இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 24: சுயமரியாதை

ஆர். நட​ராஜ்

ஒவ்வொரு வீட்டிலும் நாள்காட்டி  இருக்கும். இன்றைக்கு என்ன தேதி? என்ன கிழமை? என்பதை நினைவூட்ட நாள்காட்டி அவசியம். தாய்மார்கள் நல்ல நேரம், என்ன சூலம், எந்த திசை என்றெல்லாம் பார்த்து வீட்டிற்கு தேவையானவற்றை பங்கிட்டு கணவருக்கும் குழந்தைகளுக்கும் செய்ய வேண்டியதை அறிவுறுத்துவார்கள்.தமிழ்ப் பெண்கள் குடும்பத்திற்கு ஆணிவேராக நிர்வகிப்பதால்தான் தமிழ் கலாசாரம் பல நூற்றாண்டுகளாக காலத்தை வென்று தழைக்கிறது.

சாலைகளில் வழிகாட்டி பலகைகள் இருக்கும். நாம் போக வேண்டிய இடங்களை எளிதாக அறிந்து கொள்ள உள்ளாட்சி நிர்வாகத்தால் போடப்பட்ட வழிகாட்டிகள். 

நமது வாழ்க்கையில் எங்கு செல்கிறோம், நமது குறிக்கோளை அடைய சரியான பாதையா? நேரான திசையா  என்பதை எவ்வாறு நிர்ணயிப்பது? இது ஒரு கடினமான சவால். திசைகாட்டிகளைத் தெரிவு செய்து நாம் செயலில் இறங்கினால் தான் நாம் வகுத்துள்ள இலக்கை அடைய முடியும். 

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'  என்று தமிழர்களுக்கு ஓர் உத்வேகத்தையும்  தன்னம்பிக்கையையும் வளர்க்க சொல்லப்படுகிறது. ஆனால் அதையே வேறுவிதமாகத் திரித்து - தமிழர் அல்லாதவரை-  வேறு மாநிலத்தவரை - எதிர்க்கும் வகையில் உணர்ச்சிகள் தூண்டிவிடப்படுகின்றன. 
"எனக்குத் தெரியாது போடா'  என்று அறியாமையைக் கொண்டாட இளைஞர்களைத்  திசை திருப்புகிறார்கள்! 

இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாக விதிகளை மீறி பயங்கரமாக வீதி உலா வரும் இளைய சமுதாயத்தைப் பார்க்க முடிகிறது. யாராவது தட்டிக் கேட்டால் முறைப்பது , அடிக்க வருவது போன்ற அநாகரிகச் செயல்கள் சென்னை தெருக்களில் வாடிக்கையாகி விட்டன. 

வீதியில் ஏதாவது ஒரு பிரச்னை என்றால் உடனே வித்தியாசமாக மொபைல் காமிராவில் வீடியோ எடுத்து, உண்மையை மறைத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்கிறார்கள். குற்றவாளிகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்கள் வருகின்றன. பாதிக்கப்பட்டவர் குற்றவாளி போல் சித்தரிக்கப்படும்  அவலம் தொடர்கிறது. நல்லவர்கள், "நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கிவிடுகிறார்கள். காவல்துறையும் இந்த நவீன இரு சக்கர வாகன தாதாக்களைத் தடுத்தாலும் பிரச்னை; விட்டாலும் விபரீதம் என்று செய்வதறியாது நிற்கிறார்கள். 

அந்த காலத்து ஐஜி - க்கள் செந்தாமரை, அருள், நரசிம்மன் போன்றோர் சிறு குற்றங்கள், மோட்டார் வாகன வழக்குகள் அதிகம் அமலாக்க வேண்டும் என்று 
அறிவுறுத்துவார்கள். அதற்குக் காரணம் சிறு குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அதுவே பெருங்குற்றத்தில் முடியும். 
நியூயார்க் நகர் மேயர் ரூடி குலியானி 2000- இல் பதவியேற்ற பின்  சிறு குற்றங்கள், மக்களுக்கு உபத்திரவம் கொடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என்று அமலாக்கத்தை சீர் செய்து மக்கள் 
பாராட்டைப் பெற்றார்.
தறிகெட்டு இளமையை விரயமாக்கும் இவர்கள்தான் இந்நாட்டு நவீன மன்னர் என்று பெருமைப்படுவதா 
அல்லது ஏன் சமுதாயம் இத்தகைய இளைய சமுதாயத்தை உருவாக்கியுள்ளது என்று வருத்தப்படுவதா? 
பொதுவாகவே இந்தியர்கள் விதிகளுக்குக் கட்டுப்படாத சுபாவம் உள்ளவர்கள். குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என்றால் வரமாட்டார்கள். எப்போதும் தாமதம். நேரத்தை விரயமாக்குவதில் சூரர்கள்! 
எப்போதும் வம்பு பேசுவது , அதுவும் மொபைல் வந்த பிறகு எல்லா நேரமும் மொபைலில் வெட்டி அரட்டை, துளியும் பொறுப்பில்லாது பொழுதைக் கழிப்பதில் வல்லவர்கள். அரசுத்துறையிலும் பொதுப்பணியிலும் உள்ள ஊழியர்கள், காத்து நிற்கும் மக்களைப் பொருட்படுத்தாது சொந்த காரியங்களைக் கவனிப்பதைப் பார்க்கலாம்.  ஒருபுறம் ஆள் பற்றாக்குறை என்று புலம்பல். 
மற்றொரு புறம் இருக்கும்  பணியாளர்களைத் திறமையாக மேற்பார்வையிட்டு முழு பயன் பெற தவறுதல்.
 இன்னுமொரு விசேஷ இந்தியகுணம்,  க்யூ வில் நிற்க சொன்னால் நிற்க மாட்டார்கள். நின்றாலும் சமயம் வரும்போது முண்டியடித்து முன்னே இருப்பவரைப் பின் தள்ளி குழப்பம் விளைவிப்பார்கள். 
பஸ் ஸ்டாண்டில் பார்க்கலாம்,  க்யூவை விட்டு தள்ளி கும்பலாக  நடு ரோட்டில் நிற்பார்கள். பஸ்,  ஸ்டாண்டிற்கு வருவதற்கு முன்பே தள்ளு முள்ளு செய்து ஏறுவார்கள். மும்பாய் நகரில் ஓரளவு வரிசைக்கு மதிப்பு கொடுப்
பார்கள். பொறுமை காத்தால் எல்லாருக்கும் வாய்ப்பு  கிடைக்கும். ஆனால் காத்திருப்பதில்லை!

ஒழுக்கம் பிறவியிலிருந்து படிமானத்திற்கு வர 
வேண்டும்.  இதைத்தான் பாரதியார், 
"காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா' என்றார். 

"உலகில் சாதனை படைத்தவர்கள் விடிகாலையில் எழுந்து தமது பணிகளைத் திட்டமிட்டுச் சிந்தித்து செயல்பட்டதால் வெற்றி கண்டார்கள்' என்கிறார் பிரபல மேலாண்மை எழுத்தாளர் ராபின் ஷர்மா. "ஐந்து மணி க்ளப்' என்ற அவரது புத்தகத்தில்,  விடியும் முன் ஐந்து மணிக்கு எழுந்து மனதை ஒருமுகப்படுத்தி அன்றாட பணிகளைத் தொடங்கும் பழக்கம் ஒருவருக்கு எல்லையில்லா ஆனந்தத்தையும் மேன்மையையும் வழங்கவல்லது என்கிறார்.
நமக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அதை உணர்வதற்கு அமைதியான காலைப் பொழுதில் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும். "ஏதோ ஆயிரம் வருடங்கள் வாழ்வோம்' என்று தாமச வாழ்க்கையில் என்ன பயன், இந்தப் புவியில் வாழும் காலத்தில் திறமைகளையெல்லாம் வெளிப்படுத்தி சிறந்த மனிதனாக உயர்த்திக் கொள்ள எல்லா முயற்சிகள் எடுக்க வேண்டும்' என்பான் ரோமாபுரியின் தத்துவ ஞானி பேரரசன் மார்கஸ் அரிலியஸ். 

தன்னம்பிக்கையை  வளர்க்கும் வகையில் இளைஞர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கல்விக்கூடங்களிலோ வீடுகளிலோ கொடுப்பதில்லை. இது கசப்பான உண்மை.  எல்லாரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அந்த தேடலில் வெற்றிகண்டவர்கள் திறமைசாலிகள் என்று போற்றப்படுகிறார்கள். சித்திர கலைஞர் பாப்லோ பிகாசோவின் தாய் இவ்வாறு அறிவுறுத்துவாளாம்: "படை வீரனாக சேர்ந்தால் தளபதியாகிவிடு, பாதிரியானால் பேராயராக உயர்ந்து விடு, எங்கு  சென்றாலும் உச்சத்தை அடைய வேண்டும்'. ""நான் ஓவிய கலைஞனாக முடிவு செய்தேன்.  பாப்லோ பிகாசோவாக உயர்ந்தேன்'' என்றார். இதுதானே தன்னம்பிக்கையின்  அடையாளம்?

தனது திறமையைச் சோதிக்க வலுவில்லாது மற்றவர்  கூறுவது போல் தான் சாதாரணம் என்ற கூண்டுக்குள் அடைத்துக் கொண்டு வெதும்பும் பல இளைஞர்கள் தனது அமானுஷ்ய சக்தியை உபயோகிக்காமல் சராசரி வாழ்க்கை வாழ்கிறார்கள். முடக்கப்பட்ட தனது திறமையின் வலி தாங்காமல் வேறு விதத்தில் வடிகால் தேடுகிறார்கள்.சமுதாயத்தின் மீது கோபம் வருகிறது, அதன் வெளிப்பாடாக வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சண்டை சச்சரவு செய்வது, எல்லாவற்றையும் ஆராயாமல் எதிர்ப்பது போன்ற சமுதாய விரோதச் செயல்களைச் செய்கிறார்கள்.

தாதாசஹிப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜனிகாந்த், தான் பெற்ற விருதை தனது நண்பர் பஸ் ஓட்டுநர் ராஜ் பகதூருக்கு சமர்ப்பித்தார். சிவாஜி ராவ் கெயிக்வாட் பஸ் கண்டக்டர், ஓட்டுநர் ராஜ்பஹதூர். சிவாஜி ராவின் ஸ்டைல் நடிப்பு திறனைப் பாராட்டி நடிகனாக வேண்டும் என்று ராஜ்பகதூர் ஊக்குவித்தார். ரஜனிகாந்த் என்ற நடிகர் கலை உலகிற்கு கிடைத்தார். சரியான நேரத்தில் இந்த ஊக்கம் கிடைத்திராவிடில் கண்டக்டராகவே அவரது பயணம் முடிந்திருக்கும்!

மத்திய அரசின்  பத்ம  விருதுகள் இப்போதெல்லாம்  அமைதியாக சமுதாயத்திற்கு தொண்டு செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2020 -க்கான பத்ம  விருது பெற்ற இருவர் பற்றி சொல்லியாக வேண்டும். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த  பழ வியாபாரி ஹஜாப்பா. நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் வியாபாரத்தில் ஐம்பது ரூபாய் ஏழை குழந்தைகளின் கல்வி உதவியாக எடுத்து வைத்து, தனக்குக் கிடைக்காத கல்வி மற்ற ஏழை குழந்தைகளுக்குக் கிடைக்கட்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறார்.மங்களூருக்கு அருகில் உள்ள ஹரகேலா என்ற அவரது கிராமத்தில் தொண்டு ஆர்வலர்களின் உதவியுடன் ஒரு பள்ளியை நிறுவி சாதனை படைத்துள்ளார்.  பணம் இருந்தும் கொடுக்க மனமில்லாத இந்த உலகில்,  ஒரு சாதாரண ஆரஞ்சு பழ வியாபாரிக்கு எப்படி இந்த உணர்வு வருகிறது? இதுவும் ஒரு அசாத்திய திறமை. அந்த உள்ளுணர்வின் அழைப்பை அறிந்து செயலில் இறங்கிய ஹரகலா ஹஜாப்பா மாபெரும் கல்விச் சேவையில் தன்னை இணத்துக்கொண்டார்.

மற்றொரு விருதாளர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணன். அடையாறு கேன்சர் மருத்துவமனையில்  மருத்துவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார்.2006- இல் அஸ்ஸாம் மாநிலத்தில் சில்சேர் அருகில் கச்சார் என்ற பகுதிக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்க ஆலோசகராகச் சென்றார். அங்குள்ள ஏழை மக்கள் புகையிலையை வாயில் அடக்கி சுவைக்கும் கொடூரமான பழக்கத்திற்கு  அடிமையானவர்கள். வாயில் புண் ஏற்பட்டு கன்னங்களிலும் தாடையிலும் புற்றுநோயில் முடியும். புற்று நோயால் அவதிப்படுவதைப் பார்த்து அந்த மாநிலத்தில் புற்று நோய் மருத்துவ மனையை விரிவாக்குவதற்கு சக மருத்துவர்களின் வேண்டுதலுக்கு இணங்க முயற்சி எடுக்க முடிவு செய்தார். குடும்பத்தோடு 2007 - ஆம் வருடம் அஸ்ஸாம் மாநிலத்தில் கிராமப்புறத்தில் குடியேறி மருத்துவ சேவையைத் தொடங்கினார். பாரக் பள்ளத்தாக்கில் உள்ள ஏழை மக்களுக்கு இப்போது அந்த மருத்துவமனை இலவச மருத்துவச்  சிகிச்சை அளித்து வருகிறது .  வசதியான நகர வாழ்க்கையை விட்டு விட்டு பின் தங்கிய மாநிலத்தின் கிராமப்புறத்தில் மக்களுக்கு மருத்துவ சேவை புரிய எத்தைகைய பரந்த மனம் வேண்டும்! அது  மருத்துவர் ரவி கண்ணனிடம் இருந்தது. தனது திறமையை மக்கள் சேவைக்கு அர்ப்பணிப்பதே அறிவுசார்ந்தோரின் அடையாளம் .

திறமைகளின் வெற்றி என்பது நமக்கு நன்கு தெரிந்தவற்றை திருந்தச் செய்வது; நாம் எதைச் செய்கிறோமோ அதை நன்கு செய்வது. நேர்மையான வாழ்க்கை, நம் திறமைகளை முழுமையாக அறிந்து பயன்படுத்துவதுதான். அதுவே நாம் நமக்கு கொடுக்கும் மரியாதை. அதுவே சுயமரியாதை. ஆனால் அதைத் திரித்து எல்லாரும் நம்மை வஞ்சிக்கிறார்கள்; அதனால் சமுதாய நிலைப்பாடுகளை எதிர்ப்பது தான் சுயமரியாதை என்று வசதிக்கேற்ப சுயநல வாதிகளால் திரித்து விடப்படுகிற அவலத்தின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும். 

பரந்து விரிந்த உலகம் நமக்கு எல்லாம் அளிக்கிறது. அதை நுகர்வதற்கு இளைஞர்கள் சந்தோஷ மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குஜராத்தி கவிஞர் துருவ் பட்  எழுதிய அழகான கவிதை, பழங்குடி பெண் பாடுவதாக, ராஜலக்ஷ்மி ஸ்ரீநிவாசனின் தமிழாக்கத்தில் வெளிவந்திருக்கிறது.  இந்தக் கருத்தை அது  நயமாகக் கூறுகிறது.

திடீரென நடுவழியில் யாரேனும் கண்டு என்னை
மெதுவாக கேட்க,""நீ நலமா ?''
நாம் கூறும் பதிலோ, கடல் அலைகள் போல் இருக்கிறோம்
இயற்கையின் அருளும் பொழிகின்றதே!
நைந்த ஆடைப் பையின் மடிப்பில்
நாம் வைத்திருக்கும் 
அழகான அசைந்தாடும் குஷியே!
நான் தனிமையாக நின்றாலும்
திருவிழாவில் இருப்பது போல்
தினந்தோறும் தோன்றுகின்றதே!
தாளிட இயலா சிறு பெட்டகத்தினுள்
நம்  பொக்கிஷம் சுகமாகி உள்ளதே!
கண்களில் நீரோ வந்திடுமே... போயிடுமே...
நெஞ்சத்தின் கனிவு  குறைவதில்லையே!
நீரின் நிறை குறைவின் கணக்கு கரையே வைக்கும்
அதன் கவலையோ கடலுக்கு இல்லையே!
கதிரவனும் உதயமாகி மறைகின்றானே
நம் மேல் வான்வெளி அசைவின்றி உள்ளதே!
 நாம் கூறும்  பதிலோ கடல் அலைகள் போல் இருக்கிறோம்!
இயற்கையின் அருளும் பொழிகின்றதே!
 அருமையான கவிதை!

சுய மரிதையோடு நேர்மையான வாழ்க்கை வாழ்வோம்!

சென்ற வாரக் கேள்விக்கு பதில்: 2021 பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்றவர் மூவர், கலிபோர்னியா  பல்கலைக்கழகத்தின்  டேவிட் கார்ட், எம்ஐடி பல்கலைக்கழகத்தின் ஜோஷுவா அங்க்ரிஸ்ட், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கைடோ இம்பென்ஸ்.

இந்த வாரக் கேள்வி: அடையாறு கேன்சர் மருத்துவமனை எந்த வருடம் யாரால் நிறுவப்பட்டது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்:மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT