இளைஞர்மணி

பிறருடன் ஒப்பிடுதல்...ஒரு நோய்!

கோமதி எம். முத்துமாரி

நண்பர்கள், உறவினர்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏன் கண்ணில் காண்போரின் தோற்றம், வளர்ச்சி, அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு அவர்களோடு உங்களுடன் ஒப்பிட்டுக் கொள்பவரா நீங்கள்? அப்படியென்றால் முதலில் அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

ஏன் தவிர்க்க வேண்டும்?

பிறருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது ஒரு மனிதனின் மிகச்சிறிய வயதில் இருந்தே தொடங்குகிறது. இந்த ஒப்பிட்டுப் பார்க்கும்போக்கு அவர்களது வாழ்க்கையின் இயல்பான வளர்ச்சியைக் குலைக்கிறது.

சமூகத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தனித்துவ குணம் கொண்டவர்களே. அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதனை வெளிக்கொண்டுவருவதில் மட்டுமே நம்முடைய முயற்சி இருக்க வேண்டும். ஒருவருடன் இன்னொருவரை ஒப்பிடும் பழக்கம் கூடாது.

ஒருவரைப் பார்க்கும்போது தோற்றத்தில் இவரைப் போல நாம் இல்லையே; இவரைப் போல சாதிக்க முடியவில்லையே என்று நினைத்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் ரசிக்க முடியாது.

சமூகத்தில் அனைவரும் ஒரே விதமான வாழ்க்கையைக் கொண்டிருக்கவில்லை.

சாதி, மதம், பொருளாதாரம் என பல அடிப்படைகளில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வேறுபடுகிறது. அப்படி இருக்க ஒருவரைப் போல மற்றவரால் எப்படி வாழ முடியும்? பிறரைப் பார்த்து ஒப்பீடு செய்யும் நீங்கள், ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று உங்களுக்குக் கிடைத்திருக்கலாம். எனவே ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் மகிழ்ச்சியுடன் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.

மற்றவர்களுடன் ஒப்பிடுவதை ஏன் நிறுத்த வேண்டும்?

உங்களை நீங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுவதால் உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கையின்மை உருவாகும். இது உங்கள் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கும். ஒருவிதமான மன வலியையும், துன்பத்தையும் உங்களுக்குத் தரும். இதனால் உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட தொலைத்து விடுவீர்கள்.

அது மட்டுமல்ல, உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகும்.

ஒருவரின் நிறம், உயரம் போன்ற வெளித் தோற்றம் அல்லது ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சி, வாழ்க்கைநிலை ஆகியவற்றைப் பார்த்து உங்களின் நிலையோடு ஒப்பிட்டால் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். இந்த தாழ்வு மனப்பான்மை தேவையில்லாத மனப் பிரச்னைகளை ஏற்படுத்தும். உலகில்

உள்ள எதையும் இந்த தாழ்வு மனப்பான்மையுடன் அணுகும்போது, உண்மையாக என்ன இருக்கிறது என்று கண்ணில் படாது. உண்மையைத் தெரிந்து கொள்ள முடியாதபோது, வாழ்வில் எந்த விஷயத்திலும் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விடும். இது மேலும் பல புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவ்வாறு தாழ்வு மனப்பான்மை என்ற ஒரு சிறு மனக்கோணல் வாழ்வின் போக்கையே மாற்றிவிடக் கூடிய நிலையை ஏற்படுத்திவிடும். தாழ்வு மனப்பான்மையின் காரணமாக பலர் சமூகத்தில் கூனி, குறுகி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

முன்னேற்றத்தைத் தடுக்கும்:

மற்றவர்களின் சாதனைகளுடன் உங்களுடைய சாதனைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கையை சீர்குலைக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைப் பின்னணி உள்ளது. அந்தப் பின்னணியில் செயல்பட்டே ஒவ்வொருவரும் சாதிக்கின்றனர். நல்ல வளமான பின்னணி உடையவர்கள் அதிகம் சாதிப்பதும், எந்தவிதமான பின்னணியும் இல்லாதவர் குறைவாக சாதிப்பதும் இயல்பானது; தவிர்க்க முடியாதது. எனவே அதிகம் சாதித்தவர்கள் உயர்ந்தவர்களும் இல்லை. குறைவாகச் சாதித்தவர்கள் தாழ்ந்தவர்களும் இல்லை. சாதனைகளை அதன் பின்னணியுடன் இணைத்துப் பார்க்கும்போது, சிறிது, பெரிது என்பது இல்லை. உயர்வு, தாழ்வு இல்லை. எனவே தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தேவையில்லை. தாழ்வு மனப்பான்மை உங்களுடைய முன்னேற்றத்தின் கதவுகளை அடைத்துவிடும்.

நேரம் வீணாகும்:

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதால் உங்களின் நேரம்தான் வீணாகும். வாழ்க்கையில் ஒருபோதும் நீங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியாது. உங்களுடைய கனவுகளை எட்ட, குறிக்கோள்களை அடைய உங்கள் வழியிலேயே பயணியுங்கள். மற்றவர்களுக்காக உங்கள் நேரத்தை விரயமாக்குவது உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உங்களுக்கு போட்டிநீங்களே

உங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் பலரைச் சந்திக்கலாம். சிலர் ஆடம்பரத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று எண்ணலாம். சிலர் மிகவும் வறுமையில் கஷ்டப்படுகிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால், இன்பம், துன்பம், பசி, வறுமை, வெற்றி, தோல்வி என இவை அனைத்தும் கலந்ததே மனித வாழ்க்கை. அதேபோல இந்த உலகத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் உங்களைவிடச் சிறந்தவர் இருக்கலாம். ஏற்றுக்கொள்ள சற்று கடினம் என்றாலும் இதுதான் உண்மை. இதை ஏற்றுக்கொள்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

உங்களுக்கு இருக்கும் தனித் திறமைகளைக் கொண்டு சாதனையை எட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர, மற்றவரின் சாதனையுடன்ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.

எனவே, மற்றவருடன் ஒப்பிட்டு உங்கள் திறமையைக் குறைத்து எடை போடாமல், உங்கள் வளர்ச்சிக்கான முயற்சியைத் தொடர்ந்தால் அதற்கேற்ற பலன் கண்டிப்பாகக் கிடைக்கும்.

உங்களைப் போன்றுயாரும் இல்லை

இந்த உலகில் உங்களைப் போன்று யாரும் இருக்க மாட்டார்கள். தோற்றம் உள்பட, உங்களுடைய குணாதிசயங்கள், திறமைகள் அனைத்தும் உங்களுக்கானவை மட்டுமே. எனவே, உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கான தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சி செய்யுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT