இளைஞர்மணி

நல்ல மாற்றங்களை வரவேற்போம்!

வி.குமாரமுருகன்

இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கைமுறை போன்று வேறு எந்த இளைய தலைமுறையினருக்கும் இருந்ததில்லை என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பம் மிகுந்த உலகில் இன்றைய இளைய தலைமுறையினர் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தகவல் தொழில்நுட்ப புரட்சியும், இணைய கலாச்சாரமும், சமூக ஊடகங்களின் பெருக்கமும் இன்றைய இளைஞர்களுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றன.

தொழில்நுட்பப் புரட்சி:

இன்றைய இளைஞர்கள் உறவுகளாலும், பெற்றோர்களாலும், அக்கம் பக்கம் இருப்பவர்களாலும் வளர்க்கப்படுவதை விட, நவீன தொழில்நுட்பத்தால் வளர்க்கப்பட்டுவருகிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகள் டேப்லெட் மூலமாகவே வளர்கிறார்கள். ஸ்மார்ட்போன்களை இயக்குகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்தே இன்றைய இளைஞர்களின் கலாசாரம் இருக்கிறது. போன தலைமுறையினரின் கலாசாரத்தில் இருந்து இன்றைய இளைய தலைமுறையின் கலாசாரம் மாறுபட்டதாக இருக்கிறது. இளைஞர்கள் ஆன்லைன் மூலமே அனைத்தையும் செய்து வருகிறார்கள்.

சமூக ஊடகங்கள்:

தொழில்நுட்பத்தைத் தாண்டி சமூக ஊடகங்களும் நவீன கலாச்சாரத்திற்கு பெரும் பங்காற்றி வருகின்றன என்றே சொல்லலாம்.

கட்செவி அஞ்சல், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-ட்யூப் சேனல்கள் போன்றவற்றை பயன்படுத்தி தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை உலகிற்குப் பகிர்ந்து கொள்வதை இந்த இளைஞர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அத்துடன் இத்தகைய சமூக ஊடகங்கள் வழியாக வரும் செய்திகள் அல்லது தகவல்கள் மட்டுமே உண்மையானவை என்றும் கூட அவர்கள் நம்புகிறார்கள்.இன்றைய இளைஞர்களில் 67 சதவீதம் பேர்உலகில் நடக்கும் அனைத்தையும் இத்தகைய சமூக ஊடகங்கள் மூலமாகத் தான் தெரிந்து கொள்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உணவுக் கலாசாரம்:

உணவுக் கலாசாரம் என்பது கடந்த காலங்களைவிட மிகவும் மாறிவிட்டது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் வீடுகளில் அல்லது உணவகங்களில் குறிப்பிட்ட வகையிலான உணவுகளை மட்டுமே சாப்பிடும் நிலை இருந்து வந்தது . ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான வகைகளில் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய உணவுகளைத் தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகின்றனர். வேகமான கால ஓட்டத்திற்கு இணையாக ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரமும் பெருகிவிட்டது. வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து உணவைச் சாப்பிடும் கலாசாரம் தற்பொழுது இளைஞர்களால் குறிப்பாக இளம் பெண்களால் பெருமளவு விரும்பப்படுகிறது.
அதுபோல் உடை , முக அலங்காரம், முடி அலங்காரங்களிலும் புதுவிதமான கலாசாரங்களில் வேரூன்றி, கிளை பரப்பி வருகின்றனர்.

விளையாட்டு:

இளைஞர்களுக்கான விளையாட்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன.தெருக்களில் காலியாக இருக்கும் இடங்களில் இளைஞர்கள் கூடி விளையாடுவது எல்லாம் மறைந்து போய், மொபைல் போன்களில் விளையாடுவது பெருகிவிட்டது. அதுவும் ஆன்லைன் விளையாட்டுகள் மிகப்பெரிய கலாசார மாற்றத்தை இளைஞர்கள் மத்தியில்உருவாகி விட்டன. அதுவும் கூட சில விளையாட்டுகள் வெறித்தனமான விளையாட்டுகளாக உருவாக்கப்பட்டு இளைஞர்கள் மத்தியில் தேவையற்ற மன அழுத்தத்தையும், பதற்றத்தையும், உருவாக்கி கலாசாரச் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே யூ டியூப், நெட்பிக்ஸ் போன்றவை இளைஞர்களால் தொடர்ந்து விரும்பப்பட்டு வரும் நிலையில் நல்ல பல மாற்றங்களையும் அவை இளைஞர்கள்மத்தியில் ஏற்படுத்தத்தான் செய்துள்ளன.

"மாற்றம் ஒன்றே மாறாதது' என்று சொல்வார்கள். அன்றைய காலத்தில் கடிதம் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தன. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டது. நானோ செகண்டுகளில் தகவல்கள் உலகம் முழுவதும் பரவுவதற்கான டெக்னாலஜி வளர்ந்து விட்டது. அந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இளைஞர்களின் கலாசாரமும் மாறி வருகிறது. அதுபோல் சமூக ஊடகங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும், உணவு முறைகளும் மாறி விட்டன.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற வரிகளுக்கு ஏற்ப, புதிய விஷயங்களை உள்வாங்கி புதிய கலாசாரத்தில் நுழைவது என்பதை யாராலும் தடுக்க இயலாது.

சரியான கலாசாரம்:

கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், சுற்றுப்புறச்சூழல், குடும்பச் சூழல், ஏற்கெனவே சமூகத்தில் நிலவி வரும் கருத்துகள், சமகால நடைமுறை அனுபவங்கள் என பலவிதமான காரணங்களால் மனிதர்களின் மனப்பான்மையிலும், கலாசாரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள இன்றைய இளைஞர்களின் கலாசாரம் கூட, நாட்டில் வாழும் எல்லா இளைஞர்களாலும் கடைப்பிடிக்கப்படும் கலாசாரம் என்று கூறிவிட முடியாது. உதாரணமாக சமூக ஊடகங்களை ஒவ்வொருவரும் அவரின் ரசனை, தேவைக்கேற்பவே பயன்படுத்துகிறார்கள். எல்லாரும் ஒரே விஷயத்துக்காக அவற்றைப் பயன்படுத்துவதில்லை. எனவே இளைஞர்கள் எல்லாரும் ஒரே கலாசாரத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.

எது நமது அன்றாட வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கிறதோ, எது எதிர்கால வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தாததாக இருக்கிறதோ அதுவே சரியான கலாசாரம் ஆகும். இந்த அன்றாட வாழ்க்கை என்பது நபருக்கு நபர் மாறுபடக் கூடியதாக இருப்பதால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கலாசாரம், பழக்க வழக்கங்கள் இருப்பது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT