இளைஞர்மணி

தீர்வுகளே... தீர்வு!

DIN

வாழ்க்கைப் பயணம் மிகவும் அழகானது. ராட்டினத்தில் பயணம் மேற்கொள்வதைப் போலத்தான் வாழ்க்கைப் பயணமும். ராட்டினப் பயணம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருப்பதற்கு ஏற்றமும் இறக்கமும் தான் காரணம்.

"ராட்டினத்தில் மேலேயே தான் இருப்பேன்; கீழே வரவே மாட்டேன்' என்று சிலர் கூறலாம். ஆனால், உயரத்தில் அதிக நேரம் இருந்தால் பயம் மட்டும்தான் வருமே தவிர, மகிழ்ச்சி காண முடியாது.
ராட்டினத்தில் மேலும் கீழும் மாறி மாறி சுற்றி வந்தால்தான் மகிழ்ச்சி. வாழ்க்கையும் ராட்டினப் பயணம்தான். ஏற்றமும் இறக்கமும் கவலையும் மகிழ்ச்சியுமாக மாறி மாறி வருவதே வாழ்க்கையை சுவாரசியமாக்கும்; அழகாக்கும். 

வாழ்வில் ஆயிரம் துன்பங்கள் வரும்; ஆயிரம் இன்பங்களும் வரும். ஆனால் பலர் இன்பங்களில் கவனம் செலுத்துவதை விட, கவலைகளிலேயே கவனத்தைக் குவிப்பதால், வாழ்க்கை முழுவதுமே துன்பமயமானதாகத் தோன்றிவிடுகிறது. 

பிரச்னைகள் நிறைய... காரணங்களும் நிறைய...அன்றாட வாழ்க்கையிலேயே எவ்வளவோ பிரச்னைகளைச் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. சமூகத்தில் நடக்கிறவற்றைக் கண்டால் பிரச்னைகள் அதிகமாக 
இருப்பதாகவே தோன்றும். தனிப்பட்ட பிரச்னைகள் பலவற்றுக்கு அப்பால் பருவநிலை மாறுபாடு, புவி வெப்பமயமாதல், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், குற்றச் செயல்கள் என பல்வேறு சமூகப் பிரச்னைகளையும் ஒருவர்  எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

தீர்வுகளே... தீர்வு:
அவை பிரச்னைகளாக இருப்பதற்கான முக்கியக் காரணம், அவற்றுக்கு உரிய தீர்வுகள் காணப்படாததே. பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல்வதே மகிழ்ச்சிக்கான முதல் அடி. தனிப்பட்ட பிரச்னைகளோ சமூகப் பிரச்னைகளோ, நம் மகிழ்ச்சியைச் சீர்குலைக்கும். பிரச்னைகளுக்கு நாம்தான் தீர்வைக் கண்டறிய வேண்டும். அத்தீர்வை எட்டிவிட்டால் மகிழ்ச்சி கிடைக்கும். அது ஒரு பாடமாக, படிப்பினையாக அமையும். அதே போன்ற பிரச்னை எதிர்காலத்தில் வந்தால், அதையும் எளிதில் சமாளித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். சில கால மகிழ்ச்சிக்குப் பிறகு அடுத்த பிரச்னை தோன்றும். அதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டிய சூழல் உருவாகும். இதுவே வாழ்க்கையின் பயணம். 

ஒரே நேரத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்வோரும் உண்டு. ஆனால், சரியான நேரத்தில் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் இருப்பவர்களுக்கே அவ்வாறு தோன்றும். அந்தந்த சமயத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளுக்கு அப்போதே தீர்வு கண்டுவிட்டால், பெரும் பிரச்னை என்று எதுவும் ஏற்பட்டுவிடாது. பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

எதில் கவனம் செலுத்த வேண்டும்?
பிரச்னையை எதிர்கொண்டால் மட்டுமே மனிதர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயங்குபவர்களும் அச்சம் கொள்பவர்களும் துன்பத்தில் சிக்கித் தவிப்பவர்களாகவே இருப்பார்கள். 
 வாழ்க்கையில் நம்மை மேம்படுத்துவது எது, நமக்கு மகிழ்ச்சி தருவது எது என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக்கும். நமக்குத் துன்பத்தை அளிக்கும் விஷயங்களில் கவனத்தைச் செலுத்தவே கூடாது. 

கவனம் அங்கு சென்றால், அதை உடனே திசை திருப்ப வேண்டியது கட்டாயம். கடந்தகால நினைவுகளும் எதிர்காலக் கனவுகளும் நமக்கு எப்போதும் தடைக்கற்களாகவே இருக்கும். அவை நிகழ்காலத்தில்
நம்மைப் பயணிக்கச் செய்யாமல் ஒரே இடத்தில் தேக்கி வைத்துவிடும். கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் நாம் மிகச் சொற்பமான பங்களிப்பை மட்டுமே வழங்க வேண்டும். அவற்றைப் பற்றி சிந்திக்காமலேயே இருப்பது மிகவும் நல்லது.  நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது ஒன்றே நம்மை வெற்றியடையச் செய்யும். 

சுயபரிசீலனை அவசியம்!
வாழ்க்கைப் பயணத்தில் அவ்வப்போது நம்மை நாமே பரிசோதித்துக் கொள்வது அவசியம். காலையில் எழுந்தபோது இருந்ததை விட படுக்கைக்குச் செல்லும்போது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளோமா, புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோமா என்பதை ஆராய்ந்து கொள்ள 
வேண்டும். 

அதேபோல், கடந்த ஆண்டில் எவ்வாறு இருந்தோம், தற்போது அதை விட மேம்படுத்திக் கொண்டுள்ளோமா, கூடுதல் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளோமா, சிலரை விட்டுப் பிரிந்திருந்தால் அதற்கான காரணம் உள்ளிட்டவற்றை நாமே மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள நல்ல விஷயங்களைக் கண்டறிவோம். அவற்றை மேலும் வலுப்படுத்துவோம். மற்றவர்களிடமும் நல்ல விஷயங்களை மட்டுமே உற்று நோக்குவோம். அனைத்து மனிதர்களையும் அவ்வாறே அணுகுவோம். நல்லவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினால், வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். 

-சுரேந்தர் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT