இளைஞர்மணி

தொழில் தொடங்க கடன் உதவி!

வி.குமாரமுருகன்

படித்த எத்தனையோ இளைஞர்கள் தங்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். பலர் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். தங்களின் திறமையை வெளிப்படுத்தி தொழில்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு உரிய வசதியைச் செய்து வருகிறது சிட்கோ எனப்படும் மாவட்ட சிறு தொழில் மையம். உயர்கல்வியைக் கற்றவர்களுக்கு மட்டுமின்றி தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நிறுவனம் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

தமிழக அரசின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக செயல்பட்டு கொண்டிருக்கும் சிட்கோ மூலம் உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் ரூ. 10 லட்சம், சேவைத் தொழிலுக்கு ரூ. 3 லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது. வணிக வங்கிகள், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்த பட்சம் 8- ஆம் வகுப்பு முடித்தவர்கள் தொழில் தொடங்க இந்நிறுவனத்தில் விண்ணப்பிக்க முடியும். ஆனால் விண்ணப்பதாரர் கண்டிப்பாக 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் படை வீரர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவரின் ஆண்டு வருமானம் ரூ. 1.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதற்கான உரிய சான்றிதழை நோட்டரி பப்ளிக் / உறுதி மொழி ஆணையரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் தாங்கள் தொடங்க இருக்கும் தொழிலின் திட்ட மதிப்பில் 10 சதவீத தொகையை பங்களிப்பாகச் செலுத்த வேண்டும். அது போல் சிறப்பு பிரிவினர் 5 சதவீதத் தொகையை பங்களிப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். சிட்கோ மூலம் பெறும் கடன் தொகையில் தமிழக அரசு 15 சதவீதம் மானியம் வழங்குகிறது.

ரெடிமேடு ஆடை தயாரிப்பு, பாக்கு மட்டை, டிஜிட்டல் பிரிண்டிங், காலணி உற்பத்தி, ஹாலோ பிளாக் உற்பத்தி, லேத் பட்டறை, லேபிள் பிரிண்டிங், கோன் வைண்டிங், நெட் சென்டர், விசைத்தறி, போட்டோ பிரேம் கடை, போட்டோ ஸ்டுடியோ, அழகு நிலையம், ஃபர்னிச்சர் மற்றும் வாடகை பாத்திர கடை, டாக்ஸி, ஜெராக்ஸ், மொபைல் போன் சர்வீஸ், மளிகைக் கடை போன்ற எண்ணற்ற தொழில்களுக்கு சிட்கோ கடன் வழங்குகிறது. இது போன்ற தொழில்களின் பட்டியலை மாவட்ட தொழில் மையத்தின் இணையதளத்தில் பார்வையிடலாம். நேரடி விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.

www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணைய தளத்தில் நுழைந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்துடன் திட்ட அறிக்கை, விலைப்புள்ளி (ஜிஎஸ்டி எண் கொண்டது). கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் உரிய சான்றிதழுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ. 25 லட்சம் வரை கடன் உதவி: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் (என்இஇடிஎஸ்) , படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

பட்டய படிப்பு (டிப்ளமோ), ஐ.டி.ஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித் தகுதி பெற்றிருப்பவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ஒரு மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு தொழில் திட்டம் தயாரிக்க இத்திட்டத்தின் கீழ் சிட்கோ உதவியும்
செய்கிறது.

பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெறவும் சிட்கோ வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். வயது 21வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். விண்ணப்பிப்பவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.

இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.100 லட்சம் வரையிலான உற்பத்தி சார்ந்த தொழில் மற்றும் சேவைத் தொழிலைத் தொடங்கலாம். பொதுப் பிரிவினர் தங்களது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவினர் தங்களது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற சிட்கோ பரிந்துரை செய்யும். விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/needs  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT