உலக அளவில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நாடுகளில்இந்தியாவும் ஒன்று. கார்களும் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. சாலை விபத்துகளும் ஒவ்வோராண்டும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
விபத்துக்கு உள்ளானவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். பல சமயங்களில் அது முடியாமல் போகிறது. விபத்துகளினால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் இதனால் அதிகமாகிவிடுகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த விமல் சிங் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சோக நிகழ்ச்சி நிகழ்ந்தது. அவருடைய நண்பர் நாகர்கோயில் அருகே நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்துவிட்டார். விபத்து நடந்தபோது,நண்பரின் கார் நசுங்கி, செல்போன் காருக்கடியில் மாட்டிக் கொண்டது. நண்பருக்குத் தலையில் அடிபட்டு மயங்கிவிட்டார்.உரிய நேரத்தில் விபத்து குறித்த தகவல் கிடைக்கவில்லை. விபத்து நடப்பதற்கு முன்பு நண்பர்விமல்சிங்கிடம் தொலைபேசியில் இறுதியாகப் பேசியது: ""நான் நாகர்கோயிலில் இருக்கிறேன்.சீக்கிரம் வந்துவிடுவேன்'' என்பதே. ஆனால் நண்பர் வரவே இல்லை. மனம் உடைந்து போனார் விமல் சிங்.
அதிலிருந்து மீண்டு வர விமல் சிங்கிற்கு சில மாதங்கள் ஆகிவிட்டன. விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் அவர் மீண்டு வந்தார். அதன் பிறகு, விபத்தில் காயம் அடைந்தவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் சேவையைத் தொடங்கினார்.
இன்னொருபுறத்தில் விபத்தினால் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்துவது, அவற்றைச் சரி செய்வதும் தேவையானதாக இருந்தது. அப்போதுதான் விமல் சிங்கிற்கு "ரெடிஅசிஸ்ட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணம் எழுந்தது.
விபத்தினால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப் பாதுகாப்பது, வாகனங்களின் பழுதுகளை நீக்குவது ஆகிய இரண்டு பணிகளையும் செய்யக் கூடிய நிறுவனமாக அதை நடத்தி வருகிறார்.விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு கட்டணம் எதுவும் அவர் வாங்குவதில்லை.
""உலக அளவில் அதிகமான இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நாடாக நம்நாடு இருந்தபோதிலும்,வாகனங்களைப் பழுதுநீக்கும் தொழில் என்னவோ மிகவும் முறைப்படுத்தப்படாததாகவே உள்ளது. ஆங்காங்கே வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் பழுது பார்க்கும் மையங்கள் உள்ளன. மெக்கானிக் ஷாப்கள் இருக்கின்றன. என்றாலும் ஒரு நாளின் 24மணி நேரத்தில் எந்த நேரத்தில், எந்த இடத்தில் இருந்து கூப்பிட்டாலும் வாகனங்களைப் பழுதுபார்க்கச் செல்பவர்கள் மிகவும் குறைவு. இந்தக் குறையை நீக்கும் நோக்கத்துடன்தான்நாங்கள் ரெடி அசிஸ்ட் நிறுவனத்தை உருவாக்கினோம்'' என்கிறார் விமல்.
வாகனங்களைப் பழுதுபார்க்கும் நிலையங்கள் நகரங்களில் உள்ளன. நகரங்களுக்கு அருகே உள்ள சில இடங்களில் உள்ளன.நகரங்களில் இருந்து நீண்ட தொலைவு உள்ள சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது பழுதாகிவிட்டால், அதுவும் இரவு நேரத்தில் பழுதாகிவிட்டால்,அவற்றைச் சரி செய்வது என்பதுமிகவும் சிரமம்.
""நாங்கள் மக்களுக்கு இரண்டுவிதங்களில் பணிபுரிகிறோம். வாகனங்கள் எங்காவது பழுதாகி நின்றுவிட்டால்,தொலைபேசியில் அழைத்தால் போதும்,
எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே சென்று பழுது நீக்கும் பணியைச் செய்கிறார்கள்.இது ஒரு விதம்.ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் வாகனங்களை சர்வீஸ் செய்யும் பணியையும் செய்கிறோம். இது இன்னொருவிதம்.
கரோனா தொற்று ஏற்பட்டு பொதுமுடக்கம் ஏற்பட்ட காலத்தில் சாலையில் வாகனங்கள் செல்லாமல் முடங்கிவிட்டன. அப்போதுகூட,இந்த சர்வீஸ் செய்யும் பணியால் ரெடிஅசிஸ்ட்டின் பணி முடங்கிப் போகவில்லை.வாகனங்கள் உள்ள வீடுகள், நிறுவனங்களுக்கு நேரில் சென்றுசர்வீஸ் செய்தோம்.
அதுபோன்று, நேரடியாக வாகன உரிமையாளர்களுடன்தொடர்பு கொண்டுபழுது நீக்கும் பணியைச் செய்கிறோம். சில குறிப்பிட்ட வாகன நிறுவனங்கள், வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுடைய வாகனங்களின் பழுதுநீக்கும் பணியையும் செய்கிறோம்'' என்கிறார் விமல்.
2015- இல் இதற்கான முன்முயற்சிகளில் இறங்கினார் விமல். 2019 - ஆம் ஆண்டுதான் ரெடிஅசிஸ்ட் தனது பணியைத் தொடங்கியது. தொடக்கத்தில் 20 மெக்கானிக்குகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில்,இப்போது 650 பேர் பணிபுரிகிறார்கள்.ஒரு நாளைக்கு சுமார் 2000வாகனங்களும் மேல்பழுதுநீக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
""முதலில் பெங்களூருவில்தான் எங்கள் பணியைத் தொடங்கினோம். பிறகு கர்நாடகாவில் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்திலும் பணியைத் தொடர்ந்தோம்.மைசூர், ஹூப்ளி - தார்வார், மணிப்பால், விஜயவாடா ஆகிய நகரங்களில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
பழுதுபார்க்கும் மெக்கானிக்குகள் கிடைப்பது தொடக்கத்தில் எங்களுக்கு மிகச் சிரமமாக இருந்தது.அதன் பிறகு இதற்காக நாங்கள் ஒரு திட்டம் வகுத்தோம்.கர்நாடகாவில் உள்ள சிறிய நகரங்கள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்ஆட்டோமொபைல் என்ஜினியரிங் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்துவிட்டு, வேலையில்லாமல் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு வாகனங்களைப் பழுதுபார்க்கத் தெரியாது.அப்படிப்பட்டவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து,பின்னர் அவர்களையே எங்கள் நிறுவனத்தில் நேரடிப் பணியாளர்களாக பணிக்கு அமர்த்திக் கொண்டோம்.
இதற்காகவே "மெகாடெமி' என்ற பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினோம். இந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் தருவதற்காக டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் மற்றும் ஆட்டோமோட்டிவ் ஸ்கில் டெவலப்மெண்ட் கவுன்சில் (ஏஎஸ்டிசி) ஆகிய நிறுவனங்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம்.
அப்படிப் பயிற்சி அளிக்கப்பட்ட எல்லாரையும் நேரடிப் பணியாளர்களாக பணிக்கு அமர்த்தாமல் சிலரை ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய வைத்திருக்கிறோம்.நகரங்களில் இருந்து தொலைதூரத்தில் அவர்கள் வசித்தாலும்,அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வாகனப் பழுதுநீக்கும் பணிகளை அவர்களுக்குத் தருகிறோம். இதனால் நிரந்தரப் பணியாளர்களுக்குக் கிடைப்பது போன்றே ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு வருமானம் கிடைத்துவிடுகிறது. நகரத்திலிருந்து தொலைதூரத்தில் உள்ள இடங்களிலும் வாகனப் பழுதுநீக்கும் பணியும் நடந்துவிடுகிறது.
நம்நாடு மிகப் பரந்து விரிந்து நாடு. வாகனங்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். எனவே வாகனங்களின் பழுதுநீக்கும் தொழிலுக்கான வாய்ப்புகள் அதிகம்''என்கிறார் விமல் சிங்.