இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 39: தலைமைத் திறன்

சுப. உதயகுமாரன்

தலைவர் எனப்படுபவர் அரசியலில் ஈடுபடுபவர் மட்டுமல்ல. அதேபோல, தலைமைத்துவம் என்பது அரசியலுக்கு மட்டுமே தொடர்புடையதும் அல்ல. நாம் அனைவருமே வாழ்வின் பல்வேறு தருணங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறோம். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தலைமைத்துவம் மிளிர்கிறது. தலைமைத்துவம் என்பது பொறுப்புணர்வு பொங்கியெழும் மனப்பாங்கும், தன்முனைப்பு கொண்ட செயற்பாடும்தான்.

தலையிடுவதுதான் தலைமைத்துவம்; தலையிடுகிறவர்தான் தலைவர். ராபர்ட் டக்கர் தலைமைத் திறன் என்பது மூன்று முக்கியமான திறன்களை உள்ளடக்கியது என்கிறார்: ஒன்று, பகுப்பாய்வு, ஒரு பிரச்னையைப் பகுப்பாய்வு செய்து தெளிவாகப் புரிந்துகொள்வது. இரண்டு, பரிந்துரைத்தல். அந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வுகளைப் பரிந்துரைப்பது. மூன்று, இணங்கச் செய்தல். தான் பரிந்துரைக்கும் தீர்வுகளை அமலாக்குவதற்கு மற்றவர்களை இணங்கச் செய்வது.

தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் (மக்கள் பிரதிநிதிகள்) மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர்கள் என்று இரண்டு வகை தலைவர்கள் இருப்பதை டக்கர் சுட்டிக்காட்டுகிறார்.

பிரான்சிஸ் டவுன்சென்ட் எனும் அமெரிக்க பல் மருத்துவர் பல முதியவர்கள் கடுங்குளிராலும், பசியாலும் வாடுவதைக் கண்ணுற்று, 1933-ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கை ஆசிரியருக்கு கடிதம் எழுதினார்.

வேலைகளில் இருப்பவர்கள் மாதந்தோறும் ஒரு சிறு பங்களிப்பைச் செய்து, அந்த நிதியின் மூலமாக முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் தனது திட்டத்தை அந்தக் கடிதத்தில் விவரித்திருந்தார். அது "டவுன்சென்ட் திட்டம்' என்று கொண்டாடப்பட்டு, அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்த சிறந்ததொரு வழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படி ஒரு பொதுப் பிரச்சினையை அலசி ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைக் கண்டுணர்ந்து, அவற்றைப் பிறரின் இசைவுடன், பங்கேற்புடன் தீர்த்து வைப்பவர்தான் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர்.

ஒரு தலைவர் ஆழ்ந்த தன்னம்பிக்கையும், மிகுந்த பாதுகாப்பு உணர்வும் கொண்டவராக இருப்பது முக்கியமானது. தன்னுடைய தகுதிகள், திறமைகள், பலம், பலவீனம் பற்றிய முழுப்புரிதல் இல்லாமல், தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பார்த்து பயந்து பரிதவிப்பவர் சக்திமிக்க தலைவராக இருக்க மாட்டார். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் இப்படிப் பாடினார்:

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்.
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா?
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?

தலைவருக்கான ஆங்கில வார்த்தை லீடர் என்பதுதான். இதை தமிழில் இட்டுச் செல்பவர், நடத்திச் செல்பவர், அழைத்துச் செல்பவர் என்றுதான் மொழிமாற்றம் செய்யமுடியும். வழிகாட்டி என்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் "தலைவர்' என்கிற பதம் எங்கிருந்து வந்தது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயம்.

"தலை' யாரையும் எங்கேயும் அழைத்துச் செல்லாது. இங்கே போகலாம், இந்தத் திசையில் போகலாம் என்று தலை சொல்லலாமேயொழிய, "கால்' தான் அழைத்துப் போக முடியும். அப்படியானால் லீடர்ஷிப் எனும் ஆங்கில வார்த்தைக்கு "கால்மை' என்ற சொல்லை அல்லவா நாம் பயன்படுத்த வேண்டும்? ஒருவேளை அதைத்தான் "தாழ்மை' என்கிறோமோ? "தாழ் பணிந்து,' "தாழ்மையுடன்' என்பனவெல்லாம் அர்த்தமுள்ளச் சொற்கள். சிந்தித்துப் பார்த்தால், தலைமையும், தாழ்மையும் இரண்டறக் கலந்தவை என்பதை உணரலாம்.

தலை மட்டும் தனியாக நின்று என்ன சாதிக்க முடியும்? கட்டுடலும், கரங்களும், கால்களும் இருந்தால்தான் தலை தகைமையுடன் இயங்க முடியும். என்னதான் இவையெல்லாம் அடிப்படையாக இருந்தாலும், தலைதானே உயரே நிற்கிறது? சிந்திப்பது, நினைப்பது, கனவு காண்பது, பார்ப்பது, கேட்பது, சுவாசிப்பது, நுகர்வது, பேசுவது, சிரிப்பது, சினப்பது - என அனைத்துச் செயல்களும் நடக்கும் "தலைமையகம்' அல்லவா தலை? ஒரு முடிவெடுப்பது என்றால் தலை தனியாகத்தானே இயங்க வேண்டியிருக்கிறது? தலைமையும், தனிமையும் பின்னிப் பிணைந்திருக்கின்றனவோ? தலைமை, தாழ்மை, தனிமை போன்றவை ஒரு நல்ல தலைவனின் அடையாளங்களாகக் கொள்ளப்படலாம்.

தலைமை பற்றி பேசும் மாவோ அதன் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறார்: ஒன்று, திட்டங்கள் வகுத்து, தீர்மானங்கள் எடுத்து, கட்டளைகள் மற்றும் உத்தரவுகள் பிறப்பித்து, கருத்துகளை முன்வைப்பது. இரண்டு, ஊழியர்களை ஒன்றுபடுத்தி, செயலில் இறங்க உற்சாகமூட்டி, அவர்களை வழிநடத்துவது. "நான்தான் தலைவர்', "நான்தான் தலைவர்' என்று வருந்தி வரவழைத்துக் கொள்வதல்ல தலைமைப் பொறுப்பு. மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றை மீண்டும் மீண்டும் மேடை தோறும் கூறி தன்னைத் தானே தூக்கி நிறுத்திக் கொள்வதும் அல்ல. சாதி, மத, இன அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் மீது தன்னைத் திணித்துக் கொண்டு, "உங்களுக்காக நான்தான் பேசுவேன்' என உரிமை கொண்டாடுவதும் அல்ல.

தலைமை என்பது, பாதிக்கப்பட்ட மக்களின் வேலைக்காரனாக இருந்து, அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அவர்களின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு செயல்படுகிறவன்தான் தலைவன். அவன் ஒரு சேவகன். சேவகன் எப்போதுமே தாழ்மையானவன். அவன் மறுத்துப் பேசுவதில்லை; தலைவணங்க மறுப்பதில்லை. ஒரு நல்ல சேவகன்; தான் பணிவிடை செய்கிற மாந்தரைப் பற்றி உண்மையிலேயே கவலைப்படுகிறவன்; கரிசனம் கொள்கிறவன்; சோர்ந்து போகாதவன். உற்சாகம் குறைந்திடாது காத்து, ஆனால் உணர்ச்சிப் பெருக்குக்கு இடமளிக்காது, பொறுமையாக, பொறுப்போடு இயங்குகிறவன். இதைத்தான் "சேவகத் தலைமை' என்றழைக்கிறோம்.

தலைவராக நடிப்பவர் தலைவரல்ல. அவர் தலைமைத்துவம் ஏதுமற்ற போலித் தலைவர் "பேசாதிருப்பவனுக்கு பிதற்றுபவன் பரவாயில்லை' என்று சிலர் அவரை வேண்டாவெறுப்பாக ஏற்றுக் கொள்ளலாம். இன்னொரு விதமான தலைவர், "பெத்த வீட்டுக்குப் போனால் பிள்ளையாயிருப்பேன்', "செத்த வீட்டுக்குப் போனால் சவமாயிருப்பேன்' என்பது போன்ற தலைமைத்துவ பேய் அல்லது நோய் பிடித்தவர். மற்றொரு விதமான தலைவர் குறிப்பிட்ட சூழ்நிலை அவருக்கு இடமளிக்கவில்லை என்றாலும், அவருக்கு எந்தவிதமான நேரடிக் கடமையோ, பொறுப்போ இல்லையென்றாலும், அழையா விருந்தாளியாக தன்னை பிறர் மீதுத் திணித்து, தலைவராகித் திரிபவர்.

இம்மாதிரித் தலைவர்களே அரசியல், அறிவியல், ஆன்மீகம், கலை உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் அதிகமிருக்கின்றனர். முதல் தரமானவர்கள் இல்லாததால் மூன்றாம் தரமானவர்கள் தலைமையைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படாத தலைவர்களைப் பொருத்தவரை, கவிஞர் கண்ணதாசனின் அறிவுரையை மனதிற்கொள்வது சிறந்தது:

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்,
உலகம் உன்னிடம் மயங்கும்;
நிலை உயரும்போது பணிவு கொண்டால்,
உயிர்கள் உன்னை வணங்கும்

என்கிறார் அவர்.

அப்படிச் செய்யும்போது உங்கள் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ யாரும் ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. தலைமைத்துவப் பண்புகள், தகுதிகள், திறமைகள் இல்லாதவர்கள்தான் சாதி, மதம், இனம் போன்ற செயற்கைக் கால்களைத் தேடியலைகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களைப் பொறுத்தவரை,

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்

என்கிறார் வள்ளுவர்.

நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான். ஆனால் இன்றைய உலகில் இம்மாதிரியான “இறையைக் காண்பது அரிதிலும் அரிதாகி இருக்கிறது.

பெரும் "தலைவர் பஞ்சம்' ஏற்பட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், தவறானவர்கள் எல்லாரும் தலைவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நம் சமூகத்தில், இமயமாய் உயர்ந்து நின்ற பெருந்தலைவர்களைப் பெற்றிருந்த நாங்கள் இப்போது இளைஞர்களாகிய உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்.

நீங்கள் ஞாலமும், காலமும் கருதி இருப்பது மிகவும் முக்கியம்.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

என்கிறார் வள்ளுவர். உலகத்தைக் கருதுகிறவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல், அதற்கேற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர்.

(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT