இளைஞர்மணி

ஸ்டார்ட் அப்... கூட்டுப் பணி... வெற்றிக் கனி!

சுரேந்தர் ரவி


எந்தவொரு நிறுவனத்தையும் தனிநபர் ஒருவரால் நடத்த முடியாது. பிறரின் துணையில்லாமல் நடத்த நினைத்தால், வெற்றி எட்டாக் கனியாகவிடும். எந்தப் பணியும் குழுப்பணியாக அதாவது டீம் வொர்க்காக இருக்க வேண்டும். அப்போதுதான் பல்வேறு திறமையுள்ளவர்கள் செயல்களால், நிறுவனம் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.

கூட்டு உழைப்பு அவசியம்:

ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது என்பதால் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்க நினைக்கும்போதே, தனது வேலையைப் பகிர்ந்து கொள்பவராக உள்ள பிறரின் துணையை நாடுவது, அவர்களையும் ஸ்டார்அப் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றி, அதைத் தொடங்குவோரை மட்டும் சார்ந்ததல்ல. ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கியவருக்கு இணையான இணை நிறுவனர்கள், பணியாளர்கள் குழு என பலரின் உழைப்பு இல்லாமல் வெற்றியின் திசை நோக்கி நடக்க அல்ல, பார்க்கக் கூட முடியாது. வெற்றியைப் பெறுவதற்கு தொழில்முனைவோர், தகுந்த இணை நிறுவனர்களையும் குழுவையும் தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இணை நிறுவனரின் தேவை:

இணை நிறுவனர் நம்முடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குத் தேவையான பணிகளைச் செய்பவராக இருத்தல் அவசியம். அந்நிறுவனத்தின் செயல்பாட்டில் அவருக்கு முக்கியப் பங்கு இருக்க வேண்டும். அத்தகைய இணை நிறுவனரை அடையாளம் கண்டு கொள்வது சற்று கடினமான காரியம்தான்.

ஆனால், சிறந்த இணை நிறுவனரைக் கண்டுகொண்டால், ஸ்டார்ட் அப் நிறுவனம் பல மடங்கு வெற்றிகளைக் காணும். இணை நிறுவனரைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்களைப் போன்றே திறமைகளைக் கொண்டவரைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். உங்களிடம் உள்ள திறமைகளைத் தவிர, மற்ற திறமைகள் உள்ளவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்தால், இருவரது திறமைகளும் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அது வலுசேர்க்கும்.

நிறுவனத்தை நடத்துவதில் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிவரும். முக்கியமாக, நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டிவரும். அத்தகையவற்றில் நமக்குப் போதிய அனுபவம் இல்லாதபட்சத்தில், அத்திறமைகளைக் கொண்டவரை இணை நிறுவனராகத் தேர்ந்தெடுப்பது நல்ல பலனை அளிக்கும்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

இணை நிறுவனராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளஅந்த நபர் நம்மைப் போன்றே ஊக்கத்தையும் ஒத்த மனநிலையையும் கொண்டவராக இருக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். ஏனெனில், ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சட்ட, நிர்வாக, நிதிரீதியாகப் பல்வேறு சவால்கள் எழும். அத்தகைய சமயங்களில், நல்ல தோழராக இருந்து நம்மை அடுத்தகட்டத்துக்கு உந்தித் தள்ள வேண்டிய பொறுப்பும் இணை நிறுவனருக்கு உள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனம் எதிர்பார்த்தபடி செயல்படாத சமயங்களில் நமது மனம் பேதலிக்கத் தொடங்கும். அத்தகைய சமயங்களில் நம்மைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துபவராக இணை நிறுவனர் செயல்பட வேண்டும்.

இணை நிறுவனருக்கு என்னென்ன திறமைகள் இருக்க வேண்டும் என்பதைக் குறித்து வைத்துக் கொண்டு, அதனடிப்படையில் தேர்ந்தெடுப்பது நல்ல பலனைத் தரும். உறவினர்கள், பழக்கப்பட்டோர் உள்ளிட்டோரில் நமக்கு ஏற்றவரை இணை நிறுவனராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் சமூக வலைதளங்களும் உதவிகரமாக இருக்கும்.

எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்கள்:

நமது நண்பர்களையே இணை நிறுவனர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவர்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கலாம். ஆனால், அதில் சில சிக்கல்கள் உள்ளன. நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே நிதிப் பங்கீடு, வேலைப் பங்கீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் எழுத்துபூர்வமாகத் தெளிவுசெய்து கொள்வது வசதியாக இருக்கும்.

ஸ்டார்ட் அப் நிறுவனம் பல்வேறு சவால்களைச் சந்திக்கும்போது, நம் நண்பர்களிடமிருந்து இதுவரை வெளிப்படாத குணங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, நண்பர்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

நம்பிக்கையே அடிப்படை:

ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குத் தேவையான குழுவைப் பொறுமையுடன் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு மிகவும் குறைவாகவே இருக்கும். அதற்கேற்ப பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஊதியம் குறைவாகவே இருக்கும் என்பதால், சிறப்பானதொரு பணிச்சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது அவசியம்.

பணியாளர்களுக்கும் நமக்குமிடையேயான நம்பிக்கையே அடிப்படை ஆதாரமானது. இரு தரப்பினரும் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். நம்பிக்கை பொய்க்குமானால், பணிகள் தடைப்படும். அதே வேளையில், பணியாளர்கள் நேர்மையுடன் நடந்து கொள்கின்றனரா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.

பெயர் வைக்கவும் திட்டமிட வேண்டும்!

ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயர்தான் மக்களை முதலில் கவரும். அதுவே மனதில் எளிதில் பதியும். நிறுவனத்துக்குப் பெயர் வைப்பது எளிதான காரியமல்ல. அதில் பல கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நாம் என்ன மாதிரியான தொழிலை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தைத் தொடங்குகிறோமோ, அதனடிப்படையில் பெயர் வைக்கலாம்.

அதே வேளையில் பெயர் எளிமையாகவும், கேட்பவர்களுக்குப் புரியும்படியும் இருக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரில் அதிக வார்த்தைகள் இடம் பெறக் கூடாது. பெயருக்கான காரணம் தனித்துவமாக இருக்க வேண்டும்.

நம் நிறுவனத்துக்கான பெயரையும் உடன் பணியாற்றும் குழுவையும் சரியாக இனம் கண்டுவிட்டாலே பாதி வெற்றியடைந்து விட முடியும். அந்த வெற்றியை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT