இளைஞர்மணி

உதவுங்கள்... நண்பருக்கு!

4th May 2021 06:00 AM

ADVERTISEMENT

 

"புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்; உயிரைக் கொல்லும்' என்ற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விளம்பரங்களை தொலைக்காட்சி, திரையரங்குகள் என பொது இடங்களில் பார்த்திருப்போம். இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் புகைப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. 

உண்மையில் உலக அளவில் ஒரு பெரும் சுகாதாரப் பிரச்னையாக இது உள்ளது. உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் 15% பேரின் இறப்புக்கு புகைப்பழக்கம் காரணமாக இருக்கிறது. உலகம் முழுவதும் 20-ஆம் நூற்றாண்டில் 10 கோடி பேர் புகைப்பிடித்தலினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 15 லட்சம் பேர் புகைப்பிடித்தலினால் உயிரிழக்கின்றனர் என்கிறது தரவுகள். புகையிலையை உற்பத்தி செய்வதிலும், நுகர்வதிலும் உலக நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்திலிருக்கிறது. புற்றுநோய் உயிரிழப்புகளில் நான்கில் ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்று கூறுகிறது மற்றோர் ஆய்வு. 

ADVERTISEMENT

மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் இளைஞர்களின் விகிதமும் அதிகமே. அந்தவகையில் இந்தியா பெருமைகொள்கிறது. ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்பது 
ஆண்டாண்டு கால உண்மை. சமீபத்திய தரவுகளின்படி, 25% இந்திய இளம் பருவத்தினர் புகையிலைப்  பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். 

இளைஞர்கள் புகைப்பழக்கத்தை விட்டொழிக்கும்படி செய்வதில் அவர்களுடைய  நண்பர்களின்  பங்கு மிக முக்கியமானது. அந்தவகையில் இளம் வயதினரிடம் உள்ள  புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த என்ன செய்யலாம் என்பதற்கு அவர்களுடைய நண்பர்களுக்கு சில யோசனைகள் இதோ...

தெளிவான நிலைப்பாடு 
உங்கள் நண்பர்  புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும்பட்சத்தில் அவரைப் புகைப்பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். அதன் பின்னர் அவரை எவ்வாறு 
மீட்டெடுப்பது என்பது குறித்து சிந்தியுங்கள். 

விழிப்புணர்வு வேண்டும்
புகைப்பிடிப்பது ஒரு நவீன கலாசாரமாகவே மாறிவிட்ட நிலையில் இளம் வயதினருக்கு அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த  அவருடைய நண்பர்கள் அனைத்துவிதங்களிலும் முயற்சிக்க வேண்டும். 
தொலைக்காட்சி விளம்பரங்களில், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிரான வாசகங்கள்   இருந்தாலும், புகைப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை   நேரடியாக உங்கள் நண்பருக்கு எடுத்துக் 
கூற வேண்டும். 

90% பேர் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றே விரும்புகின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  உங்கள் நண்பரின்  பிற நண்பர்களுடன் ஒரு நல்ல நட்புறவை நீங்கள் கொண்டிருப் பது அவர்களின் நடவடிக்கைகளைக் கண்கா ணிக்க உதவும். மேலும்,  நீங்கள் நேரடியாக உங் கள் நண்பரிடம் பேசுவதுடன்,  உங்கள் நண்பரின் பிற  நண்பர்கள் மூலமாகவும் உங்களுடைய கருத்துகளை அவர்களிடம் எளிதாகக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பது பழமொழி நண்பர்கள் என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் பண்பு பலரிடமும் இருக்கிறது. எனவே, உங்கள் மூலமாக உங்கள் நண்பரின் தீய பழக்கத்தை மாற்ற முடியும்.   

விழிப்புடன் இருங்கள்
தாங்கள் செய்வது தவறு என்று பெரும்பாலான இளம் வயதினருக்குத் தெரியும். எனவே, அவர்கள் இது தவறு என்று சிந்திக்கும் நேரத்தில் அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி அதிலிருந்து மீள அவருடைய நண்பர்கள் உதவ வேண்டும். 

தனிமையில் உதவுங்கள் 
பெரும்பாலான இளம் வயதினர் தனிமை மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும்போதுதான் போதை, புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதாக  ஆய்வுகள் கூறுகின்றன.  எனவே, அம்மாதிரியான சூழ்நிலைகளில் உங்கள் நண்பரைத் தள்ளி விட வேண்டாம். குறிப்பாக மன அழுத்தத்தில் இருக்கும்போது அவருக்கு ஆதரவாக இருந்து, அந்த மன அழுத்தத்தில் இருந்து அவர் விடுபட உதவுங்கள்.  

கலந்துரையாடல் அவசியம் 
புகைப்பழக்கத்தில் உள்ள தீமைகள் குறித்து உங்கள் நண்பருடன் கலந்துரையாட வேண்டும். பாதிப்புகளை உதாரணத்துடன் அவர்களுக்கு எடுத்துரைக்கும்போதும் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலமும் அது அவர்களுடைய  மனதில் சென்று நன்கு பதியும். 

உடனடியாக உங்கள் நண்பரிடம் மாற்றம் 
ஏற்பட்டு விடும் என்று   எண்ண வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். இது உங்கள் நண்பரின் உடல்நலத்துடன் தொடர்புடையது என்பதை மறந்துவிட வேண்டாம். 
புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு...

புகைப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் தெரிந்தும் அதனைப் பயன்படுத்துகிறீர்கள். ஏதோ ஒரு சூழ்நிலை தான் உங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிடுகிறது. ஆனால், கடினமான சூழ்நிலைகளை கடக்க புகைப்பழக்கம் ஒரு தீர்வு அல்ல என்பதை முதலில் உணருங்கள்.  

கொஞ்சம் கொஞ்சமாக புகைப்பழக்கத்தை விடலாம் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். முடிவெடுத்துவிட்டால் முழுவதுமாக ஒருகணத்தில்  விட்டொழியுங்கள்.  புகைப்பதை விட்டுவிட முடிவு செய்யும் நேரத்தில் கையிருப்பில் உள்ள புகைப்பொருள்களை அழித்துவிடுங்கள். 

புகைப்பிடிப்பதை தூண்டும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். உங்களுடைய உணவு பழக்க, வழக்கங்களை சற்று மாற்றிக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி, புத்தங்களைப் படித்தல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கென ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக்கொண்டு அதனை அடைய முயற்சி செய்யலாம். 

புகைப்பிடிப்பது ஒரு நவீன கலாசாரம் என்று கூறும் நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில் உங்களுக்குப் பிடித்த கதாநாயகன் புகைப்பிடித்தால் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக அதைச் செய்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கதாநாயகன்  மது அருந்தினால் நீங்களும் மது அருந்த வேண்டிய அவசியம் இல்லை. நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டிய மனப்பக்குவம் உங்களுக்கு ஏற்பட  எப்போதும் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கப் பழகுங்கள். 

எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நிலையில் கூட, செயற்கை வாழ்க்கைமுறையால் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் இந்த காலத்தில் உயிர்கொல்லியான புகைப்பழக்கத்தால் உங்களுடைய ஆயுள்
காலத்தை குறைத்துக் கொள்ள வேண்டாமே!

- கோமதி எம்.முத்துமாரி
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT