இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 299

22nd Jun 2021 06:00 AM | ஆர்.அபிலாஷ்

ADVERTISEMENT

 

ஊரடங்கு பிரகடனம்  செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச்  சென்றிருக்கிறார்கள்.

அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது அமைச்சர் களை மன்னர் வீரபரகேசரி daft as a brush எனச் சாடுகிறார். 

பிரஷுக்கும் அசட்டுத்தனத்துக்கும் என்ன சம்பந்தம் என கணேஷ் வினவ, அதன் பின்னால் ஒரு துயரமான வரலாறு இருக்கிறது என புரொபஸர் பதிலளிக்கிறார். அது என்னவென  கேட்போமா?

ADVERTISEMENT

புரொபஸர்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வீடுகளில் அமைக்கப்பட்ட பெரிய புகைபோக்கிகளுக்குள் புகுந்து தூசியை, சாம்பலை சுத்தம் செய்யும் சிறுவர்களை chimney sweepers என்று சொல்வார்கள். அப்படி இந்த குழந்தைகள் உள்ளே போகும் போது அவர்களுடைய தலை அந்த குழாயில் இடிபடும். அப்படி அடிக்கடி அடிபடுவதால் அவர்களுடைய மூளைத்திறன் குறைந்து போவதாக அந்தக் காலத்தில் மக்கள் நினைத்தார்கள். இந்த குழந்தைகள் புகைபோக்கியைச் சுத்தம் செய்ய நீளமான பிரஷ்ஷை பயன்படுத்துவதால் இரண்டையும் தொடர்புபடுத்தி daft as a brush எனும் மரபுத்தொடர் வந்திருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  

கணேஷ்: ஐயோ... பாவம்! 
மாமன்னர்: என் மங்குனி அமைச்சர்களுக்கு நான் அவ்வப்போது குட்டு கொடுப்பதுண்டு. மண்டையில் குட்டினாலாவது இவர்களுக்கு அறிவு வரும், ஒழுக்கம் வரும் என்று நினைச்சேன். வேஸ்ட். ஆனால் ஒன்று, நீங்கள் என்னதான் நாடகம் போட்டாலும் சரி, உங்கள் 
திருட்டுத்தனங்களை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன் என கனவு காண வேண்டாம்.  I shall never turn a blind eye to your corruption and under the table deals. 

கணேஷ்: சார். turn a blind eye to something என்றால் ஒரு குற்றமோ தவறோ நடக்கும் போது அதைக் கண்டும் காணாமல் விடுவது அல்லவா? 
புரொபஸர்: ஆமா... 
கணேஷ்: ஆனால் சார்... இந்த மாதிரி ஒரு சீரழிவுக்கு, குற்றத்துக்கு ஏன் பார்வைக்குறைபாடு  கொண்டோரைப் பழிக்கிறோம்? அவர்களா ஊழலுக்குக் காரணம்? 
புரொபஸர்: அந்த மரபுத்தொடரில் அப்படி ஒரு தொனி வந்து விடுகிறது தான். நான் மறுக்கவில்லை. ஆனால் இது உண்மையில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் நோக்கில் தோன்றியதல்ல. அதன் பின்னால் ஓர் உண்மையான வரலாற்று நிகழ்வு உள்ளது. Siege of 
Copenhagen கேள்விப்பட்டிருக்கிறாயா? 
கணேஷ்: கோப்பன்ஹேகன் என்பது டென்மார்க்குடைய தலைநகரம் தானே? 
புரொபஸர்: ஆமாம். 
கணேஷ்: Seige என்றால்?  
புரொபஸர்: போரின் போது ஒரு ஊரை, நகரை, நாட்டை முற்றுகை 
இடுவது. 1801- இல் தான் கோப்பன்ஹேகன் பிரித்தானிய கப்பற்படைகளால் 
முற்றுகை இடப்பட்டது. இது நிகழும் முன்பு, பிரான்ஸின் சர்வாதிகாரியான நெப்போலியன் ஐரோப்பா முழுக்க தன் வசம் கொண்டு வரும் முயற்சியில் இருந்தார். டென்மார்க் மீது போர் தொடுத்து அந்நாட்டைக் கைப்பற்றினால் பிரித்தானிய கப்பல் போக்குவரத்துக்கான கடல் வழிகளை மூடி விடலாம் என அவர் கனவு கண்டார். டென்மார்க்குடன் பேசிய 
பிரிட்டன் தமக்கு ஆதரவாகவும் 
பிரான்ஸூக்கு விரோதமாகவும் தீர்மானம் எடுக்க வற்புறுத்தியது. ஆனால் டென்மார்க் தயங்கியது. 
பிரிட்டனுக்கும் பிரான்ஸூக்கும் இடையே இப்படி டென்மார்க் ஒரு போர் உத்திநோக்கில் முக்கியமான நடுநிலையாக இருந்து வந்தது. பிரான்ஸ் கைப்பற்றும் முன்னர் நாம் அதைக் கைப்பற்ற வேண்டும் என பிரித்தானிய அரசு முடிவெடுத்து கோப்பன்ஹேகனை நோக்கி தனது கப்பற்படைகளை அனுப்பியது. இப்படைக் கப்பல்களின் இரண்டாம் நிலை தளபதியாக இருந்தவர் நெல்சன். இவருக்கு ஒரு கண் தெரியாது. இவருக்குப் பின்னால் சில பிரித்தானிய கப்பல்கள் நெருப்புக்கு இரையாகித் திணறின. 
ஆனால் நெல்சன் முன்னேறி சென்று டென்மார்க்கின் கப்பற்படையை 
முறியடித்து கோப்பன்ஹேகனைக் கைப்பற்ற துடிப்பாக இருந்தார். அவருக்குப் 
பின்னால் இருந்த தலைமை கப்பற்படை அதிகாரியான அட்மிரல் பார்க்கர் என்பவர் நிலைமையைத் தவறாகப் புரிந்து 
கொண்டார். 
நெல்சன் முன்னேற முடியாமல் மாட்டிக் கொண்டிருப்பதாகக் கருதி, அவரைக் காப்பாற்றும் நோக்கில் பின்வாங்கும்படி சிக்னல் செய்யச் சொன்னார். பின்வாங்கும்படியான கொடிகள் அசைவதைக் கவனித்த நெல்சன் தன்னுடைய தொலைநோக்கியை எடுத்து வேண்டுமென்றே தன் பார்வையற்ற கண்ணில் பொருத்திக் கொண்டு பார்த்தார். ஒன்றுமே தெரியவில்லை எனக் கூறிய அவர், தன் படையினரை முன்னேறிச் செல்லக் கட்டளையிட்டார். 
அப்படி அவர் எடுத்த துணிச்சலான முடிவால் கோப்பன்ஹேகனை பிரிட்டனால் முற்றுகை இட முடிந்தது. பின்னர் அவர் இதைப் பற்றி  கருத்து தெரிவிக்கையில் I have only one eye. I have a right to be blind sometimes என்று பகடியாகச் சொன்னார். இதுவே to turn a blind eye என கடமை தவறி நடப்பதற்கான மரபுத்தொடர் தோன்ற காரணமானது.

(இனியும் பேசுவோம்)

Tags : வாங்க இங்கிலீஷ் பேசலாம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT