இளைஞர்மணி

ஒழுங்குபடுத்துங்கள்... சிந்தனையை!

2nd Mar 2021 06:00 AM | வி.குமாரமுருகன்

ADVERTISEMENT


நம் சிந்தனைகள் எவையாக இருக்கிறதோ?

அவையாகவே நாம் வாழ்கிறோம் என்று சொல்வார்கள். நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சிந்திக்கும் விஷயங்கள்தாம் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன.

மனதிற்குள் அல்லது மூளைக்குள் நாம் யோசிக்கும் விஷயங்கள்தாம் நமது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கின்றன என்பது உளவியல் ரீதியான கருத்து.

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, யோசனைகளை, சிந்தனைகளை, எண்ணங்களைக் கடந்துதான் வாழ்க்கையின் பல கட்டங்களில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறான்.

ADVERTISEMENT

சிறு வயது முதல் முதுமை வரை சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஒவ்வொரு வயதிலும் அந்த வயதிற்கேற்ற சிந்தனைகள் தோன்றுவது இயல்பு.

பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் அந்த வயதிற்கேற்ற சிந்தனைகளை உடையவர்களாக இருப்பார்கள். அந்த வயதிற்கே உரிய சினிமா கதாநாயகர்கள் குறித்த சிந்தனையுடன் வலம் வருவார்கள். அத்தகைய சூழலில் அந்த மாணவன் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அவனுக்குப் பிடித்த ஹீரோவின் சாயல் பிரதிபலிக்கும். அனைவருமே இத்தகைய நிகழ்வுகளைக் கடந்துதான் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்க முடியும். இதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது ஏற்றுக் கொள்ளக் கூடிய இயல்பான ஒன்றுதான். பள்ளிப் பருவத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டும்தான் இருக்கும். எதிர்காலத்தின் போக்கு குறித்து அவர்கள் யோசிக்க வேண்டிய அவசியம் அந்த காலகட்டத்தில் இல்லை. எனவே, சிந்தனையை கட்டி போட வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை.

அதேபோல் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் உயர்கல்வி பெறுவதற்காக கல்லூரிகளில் நுழைந்து அங்கும் அதிகபட்ச காலம் மகிழ்ச்சியான மனநிலையுடன் உலா வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் கல்லூரி காலம் முடிவை நெருங்கும் நேரம் தான் மாணவர்களின் சிந்தனையில் குழப்பங்களும், தடுமாற்றங்களும் ஏற்படக்கூடிய காலமாக மாறி விடுகிறது.

பெற்றோரும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் அடுத்து என்ன செய்யப் போகிறாய்? என்ற வினாவினை தொடுக்கும்போது, இதுவரை சந்தோசமான சிந்தனையுடன், எண்ணங்களுடன் உலாவந்த மாணவர்களின் மனநிலை புதிய மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி எதிர்கொள்ள இயலாமல் பலர் தடுமாறும் நிலையையும் காண முடிகிறது.

மாணவப் பருவம் முடிந்து விட்டது. இளைஞர் என்ற புதிய பெயர் நமக்கு வந்துவிட்டது; இனி நம் எதிர்காலம் என்னவோ? என்ற தேவையற்ற அச்சம், அவர்கள் சிந்தனையில் விழுவதால் செயலற்ற மனநிலை அவர்களுக்குள் உருவாகிறது.

இப்படி தனது எதிர்காலம் குறித்தும், தனது பொறுப்புகள் குறித்தும் கவலைப்பட்டு அதற்காக பல வழிகளைத் தேடி வருமானத்தைத் தரும் பணியில் சேர்ந்து, நாம் வென்று விட்டோம் என்று கூறிக் கொள்பவர்கள் சாதாரண இளைஞர்களாகவே வாழ்க்கையில் பயணிக்க முடியும். இவர்களால் பிறருக்கு லாபமோ, நஷ்டமோ கிடைக்கப் போவதில்லை.

அதேசமயம் மாறுபட்டு சிந்திப்பவர்கள், சாதனையாளர்களாக மாறி இந்த உலகத்திற்கு தொடர்ந்து தங்களாலான நன்மைகளைச் செய்ய முடியும்.

அதுபோன்ற சாதனையாளர்களாக நீங்கள் உங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். எதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் வெற்றியை நோக்கி எளிதில் பயணிக்க முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஓர் இனிப்புக் கடையைத் தாண்டும்போது அதன் வாசனை அவர்களை இழுக்கலாம். ஆனால், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற சிந்தனையைக் கட்டுப்படுத்தி, அதனால் உடல் நலனுக்கு பிரச்னை ஏற்படும் பாதிப்பை அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து இனிப்பை சாப்பிடும் எண்ணத்தைக் கடப்பதுதான் சிந்தனையை ஒழுங்குபடுத்தும் பணி.

இனிப்பு மட்டும் இல்லை, நமக்கு தீங்கு விளைவிக்கும் எல்லாவற்றையும் அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பதன் மூலமாகவே கடந்து செல்ல முடியும்.

அதுபோல், கல்லூரி முடித்து உலாவரும் இளைஞர்கள் எண்ணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க பழகிக் கொள்ள வேண்டும். இளைஞர்களின் மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடத்தான் செய்யும். எந்த எண்ணம் இப்போது அவசியம்; எந்த எண்ணம் அனாவசியம் என்பதை புரிந்து தேவையான எண்ணங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து, தேவையற்ற எண்ணங்களுக்கு அணை கட்டினால் எல்லா இளைஞர்களும் சாதனையாளர்களாக உயர முடியும்.

உதாரணமாக, திறன் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டிருக்கும்போது பயிற்சியாளர் நடத்தும் பாடங்களை மட்டுமே நுட்பமாக கவனிக்க வேண்டும். அந்த நேரத்தில் வெளியே இருந்து ஒரு திரைப்படப் பாடல் ஒளிபரப்பப்பட்டால் அந்தப் பாடல் நமக்கு இப்பொழுது தேவைதானா ? என்ற சிந்தனையை மனதில் இருத்தி, இப்போது தேவை பயிற்சி மட்டுமே என்ற சிந்தனையை உருவாக்கி விட்டால் நம் பயிற்சி சிறப்பாக அமையும்.

நாம் ஏதோ ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நமது சிந்தனை சரியானதுதானா?அல்லது தவறா? இந்த சிந்தனையை செயல்படுத்தினால் நல்லது நடக்குமா? என்பன போன்ற விஷயங்களை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க வேண்டும்.

Tags : ஒழுங்குபடுத்துங்கள்... சிந்தனையை!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT