இளைஞர்மணி

மின்சக்தி தானியங்கி கப்பல்!

30th Nov 2021 06:00 AM | - அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

தரை வழிப் போக்குவரத்து வாகனங்களும், வான்வழிப் போக்குவரத்து விமானங்களும் பேட்டரி மூலம் இயங்கும் மின்சக்திக்கு மாற்றம் கண்டு விட்டன. பருவ நிலை மாற்றத்தை தடுக்க கரியமில வாயு மாசுபாட்டைக் குறைப்பதே ஒரே வழியாக உள்ளது. 

இதனால் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தையும் மின்சக்தியில் இயக்குவதில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. 

இதில் பெரும் உந்துசக்தியின் மூலம் இயங்கும் கப்பலும் இணைந்துவிட்டது. பார்ப்பதற்கு பிரம்மாண்ட சரக்குக் கப்பலைப்போல் உள்ள இந்தக் கப்பல், மின்சக்தி மூலம் இயங்கும் உலகின் முதல் கப்பலாகும். "யாரா பிரிக்லேண்ட்' என்ற பெயரில் நார்வே நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அங்குள்ள "யாரா' உரத் தயாரிப்பு நிறுவனம் 14 கி.மீ. தூரம் சரக்குப் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் டீசல் லாரிகளுக்கு மாற்றாக இந்தக் கப்பலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 

ADVERTISEMENT

120 கண்டெய்னர்களைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலில் 8 பேட்டரி அறைகள் உள்ளன. இதில் 7 மெகாவாட் நேரத்துக்கான மின்சாரத்தைச் சேமிக்கலாம். இது சுமார் 100 டெஸ்லா காரிகளில் உள்ள பேட்டரிகளுக்குச் சமம்.

அதுமட்டுமின்றி, இந்தக் கப்பலில் உள்ள அதி நவீன சென்சார்கள் கேப்டன் இல்லாமலேயே கப்பலை இயக்க உதவும். எதிரே வரும் எந்த ஒரு தடுப்பையும் முன்கூட்டியே அறிந்து கப்பல் திசைமாறிச் செல்லும் வகையில் சென்சார்கள் செயல்படும்.

அடுத்த ஆண்டு முதல் மின்சக்தி மூலம் இயங்கும் இந்தக் கப்பல் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தவுடன் தானியங்கிக் கப்பலாக இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் கரியமில வாயு மாசைத் தவிர்க்கலாம் என்றும் இது 40 ஆயிரம் டீசல் வாகனங்களின் இயக்கத்துக்கு ஈடானது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Ilaignarmani Electric automatic ship
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT