இளைஞர்மணி

விண்கல்லே உன்னை நோக்கி...!

30th Nov 2021 06:00 AM | எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

"டைமோர்போஸ் விண்கல்லே... உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம்'- கடந்த நவம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட ட்வீட் இது.

டைமோர்போஸ் விண்கல் குறித்து ஆய்வு செய்யப் போகிறதா நாசா விண்கலம்? இல்லை... இந்த முறை செல்வது அதன் மீது மோதுவதற்காக.

சூரிய மண்டலத்தில் எட்டு கிரகங்களுடன் ஏராளமான சிறுகோள்களும், விண்கற்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை ஒன்றோடொன்று மோதாமல் அதனதன் சுற்றுப் பாதையில் சுற்றி வரும் வரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவ்வாறு மோதினால், குறிப்பாக பூமியின் மீது ஏதாவது விண்கல் மோதினால் அதை முன்கூட்டியே தடுப்பது எப்படி என்கிற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் 460 அடி உயர விண்கல் பூமியைத் தாக்குவதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். 6 மைல் விட்டம் கொண்ட ஒரு விண்கல் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதியதால்தான் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்ததாக நம்பப்படுகிறது.

பூமி மீது விண்கற்கள் மோதாமல் தடுப்பது எப்படி? அந்த விண்கற்களின் திசையை மாற்றிவிட்டால் அந்த ஆபத்து தவிர்க்கப்படுமா? அவ்வாறு அதன் திசையை மாற்ற முடியுமா என்பதை ஆய்வு செய்யும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.

இதற்காக "டார்ட்' என்ற விண்கலத்தை ஸ்பேஸ்எக்ஸ்ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது நாசா. இந்த விண்கலம் 2,500 அடி விட்டம் கொண்ட "டிடிமாஸ்' என்ற விண்கல்லைச் சுற்றி வரும் "டைமோர்போஸ்' என்ற குட்டி நிலவு விண்கல்லைக் குறி வைத்து செலுத்தப்பட்டுள்ளது.

நாசா செலுத்தியுள்ள இந்த விண்கலம், டைமோர்போஸ் விண்கல் மீது 2022-ஆம் ஆண்டு மோதிச் சிதறி, அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்ற முயலும். அமெரிக்க சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு பெரிதாக இருக்கும் அந்த விண்கல், பூமியிலிருந்து 1.1 கோடி கி.மீ. தொலைவில் வந்துகொண்டிருக்கும் போது இந்த மோதல் நிகழும்.

அந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லையென்றாலும், எதிர்காலத்தில் வரக் கூடிய அத்தகைய அபாயங்களை எதிர்கொள்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் போதுமானதாக இருக்குமா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது நாசா.

Tags : Ilaignarmani The meteor is towards you
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT