இளைஞர்மணி

தேவைக்கேற்ற கண்டுபிடிப்பு!

ந. ஜீவா

கரோனா பெரும் தொற்றின் இரண்டாவது அலைவீச்சு அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தேவைப்படுகிற அளவுக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறைஉள்ளது. இதனால் நோயாளிகள் மரணம் அடைவதும் நிகழ்ந்துவிடுகிறது.

இவை மட்டுமல்ல, நோயாளிகள் அதிகமானதால் மருத்துவப் பணியாளர்களின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. ஒரு மருத்துவர் சராசரியாக 40 -50 கரோனா நோய்த் தொற்றுள்ளவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.செவிலியர்களின்தேவையும் அதிகரித்து உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும்விதமாக, இன்றையத் தேவையை நிறைவு செய்யும்விதமாக ஒரு கருவியை பெங்களூருவைச் சேர்ந்த "டர்ட்டில் ஷெல் டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தைச் சேர்ந்த முதித் தந்த்வாதே, கெளரவ் பர்ச்சான் என்ற இரு இளைஞர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.

இவர்களிருவரும் ஐஐடி - மும்பையில் மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் பட்டம்பெற்றவர்கள். இந்தக் கருவி மருத்துவப் பணியாளர்களின் வேலையை வெகுவாகக் குறைத்துவிடுவதோடு, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சாதாரண படுக்கையேமருத்துவமனைகளில் இல்லாதநிலை உள்ளது. ஏற்கெனவே உள்ள அவசரச் சிகிச்சைப்பிரிவுகளை அதிகரிக்கவும் இயலாத சூழ்நிலைஉள்ளது. இந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்தக் கருவி சாதாரண படுக்கையை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கையாக இரண்டு நிமிடங்களில் மாற்றிவிடுகிறது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காதவர்கள் வீட்டில் இருந்தே மருத்துவம் செய்ய இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். நோயாளியின் உடல்நிலையை உடனுக்குடன் இந்தக் கருவி மருத்துவர்களுக்குத் தெரியப்படுத்திவிடுகிறது. அந்தக் கருவியின் பெயர் டோஸீ.

சென்சார்கள் பல பொருத்தப்பட்டுள்ள சிறிய விரிப்பு போல இந்தக் கருவி உள்ளது. இந்தக் கருவியை நோயாளியின் படுக்கையில் படுக்கை விரிப்பின் கீழே, நோயாளியின் நெஞ்சுக்கருகே வைத்துவிட வேண்டும்.

""நோயாளியின் உடலில் இருந்து வரும் மிக நுண்ணிய அதிர்வுகளை இந்தக் கருவி கணக்கிடுகிறது. ரத்தத்தை இதயம் பம்ப் செய்வது, சுவாசித்தல், தசைகளில் ஏற்படும் அதிர்வுகள், நடுக்கங்கள் உள்பட எல்லாவற்றையும் இந்தக் கருவி சென்சார்களின் மூலம் தெரிந்து கொள்கிறது. இதன் மூலம் ஒரு நோயாளியின் தூக்கத்தின் தன்மை, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்கிறது. வழக்கமாக இருப்பதை விட ஒரு நோயாளியின் உடலில் ஏதேனும் மாறுபாடு இருக்குமானால், அதை உடனே மருத்துவரோ, செவிலியரோ தெரிந்து கொள்ள
முடியும். தேவையான சிகிச்சையை உடனே செய்ய முடியும்'' என்கிறார் இந்தக் கருவியை உருவாக்கிய முதித் தந்த்வாதே.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, உடல்நிலை பற்றிய 250 தரவுகளை ஒருநிமிடத்தில் உடலிலிருந்து எடுத்துக் கொள்கிறது. அரை நிமிடத்தில் அதைப் புரிந்து கொள்கிறது. உடனே அந்தத் தகவலை வெளிப்படுத்துகிறது. ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் நூறு முறை நோயாளியின் உடல்நிலையைப்பற்றிய தகவல்களை அது வெளிப்படுத்துகிறது.

""ஒரு மருத்துவரோ, செவியரோ அவசரச் சிசிச்சைப் பிரிவில் உள்ள 50 நோயாளிகளைக் கவனித்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒரு நோயாளியின் உடல்நிலை பற்றிய தகவலை நேரடியாகத் தெரிந்து கொண்டு மீண்டும் அவரைப் பார்க்க குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளியாவது தேவைப்படும். அதாவது, முதல் நோயாளியின் உடல்நிலையை அவர் பார்த்த பிறகு, மீதமுள்ள 49 நோயாளிகளின் உடல்நிலையைப் பார்த்துவிட்டு மீண்டும் முதல் நோயாளியைப் பார்க்க அவர் திரும்பி வர குறைந்தது 2 மணி நேரமாகும். இந்த இடைவெளியில் ஒரு நோயாளிக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம்.

ஆனால் இந்தக் கருவி ஒவ்வொரு நிமிடமும் நோயாளியின் உடல்நிலையைத் தெரியப்படுத்திவிடுகிறது. அதைவிட முக்கியமானது, நோயாளியின் படுக்கை அருகே வராமல் மருத்துவமனை வளாகத்தின் வேறு பகுதியில் உள்ள ஒரு பெரிய திரையில் மருத்துவமனையில் உள்ள 250 நோயாளிகளின் உடல்நிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தக் கருவி உதவுகிறது.

அது மட்டுமல்ல, ஏதாவது ஒரு நோயாளியின் உடல் நிலையில் வழக்கத்தை விட மாறுபாடு ஏற்பட்டு, ஆபத்தான நிலை ஏற்படுகிறது என்றால் இந்தக் கருவியிலிருந்து தகவல்கள் மருத்துவரின் செல்லிட பேசிக்கு உடனே சென்று எச்சரிக்கை செய்துவிடும்.

வசதியுள்ள நோயாளிகள் வீட்டிலிருந்தே சிகிச்சை செய்து கொண்டால், அவர்கள் படுக்கையின் கீழே இந்தக் கருவியைப் பொருத்திவிட்டால், தொலைவில் உள்ள மருத்துவர் இந்தக் கருவியின் மூலமாக நோயாளியின் உடல் நிலை பற்றித் தெரிந்து கொண்டு தகுந்த சிகிச்சை அளிக்க உடனே வர முடியும்'' என்கிறார் முதித் தாந்த்வாதே.

""நமது நாட்டில் உள்ள 20 லட்சம் மருத்துவமனைகளில் 1 லட்சம் அவசரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள நோயாளிகளின் உடல் நிலையை மட்டுமே தற்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. கரோனா தொற்றின் காரணமாக தற்போது ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்து விடுகின்றனர். அவர்களுக்குத் தேவையான அவசரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை அல்ல, சாதாரண படுக்கைகளையே தர முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய மருத்துவப் பணியாளர்களும் இல்லாதநிலையில், இந்தக் கருவி அதிக அளவு நோயாளிகளின் உடல் நிலையை மிக விரைவில் கணக்கிட்டு உடனுக்குடன் தெரியப்படுத்திவிடுவதால், இது மிகவும் பயன்படக் கூடிய கருவியாக உள்ளது'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

""கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகத்தான் இந்தக் கருவி உரிய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ், ஸ்ரீ ஜெயதேவா கார்டியோவஸ்குலர் சயின்ஸஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனை உள்பட, நம்நாட்டில் உள்ள 150 மருத்துவமனைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. வீட்டிலிருந்து மருத்துவம் பார்க்கும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும் இது பயன்படுகிறது'' என்கிறார் முதித் தந்த்வாதே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT