இளைஞர்மணி

அச்சம் தவிர்க்க... மாதிரி நேர்காணல்கள் !

ந.முத்துமணி

கரோனா பெருந்தொற்றால் விளைந்த தொழில்நுட்ப மாற்றங்கள் வேலைவாய்ப்புச்சந்தையையும் விட்டுவைக்கவில்லை. தகவல்தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் வீட்டில் இருந்தே பணியாற்றும் நிலை தொடர்வதால், நேரடி நேர்காணல்களுக்குப் பதிலாக மெய்நிகர் நேர்காணல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேரடி நேர்காணல்களை ஒப்பிடுகையில் மெய்நிகர் நேர்காணல்களில் சில சாதகங்கள், பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நேரடி நேர்காணலோ, மெய்நிகர் நேர்காணலோ முறையான பயிற்சி பெற்று நேர்காணலை எதிர்கொண்டால் மட்டுமே, வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்ற நிலையே இப்போது உள்ளது.

மாதிரி நேர்காணல்

நேர்காணல்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு முறையான பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கு மாதிரி அல்லது ஒத்திகை நேர்காணல்கள் கைகொடுக்கும். நேர்காணல்களை எப்படிக் கையாள வேண்டுமென்று கற்றுக்கொள்வதற்கு, நேர்காணலில் நேரடியாகப் பங்கேற்பதைப் போலச் செய்து பார்ப்பதற்கு மாதிரி நேர்காணல்கள் அவசியமாகும்.

அது நேர்காணலின் அசல் அனுபவத்தைப் பெற உதவும். ஒத்திகையில் ஈடுபடுவதால் உண்மையான நேர்காணலை எதிர்கொள்ளும்போது காணப்படும் பதற்றம், அச்சம், தயக்கம் நீங்கி, தன்னம்பிக்கை, துணிச்சல், அணுகுமுறையில் நம்பிக்கை ஆகியவை ஏற்படும். மாதிரி நேர்காணல்கள் முன்னாள்மாணவர், தன்னார்வலர் அல்லது வேலைவாய்ப்புவழிகாட்டி அல்லது
விவரம் தெரிந்த ஒருவரால் நடத்தப்படலாம்.

மாதிரி நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகள், நடத்தை சார்ந்ததாகவோ, திறன்சார்ந்ததாகவோ அமையலாம். மாதிரி நேர்காணல் நடத்தப்படுவதன் முக்கியமான நோக்கம், மாணவர் அல்லது வேலைதேடுவோரிடம் பொதிந்துள்ள உண்மையான திறன்களைக் கண்டறிவதுதான்.

அதற்கேற்ப, மாதிரி நேர்காணல்களை நடத்துவோர், சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது வேலை தேடுவோரின் நேர்காணலை அணுகும் அல்லது கையாளும் திறனை நிறை-குறைகளுடன் உண்மையாக படம்பிடித்துக் காட்ட வேண்டும். அப்போதுதான் குறைகளைக் களைந்து, நிறைகளைப் பெருக்க வாய்ப்பு ஏற்படுத்தும். அது நேர்காணலை வெற்றி கொள்ள உதவிகரமாக இருக்கும்.

மாதிரி நேர்காணல் அவசியம்... ஏன்?

நேர்காணலுக்குச் செல்வோர் முந்தைய இரவில் நிம்மதியாக தூங்கியிருக்கமாட்டார்கள்.

காரணம், நேர்காணலை யார் நடத்துவார்களோ? என்னென்ன கேள்விகளைக் கேட்பார்களோ? வேலைக்கு நம்மைத் தேர்ந்தெடுப்பார்களோ? மாட்டார்களோ? போன்ற கேள்விகள் துளைத்தெடுப்பதால், நேர்காணல் முடிந்து நேர்காணல் அறையில் இருந்து வெளியே வரும்வரை பதற்றம், பயம் சம்பந்தப்பட்டவரைஉலுக்கிக்கொண்டே இருக்கும். இது தூக்கத்தைக் கலைத்துவிடும்.

"கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று கூறுவது போல, பயிற்சி பெற்றோருக்கு செல்லும் நேர்காணல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். அதற்கான பயிற்சிக்களம் தான் மாதிரி நேர்காணல்கள்.

மாணவர்கள் அல்லது வேலைதேடுவோரிடம் காணப்படும் நிறைகளைக் காட்டிலும் குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதால், மாதிரி நேர்காணல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறைகளைக் களைந்தால், ஒருவரின் நிறைகள் பளிச்செனத் தெரியும். அது நேர்காணலில் வெற்றியாக மாறும்.

மாதிரி நேர்காணல்கள் ஒருவரின் உடல்மொழியை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்திவிடும். கல்வியில் சிறந்து விளங்கி மதிப்பெண் பெற்றுவிடுவதாலேயே ஒருவர் வேலைக்குத் தகுதியாகிவிட மாட்டார். நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை வகிக்கும்போது எழும் சிக்கல்களைக் கற்றறிந்த கல்வியறிவைப் பயன்படுத்தி தீர்ப்பது, எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்ளும் விதம், சக பணியாளர்களோடு பழகும்முறை, ஒருங்கிணைந்து செயல்படுதல், புதியன கற்றல், தேக்கமில்லாத அறிவுத்தேடல், சுறுசுறுப்பு, முனைப்பு, குழுவாக செயல்படுதல் போன்ற எண்ணற்ற சூழ்நிலைகளின்போது ஒருவரின் அணுகுமுறை எவ்வகையில் இருக்கும் என்பதை வாய்மொழி அல்ல, உடல்மொழியே தெளிவுப்படுத்தும்.

நேர்காணல்களின் முக்கிய நோக்கங்களில் இதுவும் ஒன்று. அதனால் தான் உடலசைவு மொழி அல்லது உடல் தோரணை, முகபாவம் மற்றும் கண் தொடர்பினால், சைகைகள், தொடுதல் மூலமான தொடர்புகொள்ளும் திறனை கண்டறிய நேர்காணல்கள் முற்படுகின்றன. ஆடைகள், முடிஅலங்காரம், குரலின் தன்மை, உணர்ச்சிவெளிப்பாடு, பேசும் பாணி, பேச்சு சந்தம், குரலின் ஏற்ற இறக்கம், சொல்லழுத்தம் போன்ற அம்சங்கள் நேர்காணல்களில் கூர்மையாகக் கவனிக்கப்படும். எழுதப்படும் வார்த்தைகள், கையெழுத்து பாணி, வார்த்தைகளுக்கு இடையேயான ஒழுங்குமுறை, வார்த்தைகளற்ற குறியீடுகளைப் பயன்படுத்துதல் போன்றவை உடல்மொழியில் அடங்கும். மாதிரி நேர்காணல்களில் ஈடுபடும்போது வாய்மொழி மட்டுமல்லாமல், உடல்மொழியில் நேரும் தவறுகளைக் கண்டறிய முடியும். உடனடியாக அவற்றை திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். இது நேர்காணலில்கலந்து கொள்வோரின் திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

மெய்நிகர் நேர்காணல்

மாதிரி நேர்காணல்களை மெய்நிகர் நேர்காணலாக நடத்துவது எளிது. தானிருக்கும் இடத்தில் இருந்தே நேர்காணலை எதிர்கொள்ள முடியும். இதற்கு பலரும் உதவி செய்ய இயலும். புதிதாக வேலைக்குச் செல்வோருக்கு ஆசிரியர்கள், ஆள்சேர்க்கும் அதிகாரி அல்லது தன்னார்வலர்கள் பலரும் மாதிரி நேர்காணல்களை நடத்தலாம். நேர்காணல்களில் நடந்துகொள்வதற்கான நுட்பங்களை இணையவழியிலான ஊடகங்கள் வாயிலாகவே கற்றுத் தரலாம். மாதிரி நேர்காணல்கள் குறைந்தது 20 நிமிடங்களுக்கு நடத்தப்பட வேண்டும். பத்துக்கும் மேற்பட்டமுறையில் மாதிரி நேர்காணல்களில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்.

முன் தயாரிப்பு

மாதிரி நேர்காணல்களை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முன் தயாரிப்பு மற்றும் மிகுந்த அக்கறையோடு நேர்காணல்களை அணுக வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும், தனது சாதனைகளை முக்கியத்துவம் அளித்து எடுத்துக்கூறலாம். நேர்காணலில் ஒருவர் தன்னை வெளிப்படுத்தும்போது, கண்ணியமானவராகக் காட்சி அளிக்க வேண்டும்.

நேர்காணலை நடத்துவோரின் கண்களுக்கு குளிர்ச்சியான கண்ணியமான ஆடைகளையும், நடத்தையையும் வகுத்துக் கொள்வது நல்லது. சிக்கல்களைத் தீர்ப்பதில் தனது திறமையை எப்படி வெளிப்படுத்த முடியும் என்பதை தெளிவாகக் கூறுவது, பங்கேற்பாளரை மதிப்பிடும்போது நேர்காணல் நடத்துவோருக்கு கூடுதல் பலமாக இருக்கும். மாதிரி நேர்காணல்கள் வாயிலாக கேள்விக்கான விடைகளை எப்படிக் கூற வேண்டுமென்பதைக் கற்றுக் கொள்ள முடியும். விடைகள் எப்போதும் சுருக்கமானதாகவும், 2 நிமிடங்களுக்குள் தொகுத்து வழங்குவதாகவும் இருந்தால், அது நல்லவிளைவுகளை ஏற்படுத்தும். மாதிரி நேர்காணல்கள், மாற்றங்களுக்கும், வெற்றிக்கும் வழிவகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT