இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 25: மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! 

ஆர். நட​ராஜ்

பட்டாம்பூச்சிகளைப் பார்த்து ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதுவும் குழந்தைகளுக்கு படபடக்கும் பட்டாம்பூச்சியைப் பார்த்தால் அலாதியான சந்தோஷம்... குதூகலம்! மனதில் இன்பமான அதிர்வலை ஏற்படுவதை பட்டாம்பூச்சி பறப்பதற்கு ஒப்பிட்டு மகிழ்வோம்! பட்டாம்பூச்சியில் தான் எத்தனை வகைகள்! எத்தனை வண்ணங்கள்! இயற்கையின் படைப்பில்தான் எத்தனை கோடி இன்பங்கள் நம்மை மகிழ்விக்க!

ஓவியக் கலைஞர்களை மிகவும் கவர்ந்தது பட்டாம்பூச்சி. 3500 வருடங்களுக்கு முன்பே எகிப்து நாட்டில் பட்டாம்பூச்சியின் படங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கிறது. போர்ப்படைகளின் அடையாளமாகவும் அதேசமயம் அன்பை வெளிப்படுத்தவும் பட்டாம்பூச்சி படங்களை பண்டைய காலம் தொட்டுமனிதர்கள் உபயோகித்திருக்கிறார்கள்.

சுதந்திர வாழ்க்கை, கட்டுப்பாடில்லாசந்தோஷ வாழ்வியலுக்கு பட்டாம் பூச்சியை அடையாளமாகக் கொண்டு மகிழ்ந்தனர் டொமினிக் நாட்டை சேர்ந்த மிராபல் சகோதரிகள்.

மினர்வா, பேட்ரியா, மரியா தெரசா மூன்று சகோதரிகள் வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்த செல்ல பெண்களாக வளர்ந்தனர். கொள்ளை அழகு கொண்ட அந்த சகோதரிகள் பிரபலமாக சந்தோஷமாக வலம் வந்தனர்."லா மாரிபோசாஸ்' - நாங்கள் பட்டாம்பூச்சிகள் என்று சுதந்திரமாகப் பழகி மகிழ்ந்தனர். ஆனால் அவர்களது வாழ்க்கை பெரும் சோகத்தில்முடிந்தது. மிராபல் சகோதரிகள் கொடூரன் ரஃபேல் ட்ருஹியோ அரசுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்தனர்.

மேற்கிந்திய நாடுகள் கரீபியன் தீவுகளில் ஒரு நாடு டொமினிக்கன் ரிபப்ளிக். அதன் அண்டை நாடு ஹைதி. அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் 1492-ஆம் வருடம் டொமினிக்கன் தீவிலும் இறங்கினார். டொமினிக்கன் தீவு ஸ்பெயின் நாட்டின் காலனியாக அதன் கட்டுப்பாட்டில் வந்தது. டொமினிக்கன் தீவின் பழங்குடியினர் டாய்னோஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். விடுதலைப் போராட்டம் பல காலகட்டங்களில் நடந்தது. முன்னூறு வருடங்கள் ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்து 1821 வருடம் விடுதலை பெற்றது. ஆயினும் உள்ளூர் கலவரம் அண்டை ஹைதி நாட்டு படையெடுப்பு என்று எப்போதும் அமைதியின்மை.

சில வருடங்கள் 1914-22 வரை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் வந்தது. 1924 - இல் இருந்து ஆறு வருடங்கள் ஹொரேஷியோ வாக்வெஸ் ஜனாதிபதி தலைமையில் ஓரளவு அமைதியான ஆட்சி அமைந்தது.

1930- இல் இருந்து 1961 முடிய நாட்டின் இருண்ட வருடங்களாக கருதப்படுகிறது. முந்தைய அரசின் காவல் பாதுகாப்பு தளபதியாக இருந்த ரபேல் ட்ரோஜில்லோ ஜனநாயகப் படுகொலை செய்து போட்டியின்றி தான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து ஆட்சியைக் கைப்பற்றினான். சூழ்ச்சி செய்து பதவி அடைந்ததால் அதை தக்க வைக்க எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை, சர்வ சாதாரணமாக கைது, சிறையடைப்பு ஆகியவை தொடர்கதையானது. அதுமட்டுமல்லாது பலரை ஒற்றர் படை மூலம் கொலை செய்து ஏதோ விபத்து ஏற்பட்டது போல ஜோடனை செய்வது வழக்கமான நிகழ்வானது. 1937-இல் ஆயிரக்கணக்கான ஹைதி நாட்டு அகதிகள் கொல்லப்பட்டனர். மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும் பரிதாபம் நாட்டில் நிலவியது.

இந்த தருணத்தில் தான் மிராபல் சகோதரிகள் பீதி நிறைந்த வாழ்க்கையிலிருந்து மக்கள் விடுதலை பெற வேண்டும் என்று எதிர் குரல் எழுப்பத் துணிந்தனர். அதற்கு உந்துதலாக இருந்தவர் சமூக ஆர்வலராக இருந்த அவர்களது குடும்பப் பெரியவர் ஒருவர். அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டினர். "நமது குழந்தைகள் ஊழல் நிறைந்த கொடூர அரசின் கீழ் வளர முடியாது. அதை நாம் அனுமதிக்கக் கூடாது. உயிர் தியாகம் செய்தாவது மக்களைப் பாதுகாக்க வேண்டும்' எனறு மூத்த சகோதரி பேட்ரியா சூளுரைத்தாள். பட்டாசுகளிலிருந்து வெடி மருந்துகளை அகற்றி கண்ணி வெடிகுண்டுகளைத் தயாரித்து தங்களது தற்காப்பிற்கு தயார் செய்து கொண்டனர்.

மிராபல் சகோதரிகளுக்கு பல வகையில் அரசு தொந்தரவு கொடுத்தது. சகோதரி மினர்வா சட்டப் படிப்பைத் தொடர விடாது இடையூறு செய்து நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு உரிமம் மறுக்கப்பட்டது.

ஒரு விருந்தினர் கூட்டத்தில் மினர்வா சகோதரியை ட்ரோஜில்லோ பார்க்க நேரிட்டது. அவளது அழகில் மயங்கி சம்பிரதாய நடனத்தின் போது அகந்தையோடு தனது அரசாளுமை பற்றி பேச்சு கொடுக்க , மினர்வா பதிலடியாக, "உன்னையும் பிடிக்கவில்லை; உனது அரசின் கொடூரத்தையும் வெறுக்கிறேன்' என்று தைரியமாகக் கூறி அவனது பிடியிலிருந்து விலகி, நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினாள். இது ட்ரோஜில்லோவை ஆத்திரப்
படுத்தியது. இதுவரை எவரும் இவ்வாறு அவனை அவமதித்ததில்லை. அவனது இச்சைக்கு இணங்கினால் பாதுகாப்பு கிடைக்கும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. தன்மானம் கொண்ட மிராபல் சகோதரிகள் புதிய உத்வேகத்துடன் மக்களைத் திரட்டி அரசை எதிர்த்தனர்.

கோழையான அரசு, சகோதரிகளை அவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வழி மறித்துக் கொடூரமாக கொன்று விபத்தில் இறந்ததாக அறிவித்தது. நவம்பர் 25, 1960 ஆண்டு இந்த கோரம் நிகழ்ந்தது. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பதற்கு ஏற்ப மே 1961 -ஆம் வருடம் ட்ரோஜில்லொ அவனது இராணுவப் படையினராலேயே கொல்லப்பட்டான்.

டொமினிக்கன் மக்கள் மிராபல் சகோதரிகளின் உயிர் தியாகத்தைப் போற்றி மாந்தரில் மாணிக்கங்களாக வணங்கினர். ஜூலியா அல்வரிஸ் என்ற டோமினிக் அமெரிக்க எழுத்தாளர் 1994 - ஆம் வருடம் "பட்டாம்பூச்சிகளின் காலத்தில்' என்ற தனது புதினத்தில் மிராபல் சகோதரிகளின் உன்னத தியாகத்தை விவரித்த பிறகு தான் சகோதரிகளின் நாட்டுப்பற்று, மக்களின் உரிமைகளை நிலை நாட்ட நடத்திய போராட்டம் உலகுக்குத் தெரிய வந்தது.

ஐக்கிய நாடுகள் சபை மிராபல் சகோதரிகள் உயிர் தியாகம் செய்த நவம்பர் 25- ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக அறிவித்தது. உலகெங்கிலும் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு பதினைந்து நாட்கள் நவம்பர் 25 - இலிருந்து டிசம்பர் 10 - ஆம் தேதி வரை பிரசாரமும் நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றன.

"ஆரஞ்சு வண்ணம் தீட்டுவோம்... பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிப்போம்' என்பதுதான் 2021 - ஆம் ஆண்டுக்கான மையக் கருத்து. ஆரஞ்சு பளிச்சிடும் வண்ணம், அதுபோல் எடுக்கும் முயற்சிகளும் பெண்களுக்கு ஒளிமயமான வருங் காலத்தை அளிக்கட்டும் என்பதே உயரிய நோக்கம்.

உலகில் சராசரி மூன்றில் ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்ற கணக்கெடுப்பு தகவல் அதிர்ச்சி யூட்டுகிறது. அதுவும் கரோனா தொற்று நோய் பரவிய காலத்தில் பெண்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளானார்கள்; உணவு, பாதுகாப்பு இன்றி துன்பப்பட்டார்கள் என்பதெல்லாம் பதின்மூன்று நாடுகளில் எடுத்த கணக்கெடுப்பின்படி தெரிய வருகிறது. கரோனா காலத்தில் குடும்பச் சண்டை வன்முறை அதிகரித்துள்ளது. பத்து சதவிகிதம் பெண்கள் தான் தங்கள் மீதான வன்முறை பற்றி புகார்அளிக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரியது.

மனித கடத்தல் என்கிற இழிவான வாணிபத்தில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் தொல்லைகளுக்கு அளவே இல்லை. ஆயினும் நல்லுள்ளம் படைத்தவர்கள் ஒன்று சேர்ந்து வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக அபலைப் பெண்களைக்காப்பாற்ற முடியும்.
இன்னும் பெண்களின் பாதங்களை சிறிதாக்க கட்டுவது, உள்ளுறுப்புகளை சிதைக்கும் பழக்கம் ஆப்ரிக்கா மத்திய கிழக்காசிய நாடுகளில் உள்ளது . இது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். இதனைத் தடுப்பதற்கு நாடுகள், தொண்டு நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

நமது நாட்டில் 2020 - ஆம் வருடம் மூன்று லட்சத்து எழுபத்தோராயிரம் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவாயின. வன்புணர்ச்சி , பாலியல் தொந்தரவு, குடும்பத் தகராறு , வரதட்சணை சம்பந்தப்பட்ட கொடுமைகள், மணமாகி ஏழு வருடங்களுக்குள் மணப்பெண் சித்திரவதைக்கு உள்ளாகி இறப்பது, சைபர் குற்ற வழக்குகள் ஆகியவை இதில் அடங்கும்.
முப்பது சதவிகித வழக்குகள் மணம்முடித்த கணவன் வீட்டில் மனைவிக்கு இழைக்கப்படும் சித்திரவதை கொடுமை சம்பந்தப்பட்ட குற்றங்கள். பணக்காரன், ஏழை என்ற பாகுபாடின்றி எல்லா இல்லங்களில் நடக்கும் வன்முறை வேதனைக்குரியது. உத்தரபிரதேசத்தில் அதிகமாக 49,385 வழக்குகளும், மேற்கு வங்காளத்தில் 36,439, ராஜஸ்தானில் 34,535 வழக்குகள்.

வட இந்திய மாநிலங்களில் பொதுவாக குடும்பங்களில் ஆண் ஆதிக்கம் கடுமையாக இருக்கும். "காப்' பஞ்சாயத்து முறையில் ஊர் பெரியவர்கள் முடிவு செய்வார்கள். ஜாதி விட்டு ஜாதி மணமுடித்தால் ஊரை விட்டு விலக்குதல், பல தருணங்களில் காதல் ஜோடியைத் தூக்கிலிடுவது சர்வ சாதாரணமாக நடக்கும். காவல்துறை பார்வைக்கு வராது; வந்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள்! அந்த மாநிலங்களில் முழுமையாகப் பதிவு செய்தால் வழக்குகள் இன்னும் அதிகமாக பட்டியலில் வரும்.

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரி 77 வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் அவற்றில் பல எதிர்மறை விளைவுகளுக்கு அஞ்சி புகார் அளிக்கப்படுவதில்லை. சில நேர்வுகளில் காவல்துறையின் மெத்தனப் போக்கால் சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன.ராஜஸ்தான் 5310 வழக்குகள் பதிவு செய்து முதலிடம், அடுத்து உத்தரபிரதேசம் 2769 நிகழ்வுகள் மத்தியபிரதேசம் 2339 வழக்குகள்.

சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவது மத்தியபிரதேசத்தில் தான் அதிகம்.

19 நகரங்களில் மிக குறைவான வன்புணர்ச்சி வழக்குகள் சென்னை மற்றும் கோயம்புத்தூரில்தான். பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கேபாலசந்தர் படத்தில் ஒரு காட்சி வரும். ஊர் பெரியவர் அரசியல்வாதியின் பொது நிகழ்ச்சிக்குச் செல்வார். நிகழ்ச்சி முடிந்து வெளியில் வருகையில் கூட்டமாக மக்கள் தலைவரைக் காண்பதற்காக நிற்பார்கள். கூட்ட வரிசையில் ஓர் இளம் பெண் கைக் குழந்தையுடன். தலைவர் செல்லமாக குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுவார். அதையே அந்த இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளுவதாக காட்சிப்படுத்துவார் பாலசந்தர். தலைவரின் அடியாள் "அனுப்பி வைக்கறேன் தலைவரே' என்று அவரின் வக்கிர புத்தியை அறிந்தவனாக சமிக்ஞை செய்வான். சமுதாயத்தின் அவல நிலையை ஓரிரு நிமிட காட்சிகளில் படம் பிடித்து காட்டுவது கேபி முத்திரை! இம்மாதிரியான உண்மையான ஆனால் மூடி மறைக்கப்பட்ட நிகழ்வுகள் எவ்வளவோ? சில பாலியல் கொடுமைகள் தாம் வெளியில் வருகின்றன. அதுவும் தில்லி நிர்பயா வன்புணர்ச்சி சம்பவத்திற்குப் பிறகு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

வேதனைகள் ஒருபுறம். ஆனால் அதில் சாதிக்கும் பெண்கள் பலர். தமிழகத்தைச் சேர்ந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் சமீபத்தில் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு நூறு மில்லியன் டாலர் கொடுத்து தனி நபராக அதிகமாக நன்கொடை கொடுத்த இந்தியர் என்ற பெயர் எடுத்துள்ளார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பி காம் படித்தார். பின்பு மேலாண்மை முதுகலைப் பட்டம் அகமதாபாத் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில். அமெரிக்காவில் மேல் படிப்பு, பன்னாட்டு நிறுவனங்களில் நிதி நிபுணராகப் பணியாற்றி பல கல்விக் கழகங்கள், நிதி நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கிறார். நன்றாகப் பாடுவார். "ஆன்மா அழைக்கிறது' என்ற இவரின் சங்கீத இசை ஆஸ்கருக்கு இணையான கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவரது சகோதரி இந்திரா நூயி பெப்சி நிறுவன தலைவராகப் பணியாற்றியவர். சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண்கள் சாதனை நமக்குப் பெருமை.

தங்கள் இன்னுயிரை டொமினிக்கன் நாட்டு நலனுக்காகவும், ஜனநாயக பாதுகாப்பிற்காகவும், மக்களின் சிவில் உரிமைகளைப் பெற்றுத் தரவும் தம் உயிரை அர்ப்பணித்த மிராபல் சகோதரிகள் சர்வதேச அளவில் பெண்ணியத்தின் போராட்ட அடையாளமாகத் திகழ்கிறார்கள்.

உச்சம், ஞானம், திடம், உயிர்ப்புடன் பெண்கள் வாழும் வகையில் அவர்களைப் பாதுகாப்போம் .

சென்ற வாரக் கேள்விக்கு பதில்: அடையார் கேன்சர் மருத்துவமனை 1952ம் வருடம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் நிறுவப்பட்டது.

இந்த வாரக் கேள்வி: ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் எந்த வருடம் அறிவித்தது?

(விடை அடுத்தவாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT