இளைஞர்மணி

மெட்டாவெர்ஸ் உலகம்!

9th Nov 2021 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

ஃபேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை "மெட்டா' என மாற்றியதுதான் கடந்த வாரம் இணைய உலகில் பேசுபொருளாக இருந்தது. வெறுமனே சமூக ஊடக நிறுவனமாக மட்டுமின்றி, அதற்கும் அப்பால் மெய்நிகர் உலகை வடிவமைத்து வரும் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக இயக்குநர் மார்க் ஸூக்கர்பெர்க், இந்த உலகத்தை மெட்டா வெர்ஸ் என்கிறார். "யுனிவர்ஸ்' என்றால் பிரபஞ்சம். "மெட்டா வெர்ஸ்' என்றால் அதற்கும் அப்பால் என்று பொருள்.

எளிமையாகச் சொல்வது என்றால் ஒரு காணொலி மூலம் வெவ்வேறு இடங்களில் இருந்து பலர் ஒரு நிகழ்ச்சியில், கூட்டத்தில் பங்கேற்பதுபோலத்தான். ஆனால், விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர்), ஆக்மென்டட் ரியாலிட்டி (மேம்பட்ட எதார்த்த) தொழில்நுட்பத்தை இணைத்து நடத்தப்படும் தொழில்நுட்பப் பாய்ச்சலில் ஒரு காணொலிக் கூட்டத்தையும் முப்பரிமாண அனுபவத்துடன் நேரில் பங்கேற்பது போன்ற உணர்வை ஏற்படுத்த முடியும். இந்தத் தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு சில காலம் ஆகும் எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தை வடிவமைக்கும் போட்டியில் குதித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். தங்களது பயனர்கள் அடுத்த ஆண்டே விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்ப ஹெட்செட்கள் மூலம் தங்களது காணொலிக் கூட்டத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன் சிறப்பாக அது கூறுவது என்னவென்றால், அந்தக் காணொலிக் கூட்டத்தில் அனிமேஷன் உருவங்கள் இடம்பெற்றிருக்கும் என்பதுதான். அவற்றுக்கு என்ன வேலை எனக் கேட்கலாம். ஒரு விடியோ அழைப்பில் சுமார் அரை மணி நேரத்துக்கு அதிகமாக கூட ஈடுபாட்டுடன் இருப்பது கடினமாக இருக்கும். அந்தச் சூழலில் இந்த அனிமேஷன் உருவங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். அவை உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும். வெப் கேமராவை ஆன் செய்யாமலேயே அந்தக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க முடியும்.

நீங்கள் பேசும் வார்த்தைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முகபாவனையையும் அந்த அனிமேஷன் உருவம் வெளிப்படுத்தும். தொழில்நுட்பம் வளர வளர எதுவும் சாத்தியம் என்ற நிலை உருவாகி வருகிறது. மெட்டா வெர்ஸ் உலகில் சந்திக்க நாம் தயாராக இருப்போம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT