இளைஞர்மணி

சமூக ஊடகம்...: வீண் பொழுதுபோக்கு அல்ல!

கோமதி எம். முத்துமாரி


"உலகம் கைக்குள் அடங்கிவிட்டது' என்று கூறும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டிருக்கிறது. நொடிப் பொழுதில் உலக நிகழ்வுகள் விரல் நுனியில் வந்து சேர்கின்றன. தகவல் தொழில்நுட்பம் போன்று அனைத்துத் துறைகளும் இயந்திரமயமாகி மனிதனின் வேலைகளை எளிதாக்கி வருகின்றன.  

சாதாரண தொழிலாளி முதல் ஏவுகணைகளை அனுப்பும் அறிவியலாளர்கள் வரை தொழில்நுட்ப வளர்ச்சி பரந்து விரிந்திருக்கிறது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் அதே நேரத்தில் அதீத தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளும்   அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதில், தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதிக தொழில்நுட்ப பயன்பாட்டினால் இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது இன்றைய கசப்பான உண்மை.   

தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டினால் பணி எளிதாகி வேலை நேரம் குறைகிறது. நேரில் சென்று முடிக்க வேண்டிய பல வேலைகளை மொபைல் போனும் இணையமும் வெகு எளிதாக செய்து விடுகின்றன. இதனால் நமக்கு அதிக நேரம் கிடைக்கிறது. ஆனால், இளைஞர்கள் பலரும் அந்த நேரத்தைப் பயன்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் வீணடிக்கின்றனர்.  

சிறிது நேரம் ஆன்லைனில் இல்லை என்றால் இளைஞர்கள் பலரும் தனிமையை உணர்வதாகத் தெரிவிக்கும் இந்த சூழ்நிலையில்  சமூக ஊடகங்களின் பயன்பாட்டை இளைஞர்களிடையே குறைப்பது என்பது சவாலான காரியம்தான். எனினும் வாழ்வின் பிற்பகுதியில் நினைத்து வருந்துவதைவிட முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது.

சமூக ஊடகங்கள் தான் வாழ்க்கை என்று நினைக்கும் இளைஞர்கள் உண்மையில் வாழ்க்கையைச் செதுக்க வேண்டிய காலம் இது என்பதை மறந்துவிடுகின்றனர்.  

இந்த நிலை தொடர்வதால் இளைஞர்களுக்கு கவலை, மனச்சோர்வு அதிகம் ஏற்படுகிறது என்றும் இது அவர்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகம் பாதிக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   

தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டினால் பெரும்பாலானோருக்கு தூக்கம் கெடுகிறது. உங்களுக்குத் தெரியாமலேயே உங்களின் தூக்க நேரம் குறைகிறது. இது உங்களை சோர்வடையச் செய்து  உங்கள் செயல்பாடுகளைப் பாதிக்கிறது.  

நீங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே சில வேலைகளில் ஈடுபடுவீர்கள். உங்களை அறியாமலேயே உங்கள் கைகள் மொபைல் போனைத் தேடி ஓடி முகநூல் அல்லது 

இன்ஸ்டாகிராமை திறக்கச் செய்கின்றன. அதேபோல ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது அருகில் மொபைல் இருந்தால் அதை நோக்கியே உங்கள் கவனம் இருக்கும். இப்படி இருந்தால், நீங்கள் செய்யும் வேலையில் கவனம் இருக்காது.  

இக்கால இளைஞர்கள் எந்த இடத்திலும் பொறுமை காப்பதில்லை. ஏதேனும் ஒரு கடையிலோ, வங்கி ஏடிஎம்களிலோ வரிசையில் நிற்கும் அந்த சில நிமிடங்களில் கூட அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது மொபைல் போனும் சமூக ஊடகங்களும்தான். அந்த அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி உங்களுடைய நேரத்தை ஆக்கிரமித்துள்ளது. 

ஒரு சராசரி இளைஞர் ஒவ்வொரு வாரமும் 50 மணி நேரத்திற்கும் மேலாக தங்கள் தொலைபேசிகளில் நேரத்தைச் செலவழிக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் நம்முடைய எவ்வளவு வேலைகளைச் செய்ய முடியும் என்று யோசித்துப் பாருங்கள். 

அதேபோல தனிப்பட்ட வேலைகள் இருந்தாலும் வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு சமூக ஊடகங்களில் நேரம் செலவழிக்கவே எண்ணுகின்றனர் இன்றைய இளைஞர்கள். இது பொறுமையின்மைக்கு வலி வகுக்கும்.  

இளைஞர்களாகிய நீங்கள் உங்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்ள  உங்கள் செயல்களை அசைபோட, உங்கள் எதிர்கால கனவுகளை திட்டமிட, குறிப்பிட்ட நேரம் அவசியம். ஆனால், உங்களுடைய இந்த நேரத்தை தற்போது சமூக ஊடகங்கள் ஆக்ரமித்துக்கொள்கின்றன. 

எந்தவொரு படைப்பாற்றலுக்கும் திட்டமிடல் அவசியம். அந்த திட்டமிடலுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால் சாதனையை அடைய முடியாது. எனவே, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  

முந்தைய காலத்தில் உலக அறிவு என்பது தேடி பெற வேண்டியதாகியிருந்தது. இப்போது உலக அறிவு நம்மைத் தேடி வந்து கொண்டிருக்கிறது. இதற்கு தொழில்நுட்பம் ஒரு பாலமாக இருந்து செயல்படுகிறது. 

அந்த வகையில் இளைஞர்கள் உங்களுடைய அறிவைப் பெருக்கிக் கொள்ள, உலக நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள, உங்களுடைய துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.  தொழில்நுட்பம் நடுநிலையானது. தொழில்நுட்பத்துடனான உங்கள் உறவை சரியாக மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது.

மொபைல் போன் பயன்படுத்தும் நேரத்தை மதிப்பிட்டு அது உங்களுக்கு அவசியமா என்பதை முடிவு செய்யுங்கள். அறிவுப்பூர்வமாக பயனுள்ளதாக மட்டும் மொபைல் போனையும் இணையத்தையும் பயன்படுத்துங்கள். தேவைப்பட்டால் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுங்கள். 

இளமைக் காலத்தில் நேரத்தை எவ்வாறு பயன்படுத்தினோம் என்பதுதான் வாழ்க்கையில் இறுதிக் காலத்தில் நமக்கு நாமே கேட்கப்படும் கேள்வியாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

கவிஞர் தமிழ்ஒளி!

SCROLL FOR NEXT