இளைஞர்மணி

செல்லிட பேசி... பரவும் கரோனா!

சுரேந்தர் ரவி


நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இத்தகைய சூழலில், சுத்திகரிப்பானைப் பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுதல், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

கைகளை அடிக்கடி கழுவி பாதுகாப்பாக இருந்தாலும், நமக்கே தெரியாமல் கரோனா தொற்றைப் பரப்புவதற்கு நம்முடனேயே ஒரு கருவி உள்ளது. அதுவே செல்லிட பேசி.

கரோனா தொற்று பரவி வரும் சூழலில், செல்லிட பேசியை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படவில்லை.

பொருள்களை வாங்குவதற்குக் கடைக்குச் செல்லும்போது அங்குள்ள கதவு, பொருள்கள் போன்றவற்றைத் தொட்டாலும், கடையிலிருந்து வெளியே வந்த பிறகு கைகளை சுத்திகரிப்பானால் சுத்தம் செய்து கொள்கிறோம். ஆனால், கடைக்குள் இருக்கும்போது செல்லிட பேசியைக் கையில் எடுத்துப் பயன்படுத்தியிருப்போம்.

வீட்டுக்குச் சென்ற பிறகு அந்த செல்லிட பேசியை அப்படியே எடுத்து மீண்டும் பயன்படுத்துவோம். செல்லிட பேசியைப் பயன்படுத்திய பிறகு நமது கைகளைக் கொண்டு முகத்தை அடிக்கடி தொட்டுக் கொண்டிருப்போம். நம் கைகளை அடிக்கடி கழுவினாலும் செல்லிடப் பேசி குறித்து யாரும் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. அதனால், செல்லிட பேசி வாயிலாக கரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ஏனெனில் கரோனா தீநுண்மி செல்லிட பேசி உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்
களின் பரப்புகளில் சில மணி நேரங்கள் வரை உயிர்வாழும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். செல்லிட பேசி பரப்பில் கரோனா தீநுண்மி எவ்வளவு மணி நேரம் உயிர்வாழும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அதன் வாயிலாக கரோனா தொற்று பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செல்லிட பேசி குறித்து கவலைப்படாமல் அதைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவாமல் உணவு உண்ணுதல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோம். அதன் மூலம் கரோனா தொற்று பரவுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கைகளை மட்டுமல்லாது செல்லிட பேசியின் பரப்பையும் அதற்கான சுத்திகரிப்பானைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அத்தகைய சுத்திகரிப்பானில் குறைந்தபட்சம் 70 சதவீதம் ஆல்கஹால் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதேபோன்று, நாம் அடிக்கடி பயன்படுத்தும் மடிக்கணினி, செல்லிட பேசி சார்ஜர் உள்ளிட்ட பொருள்களையும் சுத்திகரிப்பானைக் கொண்டு சுத்தம் செய்து கொள்வது நமக்குக் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். செல்லிட பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களைச் சுத்தம் செய்யும்போது மிகவும்கவனமாக இருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாவிட்டால், மின்னணு சாதனங்களில் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது.

செல்லிட பேசியில் ஒலிபெருக்கி போன்றவற்றுள் சுத்திகரிப்பான் சென்று விடாமல் கவனமாகச் சுத்தம் செய்ய வேண்டும். வெளியில் செல்லும் வேளைகளில் முடிந்த வரை செல்லிட பேசியைக் கையில் எடுக்காமல் இருப்பது நல்லது.

ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில் செல்லிட பேசியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், உடனே சுத்திகரிக்கும் தாளைக் கொண்டு அதைச் சுத்தம் செய்துவிடுவது நல்லது.

கரோனா பரவி வரும் சூழலில், செல்லிட பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்பது தொடர்பாக அவற்றைத் தயாரித்த நிறுவனங்கள் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி சாதனங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

கரோனா பரவல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாகத் தெரிந்து கொள்வதும் ஆபத்தையே தரும். கரோனா தொற்றிலிருந்து நம்மை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்.

அடிக்கடி கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவையனைத்தும் பொதுவான வலியுறுத்தல்களே. ஆனால், அவற்றைக் காட்டிலும் வேறு சில வழிகள் மூலமாகவும் கரோனா பரவ வாய்ப்புகள்உள்ளன.

கரோனா தொற்றிக் கொள்ளாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது நம்முடைய கடமை. செல்லிட பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் அடிக்கடி சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்திருப்போம். கரோனா பரவலைத் தடுத்து, அத்தொற்றை வெற்றி கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT