இளைஞர்மணி

வேலையை முடிக்க காலக்கெடு... சமாளிக்கும் வழிமுறைகள்!

சுரேந்தர் ரவி

பெரும்பாலான இளைஞர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் ஒன்று, பணி சார்ந்த மனஅழுத்தம். முக்கியமாக தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு பணிச்சூழல் சார்ந்த மனஅழுத்தம் ஏற்படுகிறது. அவர்களது மனஅழுத்தத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்ற காலக்கெடு அவர்களுக்கு விதிக்கப்படுவதே.

குறிப்பிட்ட காலத்துக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று இளைஞர்கள் தொடர்ந்து பணி செய்து வருவதால், அவர்களுடைய வேலைப்பளு அதிகரித்துவிடுகிறது. அதன் காரணமாக அவர்களுக்கு மனஅழுத்தமும் அதிகரிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட பணியை எவ்வளவு காலத்துக்குள் எவ்வளவு பேர் வேலை செய்தால் முடிக்க முடியும் என்பதை சரியாகக் கணக்கிடாமல், சில நிறுவனங்களில் மேலாளர்கள் காலக்கெடுவை விதித்து விடுகின்றனர். அதனால் அவர்கள் கூறியுள்ள காலத்துக்குள் பணியை முடிக்க கடும் முயற்சி செய்யும்போது, பணியாளர்களுக்கு மனஅழுத்தம்ஏற்படுகிறது.

வேறுசில சமயங்களில் பணியாளர்களே காலக்கெடுவைத் தவறாக நிர்ணயிப்பதாலும் அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது.

இப்படி காலக்கெடு விதிப்பதாலும், குறிப்பிட்ட காலத்துக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்வதாலும் ஏற்படும் மனஅழுத்தத்திலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

காலக்கெடுவை எப்படி நிர்ணயிப்பது?

பணியாளர்களின் செயல்திறனை ஊக்குவிப்பதற்காகவே காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால், சில நிறுவனங்களின் மேலாளர்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு அதிக வேலையைச் செய்ய வைக்கும் நோக்கத்தோடு காலக்கெடுவை நிர்ணயிக்கின்றனர். இதனால் வேலையின் தரம் குறைவதோடு, பணியாளர்களுக்கு மனஅழுத்தமும் ஏற்படுகிறது.

பணியாளர்களின் செயலாற்றும் திறனையும் பாதிக்கிறது. எனவே, குறிப்பிட்ட பணியை சிறுசிறு பகுதிகளாகப் பகுத்து ஒவ்வொரு பகுதியையும் நிறைவு செய்வதற்குத் தனித்தனி காலக்கெடுக்களை நிர்ணயிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பிட்ட பணியை 1 மாதத்துக்குள் முடிக்க வேண்டுமென்றால், ஒரு மாதத்தை நான்காகப் பிரித்து, வார அளவிலான காலக்கெடுகளை நிர்ணயிப்பதால், பணியாளர்களின் செயல்திறன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதும் குறையும். அந்த ஒரு வார காலத்துக்குள் வேலையை முடிக்க முடியவில்லை என்றால் காலக்கெடு குறித்த மறு திட்டமிடலையும் செய்ய முடியும்.

பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் மனஅழுத்தம் ஏற்படும் அளவு, மாறுபடும். பணியாளர்களுக்கு குறைந்த அளவிலான மனஅழுத்தம் இருந்தால் அது நன்மையை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட அளவில் கட்டுக்குள் இருக்கும் மனஅழுத்தம், பணிகளை விரைந்து முடிப்பதற்கான தூண்டுதலை அளிக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்டஅளவுக்கு மேல் மனஅழுத்தம் அதிகரிப்பதுதான் பணியாளர்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

காலக்கெடுவை நிர்ணயிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காலக்கெடுவை நீண்ட நாள்களுக்கு நிர்ணயிக்கக் கூடாது. நீண்ட காலத்துக்கு நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவால் பணியாளர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு அவர்களுக்குப் பணியில் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. முழு ஈடுபாட்டுடன் அவர்களால் பணி செய்யமுடியாமல் போகிறது.

வேலையை உடனடியாக முடிக்கும் வகையில் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். அதுவே பணியாளர்களைத் தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஊக்குவிக்கும். பணியில் சோர்வும் ஏற்படாமல் தக்க சமயத்தில் பணியை முடிப்பதற்கு உதவும்.

ஒரு குறிப்பிட்ட பணியை முடிப்பதற்கான காலக்கெடு குறித்து, நமக்கு நெருக்கமானவர்களுடனோ நண்பர்களுடனோ கூறுவது நன்மையளிக்கும். நாம் ஏதாவது காரணத்தால் சோர்வடைந்து பணியில் சற்று பின்தங்கும்போது அவர்கள் காலக்கெடுவை நமக்கு நினைவூட்டி பணியை உரிய நேரத்தில் முடிப்பதற்கு ஊக்குவிப்பார்கள்.

நம்மைக் கண்காணிக்கும் மேலாளர்களுடன் காலக்கெடுவைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் நாம் செய்யும் பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதால், காலக்கெடுவுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையுமா என்பதைத் தெரிந்து கொள்வதோடு, குறிப்பிட்ட காலத்துக்குள் வேலையை முடிக்க அவர்களால் முடிந்த பிற உதவிகளையும் செய்வார்கள். அல்லது தொடர்புடைய மேலாளர்களுக்கு பணியின் நிலையை எடுத்துச் சொல்லி காலக்கெடுவை நீட்டிக்க உதவுவார்கள். கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்வார்கள்.

வேலை செய்யும் நாமே காலக்கெடுவை நிர்ணயித்துச் செயல்படுவதில் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. நாம் நிர்ணயித்த காலக்கெடுவை நாமே மீறுவோம். அது பணியில் ஒழுங்கின்மையை ஏற்படுத்துகிறது. எனவே நமக்கான அனைத்து சூழலையும் கருத்தில் கொண்டே காலக்கெடுவை நாம் நிர்ணயிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு விளையாட்டுகளின் மீதான மோகம் அதிகரித்துக் காணப்படுகிறது. பணி சார்ந்த காலக்கெடுவையும் விளையாட்டு போன்று கருதி, பணியை உரிய காலத்தில் செய்து முடிப்பதை சவாலாக எடுத்துக் கொண்டு, இளைஞர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றால் பணியும் சரி, காலக்கெடுவும் சரி ஒரு குறிப்பிட்ட விஷயமாகவே இளைஞர்களுக்குத் தோன்றாது. பணியையும் விளையாட்டைப் போல செய்து வந்தால் அதன் மீது கூடுதல் ஈடுபாடு ஏற்படும்.

பணி சார்ந்த மனஅழுத்தம் காரணமாக இளைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களின் இளமைப்பருவம் வேலை என்னும் சிறையில் அடைக்கப்பட்டுவிடுகிறது. எனவே, காலக்கெடுவை முறையாக நிர்ணயிக்கும்படி மேலாளர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் என்னென்ன காரணங்களால் வேலையை முடிக்க முடியாது என்பதை மேலாளர்களிடம் விளக்கிச் சொல்ல வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேலையை முடிப்பதற்கான முயற்சிகளில் முடிந்த அளவுக்கு நீங்கள் ஈடுபடுவதைப் பற்றியும் அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் சரியான காலக்கெடுவை அவர்கள் நிர்ணயிப்பார்கள். அப்போதுதான் மனஅழுத்தத்திலிருந்து நீங்கள் விடுதலை பெற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT