இளைஞர்மணி

பொது அறிவு...

4th May 2021 06:00 AM

ADVERTISEMENT

 

 இணையதளம்!

போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் பொது அறிவுச் செய்திகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அவற்றை செய்தித்தாள்கள், இதழ்களில் படிப்பது மட்டுமின்றி, அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் இளைஞர்களும் உண்டு.  இப்போது உலகமே இணையதளங்களை மையமாகக் கொண்டு சுழல்வதால்,  பொது அறிவுச் செய்திகளுக்கென்றே - அவற்றை மட்டும் முதன்மை உள்ளடக்கமாகக் கொண்டு ஓர் இணையதளம் செயல்பட்டு வருகிறது.  

இந்த இணையதளத்தில் பெரும் கேள்விகள், புதிர்கள், வாழ்க்கை வரலாறுகள், பட்டியல், வியக்க வைக்கும் உண்மைகள் என்று முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. பெரும் கேள்விகள் எனும் தலைப்பில், இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஏன் இரண்டு பிறந்த நாட்கள்? இடது கை பழக்கமுடையவர்களை சவுத்பாஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வது ஏன்? வெள்ளை முட்டைக்கும், காபி நிற முட்டைக்கும் என்ன வேறுபாடு? நாய்கள் ஏன் கொட்டாவி விடுகின்றன? அனுதாபம் - பச்சாதாபம் ஆகியவற்றுக்கான வேற்றுமைகள் எவை?   ஜனவரி 1 அன்று புத்தாண்டு தொடங்குவது ஏன்? உண்மைக்கும் காரணிக்கும் என்ன வேறுபாடு? முகக்கவசத்தை  எப்போது மாற்ற வேண்டும்? மருத்துவர்கள் ஏன் வெள்ளை நிற மேலாடையை அணிகின்றனர்? விளையாட்டுப் போட்டிகளில் தேசிய  கீதம் பாடப்படுவது ஏன்? இடது அல்லது வலது என்று வாகனம் ஓட்டுவதற்கான பக்கத்தினை நாடுகள் எப்படித் தேர்வு செய்கின்றன? 

ADVERTISEMENT

கடிகாரங்களில் நேரம் 10.10 என்று வைக்கப்படுவது ஏன்? "ஒரு குழந்தை' கொள்கையினை சீனா எப்படிச் செயல்படுத்துகிறது? மாயக்கண் படங்கள் எப்படி அமைக்கப்படுகின்றன? லீப் ஆண்டாக இல்லாத ஆண்டுகளில், பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள் எந்த நாளில் பிறந்த நாளைக் கொண்டாடுவது? என்று பல்வேறு வித்தியாசமான கேள்விகளும் அதற்கான பதில்களும் விரிவாகத் தரப்பட்டிருக்கின்றன.  
புதிர்கள் எனும் தலைப்பில் பல்வேறு புதிர்களும், அதற்கான விடையளிக்கும் வசதிகளும் தரப்பட்டிருக்கின்றன. வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நூலாசிரியர்கள், படைவீரர்கள் என்று பல்வேறு முக்கிய நபர்களின் வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற்றிருக்கின்றன. பட்டியல் எனும் தலைப்பில் பல்வேறு தகவல்கள், எண்ணிக்கை அடிப்படையில் சுவையான உண்மைகளாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.

வியக்க வைக்கும் உண்மைகள் எனும் தலைப்பில் பல்வேறு செய்திகளுக்கான உண்மைத் தன்மைகள் விரிவாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர, விலங்குகள், தொல்லியல், கலை, கரோனா தீ நுண்மி, பொழுதுபோக்கு, உணவு, உடல் நலம், வரலாறு, மொழி, ஒலிம்பிக்ஸ், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம், பயணம் போன்ற தனித் தலைப்புகளின் கீழும் பல்வேறு செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதே போன்று, நீங்களே செய்யலாம் ( டூ இட் யுவர்செல்ஃப்)  எனும் தலைப்பின் கீழ், நமது அன்றாடப் பயன்பாட்டில் நாமாகவே செய்து கொள்ளக்கூடிய பல செய்முறைகளும் இடம் பெற்றிருக்கின்றன.        

போட்டித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருப்பவர்கள் மட்டுமின்றி, பொது அறிவுச் செய்திகளில் ஆர்வமுடைய அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த இணையதளத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் https://www.mentalfloss.com/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம். 

- மு. சுப்பிரமணி 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT