இளைஞர்மணி

தன்னம்பிக்கை... தளராத வெற்றி!

வி.குமாரமுருகன்


எதைச் செய்ய முயன்றாலும் தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை உடையவர்கள் மட்டுமே வாழ்க்கையில் ஜொலிக்க முடியும். 
ஆனால் இந்தத் தன்னம்பிக்கையைக் குறைக்கும் வகையில் எத்தனையோ சம்பவங்கள் நம்மைச் சுற்றி நிகழக்கூடும். 
உறவினர்களும், நண்பர்களும் ஏன் பெற்றோர்கள் கூட,  நமது 
தன்னம்பிக்கையைப் பாதிக்கக் கூடிய வார்த்தைகளைச் சொல்வதும்,  செயல்களையோ செய்வதும் நிகழத்தான் செய்கின்றன. 
தன்னம்பிக்கையைக் குலைக்கும் இதுபோன்ற செயல்கள் தெரியாமல் கூட நடைபெற்றுவிடலாம்.  தன்னம்பிக்கைக் குலைந்துபோவதால்,  நமக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது.  
நமது தன்னம்பிக்கையைக் குலைக்கும் செயல்கள் மட்டும் தாழ்வு மனப்பான்மை உருவாகக்  காரணமாக இருப்பதில்லை.  தாழ்வு மனப்பான்மை உருவாவதற்கான காரணிகள் இந்த சமூகத்தில் நிறைந்து கிடக்கின்றன. 
பள்ளி, கல்லூரி வாழ்க்கையிலும் சரி, வேலை பார்க்கும் பணியிடங்களிலும் சரி பலசமயங்களில் நமக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் விதத்திலான செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன. 
இன்றைய இளைஞர்களில் பலர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக  இருக்கின்றனர். அவர்களிடம்  "உன்னால் எதுவும் முடியாது', "பக்கத்து வீட்டுக்காரனைப் பார்... எதிர் வீட்டுக்காரனைப் பார்... வெளிநாட்டில் சென்று சம்பாதிப்பவனைப் பார்' என்பன போன்ற பேச்சுகளை எல்லாம் அடிக்கடி இளைஞர்கள் கேட்கும்படி நேர்ந்துவிடுகிறது.  அதுவே அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடுகிறது. 
சில பெற்றோர்கள் கூட,  தங்களின் பிள்ளைகளை பிறர் மத்தியில் குறைத்து மதிப்பிடுவதை இன்றும் கூட செய்து வருகின்றனர். அது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறது.
இப்படி தாழ்வுமனப்பான்மை ஒருவருக்கு  ஏற்பட்டு விட்டால் அவருடைய தன்னம்பிக்கை தொலைந்துவிடுகிறது. இதற்கு   பெற்றோரும், சமூகமும் காரணமாக அமைந்துவிடக் கூடாது. 
ஒவ்வோர் இளைஞனுக்குள்ளும் ஒவ்வொரு திறமை மறைந்து இருக்கிறது. எல்லாருமே மாவட்ட ஆட்சியராகவோ, காவல் கண்காணிப்பாளராகவோ, மென்பொருள் நிறுவன அதிகாரிகளாகவோ ஆவதற்கான வாய்ப்புகளில்லை.  புகழ்பெற்ற மருத்துவநிபுணராகவோ, பொறியாளராகவே திகழ்வதற்கும் வாய்ப்புகளில்லை.  அதனால்  எந்தவோர் இளைஞரையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு  அவர்களைப் போல போல் ஆக வேண்டுமென்று கூறுவதை  பெற்றோர், உறவினர், ஆசிரியர்கள்  அனைவரும் தவிர்க்க வேண்டும்.  இளைஞர்களுக்குள் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து  அவை சார்ந்த துறைகளில்  அவர்களை இறக்கிவிட   உறுதுணையாக இருந்தால் போதும்,  இளைஞர்கள் முன்னேற்ற வானில் சிறகடித்துப் பறக்க. 
தன்னம்பிக்கைக்கு பெரிய எதிரி தாழ்வுமனப்பான்மை. அதேபோன்று,   எதிர்மறை எண்ணங்களும், செயல்களும் கூட தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும். தேவையான இடத்தில், தேவையான நேரங்களில் எதிர்மறையான சிந்தனைகளும் அவசியம்தான். ஆனால் எப்போதுமே எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருப்பது சரியல்ல. 
உதாரணமாக, நேர்முகத் தேர்விற்குக் கிளம்பும் போது அது தொடர்பான விஷயங்களை நன்கு தெரிந்துகொண்டு 
தேர்வுக்குக் கிளம்பும் ஒருவர், அந்த இடத்தைச் சென்று அடை
வதற்காக பயணப் பாதையை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.   ஒருவேளை போகும் வழியில் ஏதேனும் பிரச்னை 
ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ற மாற்று வழியையும் முன்கூட்டியே யோசித்து வைத்திருப்பதும், பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.  எதிர்மறையான சிந்தனைகள் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான திட்டமிடுதலுக்கு  உதவும்;  நிச்சயம்  பலன் கொடுக்கும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக எதிர்மறையான சிந்தனைகளை மட்டுமே எப்போதும் கொண்டிருந்தால் எந்தச் செயலையும் செய்யாமல் சுற்றித் திரிய  வேண்டியதுதான்.  
நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது வழியில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி  சிந்திப்பது மட்டுமல்ல, நேர்முகத் தேர்வில் நாம் வெற்றி பெறமாட்டோம் என்ற எண்ணமும் கூட எதிர்மறைச்  சிந்தனைதான்.  அப்படி  நினைத்து கொண்டு அந்த நேர்முகத்தேர்வுக்கு போகாமல் இருந்தால் எதிர்கால வாழ்க்கையே சிதைந்துவிடும்.
எதிர்மறை சிந்தனைகள் எந்தவிதமான முயற்சிகளையும் செய்யவிடாமல் நம்மைத் தடுத்துவிடுகிறது. வீணாகப் பொழுதைக் கழிக்கச் செய்கிறது.  இதைக் காணும் பிறர் நம்மைப் பற்றி இழிவாக எண்ணுகிறார்கள்.  அதை தங்களின் சுடுசொற்களின் மூலம் சுட்டிக்காட்டுகிறார்கள்.  அது மேலும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறது. மீண்டும் மீண்டும் எதிர்மறை சிந்தனைகளில் இருந்து மீள முடியாமல் நாம் தவிக்கிறோம். 
எதிர்மறை சிந்தனை, தாழ்வு மனப்பான்மை ஆகிய சுழல்களில் மீண்டும் மீண்டும் சிக்கி இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை இருளுக்குள் புதைத்துவிடாமல், இருக்கும் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளுதல்,  தொடக்கத்தில் சிறிய, எளிய செயல்களில் வெற்றி காணுதல், அந்த வெற்றி அளித்த ஊக்கத்தில் நம்பிக்கையுடன், நேர்மறை சிந்தனை
யுடன் உலகைப் பார்த்தல்,  முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணித்தல் எனத் திட்டமிட்டுச் செயல்படுதல் மிகவும் அவசியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT