இளைஞர்மணி

பொறியியல் பட்டதாரியின் சாதனை!

தினமணி

உலக அளவில் குறைந்து கொண்டே வரும் இயற்கை வளம், தண்ணீர். "தண்ணீரை மிச்சப்படுத்துங்கள்... தண்ணீரை மிச்சப்படுத்துங்கள்' என்று  எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால்,  தண்ணீரை மிச்சப்படுத்துவதற்கான செயல்முறைகளை நடைமுறையில் பலரும் கடைப்பிடிப்பது இல்லை.  

அதிலும்  ஒரு நாளைக்கு ஓரிரு முறைகள் கைகளை கழுவிய காலம் போய், கரோனாவால் பலமுறை கைகளை நன்றாகக் கழுவ வேண்டிய கட்டாயத்துக்கு நாம்  தள்ளப்பட்டு இருக்கிறோம்.  
இந்நிலையில் நாம் கைகழுவும் தண்ணீரில்  95 சதவீதம் தண்ணீரை மிச்சப்படுத்துவதற்கான  தண்ணீர்க் குழாய்களை உருவாக்கி அளித்து வருகிறார்அருண் சுப்ரமணியன்.

சென்னையில்  "எர்த் ஃபோகஸ்' என்ற நிறுவனத்தை நடத்திவரும் அவரிடம் பேசியதிலிருந்து...
"நான் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் பட்டப் படிப்பை 2017 } இல் முடித்தேன்.   படிக்கும் காலத்திலேயே ஏதேனும் புதிய புராஜெக்ட்களைச் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். பொறியியல் இறுதியாண்டு பயிலும்போது வீணாகும் உணவை உரமாக மாற்றி விவசாயிகளுக்குப் பயன்படும்  இயந்திரம் ஒன்றை நான் தயாரித்தேன்.  இது பலருடைய பாராட்டுதல்களைப் பெற்றது. அது எனக்கு ஊக்கமளித்தது. 

படிப்பை முடித்த பிறகு, உலக அளவில் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்து வரும்நிலையில் தண்ணீரை மிச்சப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  என் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னேன். அவர் அளித்த தூண்டுதலின் பேரில்  தண்ணீர்க் குழாய் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தேன்.  குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுவதற்குப் பதிலாக, பனி மாதிரி தண்ணீர் குழாயிலிருந்து கொட்டும்.  கை கழுவுவதற்கு இது நன்றாக உள்ளது என்று அவரும் அதைப் பயன்படுத்தியவர்களும் சொன்னார்கள்.  அதை மேலும் சிறப்பாக மாற்ற  என்னுடன் கல்லூரியில் பயின்ற ரோஹனுடன் இணைந்து 6 மாதம் கடும் முயற்சி செய்து  ஒரு குழாயை உருவாக்கினேன்.

அதை நான் பயின்ற எம்ஐடி பேராசிரியர் சங்கீத்திடம் காட்டினேன்.  அவர் வெகுவாகப் பாராட்டினார்.  "படித்துவிட்டு வேலைக்குப் போவதைவிட,  ஏதேனும் தொழில் செய்து தொழில்முனைவோராகுங்கள்' என்று அடிக்கடி அவர் சொல்வார். அவர் தந்த ஊக்கத்தில் அந்தக் குழாயை எல்லாரும் பயன்படுத்தும்விதமாக எப்படித் தயாரிக்கலாம் என்று அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.
எத்தனை விதமான தண்ணீர்க் குழாய்கள், என்ன என்ன அளவுகளில் இப்போது பயன்படுத்தப்படுகின்றன என்ற மார்க்கெட்டிங் ரிசர்ச்சில் ஈடுபட்டோம். எங்கள் கல்லூரியில் பயின்ற சீனியர் சத்தீஷின் உதவியுடன் கம்ப்யூட்டர் சிமுலேஷன் முறையில் பலவிதமான மாடல்களை உருவாக்கி, இறுதியில் "குவா மிஸ்ட்' என்ற தண்ணீர்க் குழாயை உருவாக்கினோம். 

இந்த  "குவா மிஸ்ட்' தண்ணீர்க் குழாயை வீடுகளில் பயன்படுத்தலாம்.  இதில் பனி போல தண்ணீர் வெளியே வரும்.  தேவைப்படும்போது, குழாயைக் கொஞ்சம் அதிகம் திருகினால் அதிகம் தண்ணீர் வரும்.  இதற்கு அடுத்தபடியாக நாங்கள் உருவாக்கியது  "ஈகோ மிஸ்ட்'  குழாய். இந்தக் குழாயை சென்னையில் உள்ள காக்னிசென்ட்  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 2019 } இல் பொருத்தினோம்.  அவர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய தண்ணீரை பத்துமடங்கு குறைத்தோம்.  அதாவது 100 டாங்க் தண்ணீர் பயன்படுத்தப்பட்டதை 10 டாங்க் தண்ணீராகக் குறைத்தோம். 

சாதாரணமாக ஒரு குழாயில் 1 நிமிடத்துக்கு 8 இலிருந்து 10 லிட்டர் தண்ணீர் வெளிவரும். நாங்கள் தயாரித்தளித்த குழாயில் ஒரு நிமிடத்துக்கு 400 மி.லி. தண்ணீரே வெளிவரும்.  தண்ணீரை மிச்சப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,  தண்ணீரை பம்ப் செய்வதற்கான மின்சாரப் பயன்பாடும், மின்சாரச் செலவும் இதனால் குறைந்தது. பயன்படுத்திய தண்ணீரை ஐடி நிறுவனங்களில் 
தூய்மைப்படுத்துவார்கள்.  அதற்குப் பயன்படுத்தப்படும் ரசாயன பொருள்களின் அளவும் எங்கள் தண்ணீர்க் குழாயின் பயன்பாட்டால் குறைந்துவிட்டது. 

காக்னிசென்ட் நிறுவனத்திற்குப் பிறகு பல ஐடி நிறுவனங்களுக்கு நாங்கள் தண்ணீர்க் குழாய்களைத் தயாரித்துத் தந்தோம். கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பல தடவைகள் கை கழுவ வேண்டியிருக்கிறது.  இதற்காக சிறிது அதிகம் தண்ணீர் வருகிற மாதிரி } அதாவது 80 சதவீதம் தண்ணீரை மிச்சப்படுத்துகிற மாதிரியான ஈகோமிஸ்ட் குழாய்களைத் தயாரித்தோம். 

நாங்கள்   ஈகோபிராஸ் எனப்படும் பித்தளையால் தண்ணீர்க் குழாய்களைத் தயாரிக்கிறோம்.  இந்த பித்தளையில் காரீயம் இருக்காது. ஆட்டோமிஷேசன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.  அதாவது அதிக அழுத்தத்துடன் வெளிவரும் தண்ணீரைக் குறைந்த அழுத்தமுடையதாக மாற்றுகிறோம். இதனால் ஒரு துளி தண்ணீர் பல்லாயிரம் துளிகளாக மாறுகிறது. சாதாரணமான தண்ணீர் குழாய்களில் இருந்து வெளிவரும் அதிகத் தண்ணீரினால்  குழாய்களில் தண்ணீர் வெளிவரும் பகுதியில் உப்பு படிந்துவிடுவது அதிகமாக இருக்கும். நாங்கள் உருவாக்கியுள்ள குழாய்களில் மிக மிகக் குறைந்த அளவே உப்பு படியும். அதைத் தூய்மைப்படுத்துவதும் மிகவும் எளிது. 

நாங்கள் உருவாக்கியுள்ள குவாமிஸ்ட் 360 டிகிரி குழாயை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளலாம். 
சென்னை ஐஐடியின் உதவிக்காக 2019 - இல் நாங்கள் விண்ணப்பித்தோம்.  அது எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.  தொழில்நுட்ப உதவி,  வங்கிக் கடன் உதவி என  பல 
உதவிகளைச் செய்கிறார்கள். 

நாங்கள் தயாரித்திருக்கிற தண்ணீர்க் குழாய்களுக்காக பெரிய அளவில் விளம்பரம் எதுவும் செய்வதில்லை. முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக எங்களைப் பற்றி பலர் தெரிந்து கொள்கிறார்கள். ஏற்கெனவே ஒருமுறை வாங்கி பயன்படுத்தியவர்கள் சொல்லி,  எங்களிடம் தண்ணீர்க் குழாய்களை கேட்டு வருகிறவர்களே அதிகம். பொறியியல் படித்து முடித்தவுடன் ஏதாவது  வேலைக்குப் போய் கைநிறைய நான் சம்பாதிக்கவில்லையே என்ற வருத்தம் என் குடும்பத்தாருக்கு முதலில் இருந்தது. 
இப்போது அது போய்விட்டது'' என்கிறார் மகிழ்ச்சியாக அருண்சுப்ரமணியன்.

- ந.ஜீவா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT