இளைஞர்மணி

மரத்தாலான செயற்கைக்கோள்!

22nd Jun 2021 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வரும் செயற்கைக்கோள்கள் உலோகப் பொருள்களால் தயாரானவை என்பது எல்லாரும் அறிந்ததே. 

செயலிழந்த செயற்கைக்கோள்களின் உலோக பாகங்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் ஏராளமாக சுற்றிக் கொண்டிருப்பதும், விண்வெளிக் குப்பைகள் எனப்படும் இந்தப் பாகங்களால் பிற விண்வெளித் திட்டங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதும் கவலை அளிக்கக் கூடியவை. இவற்றை அகற்றுவது குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஒருபக்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் மரத்தாலான செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல் வடிவத்துக்கு கொண்டு வந்துள்ளது ஃபின்லாந்தை சேர்ந்த ஆர்க்டிக் அஸ்ட்ரோனாடிக்ஸ் நிறுவனம்.

ADVERTISEMENT

"வைஸா வுட்சாட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மிகச்சிறிய செயற்கைக்கோள் நிகழாண்டு இறுதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. "பிர்ச்' என்ற மரத்தில் தயாரிக்கப்பட்ட பிளைவுட்டால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 

கியூப் வடிவ இந்த செயற்கைக்கோளின் நீளம், உயரம், அகலம் மூன்றும் தலா 10 செ.மீ. ஆகும். விண்வெளியில் உள்ள வெற்றிடம், குளிர், வெப்பம், கதிர்வீச்சு போன்ற கடினமான சூழலுக்கு ஒரு மரப்பொருள் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதைக் கண்டறியும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

"நாம் ஏன் ஒரு மரப்பொருளை விண்வெளியில் பறக்கவிடக் கூடாது' எனக் கேட்கும் மேகினென், ஆர்க்டிக் அஸ்ட்ரோனாடிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர். இவர்தான் இந்த மரச் செயற்கைக்கோள் தயாரிப்பின் பின்புலத்தில் இருப்பவர். இந்த நிறுவனம் கல்வி, பயிற்சி மற்றும் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் மாதிரிகளைத் தயாரிக்கிறது.

விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள மரச் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படவுள்ள பிளைவுட் முழுமையாக ஈரப்பதம் நீக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளில் மெட்டலால் ஆன செல்ஃபி ஸ்டிக் உள்ளது. செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்துவதற்காக அலுமினிய பட்டைகளையும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வழங்கியுள்ள நவீன சென்சார் தொகுப்பையும் கொண்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் நியூசிலாந்திலிருந்து செலுத்தப்படவுள்ளது. இதன் பரிசோதனையின்போது, 500-600 கி.மீ. உயர சுற்றுவட்டப் பாதையில் இது செயல்படக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.

பூமியின் குறைந்த சுற்றுவட்டப் பாதையின் கடினமான சூழலில் செயற்கைக்கோள் தாக்குப்பிடிக்குமா, எவ்வாறு அது செயல்படும் என்பதைக் கண்காணிப்பதற்காக சென்சார் தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த ரிச்சர்டோ ரம்பினி.

Tags : மரத்தாலான செயற்கைக்கோள்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT