இளைஞர்மணி

கல்லூரி படிப்பு... எதைத் தேர்வு செய்வது?

சுரேந்தர் ரவி


பள்ளிப் படிப்பை முடித்துவிட்டாலே இளைஞர்கள் முன் நிற்கும் பெரும் சவால், சரியான கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுப்பது தான். எந்தப் பணியை செய்யப் போகிறோம் என்பதன் அடிப்படையிலேயே கல்லூரிப் படிப்பை பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
கல்லூரிப் படிப்பைத் தெரிவுசெய்வதில் சிலருக்குத் தெளிவான சூழல் காணப்படும். அடுத்து என்ன படிப்பைத் தேர்ந்தெடுப்பது, படிப்பை முடித்தவுடன் என்ன வேலைக்குச் செல்வது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக முடிவெடுப்பார்கள்.
ஆனால், இது பல இளைஞர்களுக்குக் குழப்பமான சூழலையே ஏற்படுத்துகிறது. பல மாணவர்கள் கல்லூரியில் என்ன படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவில்லாத நிலையில் இருப்பர். அவற்றில் பல மாணவர்கள் பெற்றோர், உறவினர்கள் கூறும் படிப்பைத் தெரிவுசெய்வர். சிலர் நண்பர்கள் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனரோ அதே படிப்பைத் தெரிவுசெய்வர்.
கல்லூரி படிப்பைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், வாழ்க்கைக்கான முதல் படியே அதுதான், வாழ்க்கைப் பயணத்தை சரியாக ஏற்படுத்திக் கொள்வதற்கு படிப்பை முறையாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். இதில் இளைஞர்களுக்குப் பல்வேறு குழப்பங்களும் தெளிவில்லாதசூழலும் ஏற்படலாம்.
ஆனால், சில வழிமுறைகளைப் பின்பற்றி உரிய படிப்பைத் தேர்ந்தெடுக்க முடியும். முதலில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சில பணிகள் மீது நமக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அப்பணிக்கேற்ற திறமைகள் அனைத்தும் இருக்கிறதா என்பதை இளைஞர்கள் சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சில திறமைகள் இளைஞர்களிடம் இயற்கையாகவே காணப்படும். அதை முறையாகக் கண்டறிந்து அவற்றை மேலும் மெருகூட்டுவதற்கேற்ற வகையில்
கல்லூரிப் படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும். ஏனெனில், விருப்பமான விஷயங்களில் மனம் அதிக ஈடுபாட்டுடன் செயல்படும். விருப்பமான
விஷயங்கள் சார்ந்த பணியில் ஈடுபடுவது தகுந்த ஊதியத்தைத் தருவதோடு மன அமைதியையும் தரும்.
எனவே, திறமைகளையும் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களையும் இளைஞர்கள் தெளிவாகக் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறிவதில் அவர்கள் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். மேம்போக்காக
எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மையிலோ
அல்லது எதுவுமே தெரியாது என்ற தாழ்வு மனப்பான்மையுடனோ செயல்படக் கூடாது. திறமைகளை முறையாகக் கண்டறிந்தால் தான் கல்லூரி படிப்பைக் குறித்தும் பணிவாய்ப்புகள் குறித்தும் முடிவு செய்ய முடியும் என்பதால், இந்த விவகாரத்தில் இளைஞர்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். எதையும் மறைத்துக் கொள்ளக் கூடாது.
விருப்பங்களையும் திறமைகளையும் தனியாக எழுதிவைத்து அவற்றுக்கேற்ற பணிவாய்ப்புகள் எவை என்பதை ஆராய வேண்டும். இதற்காக இணையதள வசதிகளையும் நூலகங்களையும் செய்தித்தாள்களையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாம் நினைப்பதை விட பலநூறு வேலைவாய்ப்புகள் சமூகத்தில் காணப்படுகின்றன. அவை குறித்த தெளிவான விழிப்புணர்வு மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதற்காகப் பல கல்வி நிபுணர்கள் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். அவற்றின் வாயிலாக பல்வேறு வேலைவாய்ப்புகளையும் கல்லூரி படிப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். பணிவாய்ப்புகள் குறித்து குறிப்புகளை எடுத்த பிறகு, அதற்கான கல்லூரி படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது குறித்து மாணவர்கள் ஆராய வேண்டும்.
கல்லூரி படிப்புகள் தொடர்பாகவும், அப்படிப்புகள் எந்தெந்தக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன என்பது தொடர்பாகவும் மாணவர்கள் தகவல்களைச் சேகரிக்க வேண்டும். திறமைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற வகையில் அந்தக் கல்லூரி படிப்புகள் உள்ளனவா என்பதை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பல்வேறு படிப்புகள் குறித்து தெரிந்து கொண்ட பின்னர் அவற்றில் பிரதானமான 3 படிப்புகளைத் தெரிவுசெய்து கொள்ள வேண்டும். அப்படிப்புகளில் உள்ள வேலைவாய்ப்புகள், அப்படிப்புகளுக்குத் தேவைப்படும் திறமைகள் உள்ளிட்டவற்றை முழுமையாக ஆராய வேண்டும்.
கல்லூரிப் படிப்பை நிறைவு செய்வதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தேவைப்படும். 3 ஆண்டுகளுக்குப் பிறகும் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பும் புத்தாக்கத்துக்கான வாய்ப்புகளும் காணப்படுமா என்பதை இளைஞர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதிலிருந்து உரிய கல்லூரி படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அது சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதில் மாணவர்கள் அதிக
கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக, துறைகளில் புத்தாக்கங்களை ஏற்படுத்துவதிலும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும் மாணவர்கள் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
அத்தகைய நடவடிக்கைகள் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் சமூகத்துக்கும் பெரும் பலன்களை ஏற்படுத்தித்தும். முறையான வழிமுறைகளைப் பின்பற்றி, சரியான கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT