இளைஞர்மணி

புதிய ஸ்பெக்ட்ரோகிராப் கருவி!: இந்திய வானியற்பியல் துறையில் தற்சார்பு!

16th Mar 2021 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT


பிரபஞ்சத்தின் தொலைதூரத்திலிருந்து வரும் ஒளியின் மூலத்தைப் பதிவு செய்வதற்காக குறைந்த செலவில் ஸ்பெக்ட்ரோகிராப்கருவியை இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

தொலைதூரத்தில் உள்ள விண்மீன் திரள்கள், விண்மீன் திரள்களைச் சுற்றியுள்ள கருந்துளைகள், சூப்பர் நோவாக்கள் போன்ற காஸ்மிக் வெடிப்புகள், அதிக ஆற்றல் வாய்ந்த காமா கதிர் வெடிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஸ்பெக்ட்ரோகிராப் கருவிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற ஸ்பெக்ட்ரோகிராப் கருவிகள் இதுவரை வெளிநாடுகளிலிருந்து அதிக செலவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள கருவிக்கு ஆரிஸ்-தேவஸ்தால் என பெயரிடப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலில் உள்ள "ஆர்யபட்டா அப்சர்வேஷனல் சயின்ஸ் ஆராய்ச்சி மையம் (ஆரிஸ்)' வடிவமைத்துள்ள இந்தக் கருவி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவியைவிட இரண்டரை மடங்கு விலை குறைவானது.

நாட்டில் தற்போது உள்ள வானியல் ஸ்பெக்ட்ரோகிராப் கருவிகளில் இதுதான் பெரியது. நைனிடாலில் உள்ள 3.6 மீட்டர் நீளம் கொண்ட ஆப்டிகல் தொலைநோக்கியில் இக்கருவி அண்மையில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. சிறப்புக் கண்ணாடிகளால் ஆன பல லென்ஸூகளைக் கொண்ட இக்கருவி, வானிலிருந்து கிடைக்கும் தெளிவான படங்களைப் பதிவு செய்ய உதவும். வானத்தின் தொலைதூரத்திலிருந்து வரும் போட்டோன்கள் தொலைநோக்கியால் சேகரிக்கப்பட்டு, ஸ்பெக்ட்ரோகிராப் கருவியால் பல்வேறு வண்ணங்களாக வரிசைப்படுத்தப்படுகின்றன. இறுதியாக மின்னணுவாக பதிவு செய்யக்கூடிய சமிக்ஞைகளாக மாற்றப்படுகின்றன.

ரூ.4 கோடி மதிப்பிலான இக்கருவியை நைனிடாலில் உள்ள ஆரிஸ் மையத்தின் விஞ்ஞானி அமிதேஷ் ஓமர் தலைமையிலான குழுவினர் வடிவமைத்துள்ளனர். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கருவியை சொந்தமாக வடிவமைப்பது வானியற்பியல் துறையில் தற்சார்பு இலக்கை நோக்கி இந்தியா முன்னேறும் முக்கியமான நடவடிக்கை என ஆரிஸ் மையத்தின் இயக்குநர் தீபாங்கர் பானர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்ரோ, சில குறு-சிறு-நடுத்தர தொழிலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தேசிய நிறுவனங்கள், அமைப்புகள் இக்கருவிக்கான உபகரணங்களைத் தயாரிக்க பங்களித்துள்ளன. இந்தக் கருவியை வடிவமைத்ததில் கிடைத்த நிபுணத்துவத்தைக் கொண்டு ஸ்பெக்ட்ரோ போலரி மீட்டர், ஹை ஸ்பெக்ட்ரல் ரெசல்யூஷன் ஸ்பெக்ட்ரோகிராப் போன்ற சிக்கலான கருவிகளையும், நைனிடாலில் உள்ள ஆப்டிகல் தொலைநோக்கியில் எதிர்காலத்தில் நிறுவ ஆரிஸ் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT