இளைஞர்மணி

வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கு...!

கோமதி எம். முத்துமாரி

கரோனாவுக்கும் மக்களுக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் முதல்முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது,  "வீட்டிலிருந்து வேலை' செய்யும் முறை அறிமுகமானது. கரோனா பெருந்தொற்று 
காரணமாக ஓராண்டைக் கடந்து  தொடர்ந்து வரும் இந்த நடைமுறை, எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலையே உள்ளது.   
முதலில் சற்று சிரமமாக இருந்த பலரும் இப்போது பழகிவிட்டது என்று கூறு
கின்றனர். கரோனா தொற்றிலிருந்து தப்பிக்கவும், அடிப்படை வாழ்வாதாரத்துக்கு தேவையான வருமானம் கிடைக்கவும் இதைத் தொடரத்தான்  வேண்டியிருக்கிறது.  
வீட்டில் இருந்து வேலை செய்வது பல சாதக, பாதக அம்சங்களைக் கொண்டிருந்தாலும் இப்போதைய மோசமான சூழ்நிலைக்கு இதுவே பாதுகாப்பானது.  
கரோனா தொற்று முழுவதும் இவ்வுலகத்தை விட்டு நீங்கி, பொருளாதாரம் சீராகும் வரை இந்த நிலைமை தொடரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  
வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள்  தங்கள் வேலையையும், குடும்பத்தையும் ஒருங்கே கவனித்துக் கொள்ள சில யோசனைகள்...

பணிச்சூழலை உருவாக்குங்கள்: 

வீட்டில் வேலை செய்ய பலருக்கும் முதல் தடையாக இருப்பது பணிச் சூழல் இல்லாமை. அதாவது, அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வது போல இருக்காது என்பதே பலரின் கருத்து. அந்தவகையில் நீங்கள் வீட்டிலேயே உங்களுக்கான ஒரு பணிச் சூழலை உருவாக்குங்கள். மேசை, நாற்காலி, கணினி அல்லது லேப்டாப் உள்ளிட்ட தேவையான பொருள்களை ஒருங்கிணைத்து  தனியே ஓர்அறையில் ஏற்பாடு செய்யுங்கள். இந்த பொருள்களை ஒரே இடத்தில் வைத்தும் பராமரியுங்கள். 

ஒரு வேலையை மட்டும் செய்யுங்கள் :

ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்வது உங்கள் வேலையைத் துல்லியமாக சிறப்பாக முடிக்க உதவும்.  உதாரணமாக காணொலி வாயிலாக அலுவலகக் கூட்டத்தில் இருக்கும்போது, மற்றொரு பக்கம்  ஒருவருக்கு மெயில் அனுப்ப முற்படுவீர்கள் என்றால்,  இரண்டிலும் உங்களுடைய கவனம் இருக்காது. இரண்டு வேலைகளிலும் ஏதேனும் தவறு நடக்க நேரிடலாம். தவறு செய்து மேலதிரிகாரியின் பேச்சுக்கு ஆளாவதை விட ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் எளிதாகவும் விரைவாகவும் துல்லியமாகவும் முடிக்க முடியும். 

திட்டமிட்டுக் கொள்ளுங்கள்:  

இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் 8 மணி நேரம் என்று இருப்பதால் முறையாகத் திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடித்து விட்டுக் கிளம்பிவிட முடியும்.  

ஆனால், வீட்டில் தானே இருக்கிறோம்; பொறுமையாக செய்து
கொள்ளலாம் என்ற நிலைப்பாடு பலரிடம் உள்ளது. இதனை 
முதலில் விட்டுவிடுங்கள்.  

அலுவலகத்தில் இருப்பதுபோன்று இன்று என்னென்ன வேலைகள் இருக்கின்றன, எந்தெந்த நேரத்தில் என்ன வேலையைச் செய்ய வேண்டும் என  முறையாகத் திட்டமிட்டு வேலையைச் சரியான நேரத்திற்கு முடித்து விடுங்கள். 

குழுவின்  நலன் முக்கியம்: 

நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைவராகவோ அல்லது ஒரு குழுவின் தலைவராகவோ இருந்தால் குழுவின்  நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். முறையாக குழுவில் அனைவருடைய பணி நேர அட்டவணையை முன்கூட்டியே  திட்டமிட்டுக் கொடுத்துவிடுங்கள். பணி நேரம் தவிர முடிந்தவரை அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். குழுவாகத் திட்டமிட்டு பணியாற்றினால் அனைவரும் தங்களுடைய அலுவலக மற்றும் தனிப்பட்ட வேலைகளை சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.  
மேலும் கரோனா காலத்தில் பெரும்பாலானோருக்கு ஊதிய குறைப்பு, விடுமுறை உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்துள்ளன. எனவே இந்த கரோனா காலம், ஊரடங்கு எல்லாம் சரியான பின்னர், அலுவலக ஊழியர்களுக்குத் தேவையானவற்றை நிறுவனத் தலைவர்கள் செய்து தர உறுதி கூறுங்கள். 

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு  :

வீட்டில் இருந்து வேலை செய்வதில் அடுத்த முக்கியமான பிரச்னை குடும்பத்தினர் வந்து தொந்தரவு செய்வது.
அலுவலக காணொலி உரையாடலில் மேலதிகாரி கேள்வி கேட்கும்போது,  குழந்தை வந்து தொந்தரவு செய்வது, 
யாரேனும் அழைப்பது என்ற துரதிர்ஷ்டமான சூழ்நிலைகளை 
பலரும் சந்தித்திருக்கலாம்.  
எனவே இதனைத் தவிர்க்க உங்களுடைய பணி நேரத்தை முன்கூட்டியே வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுங்கள். அந்த நேரத்தில் அவசியமின்றி யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிடுங்கள். அலுவலக நேரத்தில் அலுவலக வேலைகளில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும் என்று கூறி குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு பணிபுரியுங்கள்.  

இடைவேளை அவசியம் :

வீட்டிலிருந்து வேலை செய்வோர் பலரும் செய்யும் தவறு சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதில்லை. அலுவலகம் என்றால் காலை, மாலை 10 நிமிடம் தேநீர் இடைவேளை, பிற்பகல் 1 மணி நேரம் உணவு இடைவேளை என உங்களுக்கான நேரத்தை சரியாக எடுத்துக் கொள்வீர்கள். ஆனால் வீட்டில் நீங்கள் தான் திட்டமிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.  
எனவே, குறைந்தது இந்த மூன்று முறையாவது சரியாக இடைவேளையை எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுடன் தேநீர் மற்றும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையில் இருந்து எழுந்து 2 நிமிடம் நில்லுங்கள். பணியைவிட உங்கள் உடல், மனநலம் முக்கியம் என்பதை மறந்துவிட வேண்டாம். 

உங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்: 


கரோனாவினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு "வீட்டிலிருந்து வேலை' என அறிவிக்கப்பட்டதும் பலரும் பல மனக் கணக்குகளைப் போட்டிருப்பர். அதாவது, அலுவலக வேலையுடன் நம்முடைய தனிப்பட்ட வேலைகளில் அதிகம் கவனம் செலுத்த முடியும், போக்குவரத்து அலைச்சல் எல்லாம் இல்லை என்பதால் நேரம் கிடைக்கும் என்று.  
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி, எப்போது அலுவலகத்துக்குச் செல்வோம் என்ற நிலை  ஏற்பட்டுவிட்டது. மின்னஞ்சல்கள் நிரம்பி வழிகின்றன; காணொலி கூட்டங்கள் நேர காலமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; பணியில் இல்லாத நேரத்திலும் அவசர வேலைகள் வருகின்றன. சொல்லப் போனால் தூங்கும் நேரம் தவிர அலுவலகம் குறித்தே பெரும்பாலானோரின் சிந்தனை இருக்கிறது. இதுவே பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது.  
எனவே, உங்களுக்கான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். 8 மணி நேரம் வேலை தவிர, அதைத் தாண்டி எஞ்சிய நேரங்களில் உங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்யுங்கள், உதாரணமாக நல்ல தூக்கம், உடற்பயிற்சி, புத்தகம் படிப்பது, நண்பர்களுடன் உரையாடல், பொழுதுபோக்கு என கவனம் செலுத்துங்கள்.

குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குங்கள்: 

மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உணரும்போது வாழ்தல் இனிதாகிறது. அப்படிப்பட்ட வாழ்க்கையைக் கொடுப்பது குடும்பத்தினரும் நண்பர்களும்தான். மேலும் இந்த நேரம் உங்களுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. பரபரப்பான உலகில் வாழ்ந்து சலித்த பலருக்கும் இது சற்று ஆறுதலாக இருக்கும். வெளியூரில் பணிபுரியும் பலரும் தங்களுடைய பெற்றோரின் ஏக்கத்தைப் போக்கும் நேரம். எனவே, பணி நேரம் முடிந்து செல்போன், டிவி என்று இல்லாமல் அவர்களுடன் நேரத்தைச் செலவழியுங்கள்.  குடும்பத்தினரின் தேவைக்காகவே பெரும்பாலானோர் பணிபுரிவதை மறந்துவிட வேண்டாம்.  
நாளை நிச்சயமில்லாத இந்த மனித வாழ்க்கையில் இந்த நிமிடத்தை மகிழ்ச்சியாகக் கடக்க முயற்சிப்போம்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT