இளைஞர்மணி

காரோட்டுவீர்களா?...  கவனியுங்கள்!

2nd Mar 2021 06:00 AM | - எம். ஞானசேகர்

ADVERTISEMENT

 

முதலில் எல்லாருடைய வீடுகளிலும் சைக்கிள் இருப்பதே அபூர்வமாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ளதைப் போல இருசக்கர வாகனங்கள் இல்லை. இப்போது எல்லா வீடுகளிலும் இரு சக்கர வாகனங்கள் நிரம்பி வழிகின்றன.

இதன் அடுத்த கட்டமாக, இப்போது வீட்டுக்கொரு கார் என்ற நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

பயன்படுத்தப்பட்ட மலிவு விலைக் கார்களிலிருந்து, மாதத் தவணை கட்டி கார்களை வாங்குவது வரை கார்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. கார் ஓட்டத் தெரியாத இளைஞர்களே இல்லை என்ற நிலை உருவானாலும் வியப்படையத் தேவையில்லை.

ADVERTISEMENT

ஆனால் கார்களை சிறந்த முறையில் பயன்படுத்துவது, பராமரிப்பது எப்படி என்று பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, பயண அனுபவங்களுக்குப் பிறகும் மோட்டார் பொறியியல் வல்லுநர்கள் கார் பயன்பாட்டில் எந்த எந்த வகைகளில் சக்தி செலவாகிறது என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

மணிக்கு 70 கி.மீ. வேகம் என்பதை விட மணிக்கு 50 கி.மீ. வேகம் என்பது கார்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் ஆரோக்கியமான வேகமாகும். இந்த மிதமான வேகத்தில் நீங்கள் சென்றால் மொத்த பராமரிப்புச் செலவில், 15 சதவீதம் மீதமாகும்.

தூரம் அதிகம் என்பதற்காக மேடு, பள்ளங்கள் உள்ள குறுகிய பாதையில் சென்றால், காரின் பராமரிப்புச் செலவில் 20 சதவீதம் அதிகமாகிவிடும்.

ஒரு காரில் இவ்வளவு பேர்களைத்தான் ஏற்ற வேண்டும் என்று கணக்கிட்டு அதற்கேற்ப இருக்கைகளை வடிவமைத்து இருக்கிறார்கள். ஆனால், நெருக்கியடித்துக் கொண்டு அதிகமான பேர்கள் செல்வது, எடை அதிகமான பொருள்களை காரில் ஏற்றுவது எல்லாம் எரிபொருள் செலவை 15 சதவீதம் அதிகரிக்கும். பெட்ரோல் விற்கும் விலையில் அதிகப் பெட்ரோல் செலவு செய்ததற்காக பெற்றோரிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இளைஞர்களுக்கு உருவாக வாய்ப்புகள் அதிகம்.

காரின் மேற்கூரையில் பொருள்களை வைப்பது, காரின் சன்னல்களைத் திறந்து வைத்துக் கொண்டு பயணிப்பது காரின் காற்றுத் தடுப்பை சீரற்ற தன்மைக்குக் கொண்டு செல்லும். அதனால் காரின் இன்ஜின் 25 சதவீதம் அதிகபட்சமாக இயங்கும். அதற்கேற்ப செலவையும் அதிகப்படுத்தும்.

சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்வது, இன்ஜின் ஆயில் விடுவது, டயர்களின் காற்றின் அளவை சரியான அளவில் வைத்திருப்பது எல்லாம் காரின் எரிபொருள் செலவில் 8சதவீதத்தைக் குறைக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக 2 நிமிடத்துக்கு மேல் ஓர் இடத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால், காரின் இன்ஜினை ஆஃப் செய்வது எரிபொருள் சிக்கனத்துக்கு உதவும்.

மிக மிகத் தேவையாக இருக்கும்போது காரைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நடந்து செல்லும் தூரத்தை, பஸ்ஸில் மிகச் சீக்கிரம் சென்றுவிடும் தூரத்தை எல்லாம் காரில் பயணம் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

Tags : காரோட்டுவீர்களா?...  கவனியுங்கள்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT