இடத்தையும் தேர்வு செய்து பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். 

முன்முடிவுகள் தேவையில்லை:

நண்பர்களுடன் தவறான புரிதல் குறித்து பேசும்போது நம் மனதைத் திறந்தவெளியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிரச்னைகள் குறித்து எந்தவொரு முன்முடிவையும் மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பிரச்னைகளை நம் கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே அணுகும். நண்பர்களின் கண்ணோட்டத்தைத் தெரிந்து கொள்வதற்கு அது தடையாக இருக்கும். நண்பர்களின் கண்ணோட்டத்தில் இருந்தும் அந்தப் பிரச்னையை அணுகினால் மட்டுமே அதற்குத் தீர்வு காண முடியும். 

நட்பே முக்கியம்:

நண்பர்களிடம் பேசும்போது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களுடனான நட்பு நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படை
யாகக் கூறுங்கள்.

நட்பைத் தவிர வேறெதுவும் முக்கியமில்லை என்ற கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகுங்கள்.

அவ்வாறு அணுகுவது விரைவில் தீர்வு காண உதவும். சிறு சிறு பிரச்னைகளுக்காக பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த நட்பைப் புதைகுழியில் தள்ளிவிட வேண்டாம். 

நம்மை விட்டு நீண்ட தூரத்துக்கு விலகும்வரை, நண்பர்களின் அருமை நமக்குப் புரியாது. நண்பர்களுடன் இனிமேல் சேரவே முடியாது என்ற நிலைக்குச் சென்றபிறகு, கடந்தகாலத்தை எண்ணி வருந்தாமல் உரிய காலத்திலேயே தவறான புரிதல்களைக் களைந்து, நட்பை அனுதினமும் கொண்டாடுவோம். 

Tags : Ilaignarmani Avoid ... Misunderstanding!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT