இளைஞர்மணி

வெள்ளியின் ரகசியம்?

15th Jun 2021 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

பூமியின் சகோதரி என அழைக்கப்படும் வீனஸ் (வெள்ளி) கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக டாவின்ஸி + மற்றும் வெரிடாஸ் என்கிற இரு விண்வெளித் திட்டங்களை அறிவித்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. சூரிய மண்டலத்தில் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி. பாறைகள் நிறைந்த இந்த மூன்று கிரகங்களில் நமது சொந்த கிரகமான பூமியைப் பற்றி எப்போதும் புதிதாக எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறோம்.

செவ்வாய் கிரகம் தொடர்பாக பல்வேறு நாடுகள் விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருப்பதால் அந்தக் கிரகம் குறித்தும் நமக்கு ஓரளவு தெரியும். ஆனால், அதிகம் கவனம் பெறாத கிரகம், வெள்ளிதான். சூரிய மண்டலத்தில் மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். நாசாவின் புதிய திட்டங்கள், வெள்ளி கிரகம் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்தக்கூடும்.

நாசா கடைசியாக 1989-இல் அனுப்பிய மகெல்லன் என்ற ஆர்பிட்டர் வெள்ளி கிரகத்தைச் சென்றடைந்தது.

ADVERTISEMENT

அக்கிரகத்தின் தரைப்பரப்பு முழுவதையும் புகைப்படங்களாகப் பதிவு செய்து, 1,200 ஜிகாபைட் அளவுக்குதரவுகளை அளித்தது. அந்த நேரத்தில் அது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. அதன்பிறகு நாசா வெள்ளி கிரகத்தை கண்டுகொள்ளாத நிலையில், ஐரோப்பா, ஜப்பானின் விண்வெளி நிறுவனங்கள் வெள்ளி கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டன. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் வீனஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமானது 2006-இல் வெள்ளி கிரகத்தை அடைந்து சுமார் 8 ஆண்டுகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டது.

ஜப்பானின் அகாட்சுகி வெள்ளியின் சுற்றுவட்டப் பாதைக்குள் 2015-ஆம் ஆண்டு நுழைந்து இன்றும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளி கிரக ஆராய்ச்சியில் மீண்டும் ஈடுபட விருக்கிறது நாசா. டாவின்ஸி+ விண்கலத் திட்டமானது சூடான கிரகமானவெள்ளியின் வளிமண்டல அமைப்பை அளவிடும். மேலும், வெள்ளியில்எப்போதாவது கடல் இருந்ததா என ஆய்வு மேற்கொள்ளும். விண்கலத்தில் பொருத்தப்படும் அதிநவீன கேமரா, வெள்ளியின் புவியியல் அம்சங்களின் உயர்தரமான புகைப்படங்களை அனுப்பும். வெரிடாஸ் விண்கலத் திட்டமானது, பூமியை விட வெள்ளி ஏன் வித்தியாசமாக அமைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முயலும் ஆய்வை மேற்கொள்ளும். நாசாவின் கூற்றுப்படி, வெள்ளி கிரகத்தின் பாறை வகைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், எரிமலை போன்ற செயல்பாடுகள் இன்றும் நடைபெறுகிறதா என்பதை அறிந்து கொள்ளவும் வெரிடாஸ் திட்டம் உதவும். 2028-30-ஆம் ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

"எல்லா காலத்துக்குமான சிறந்த ஓவியமான மோனாலிசா ஓவியத்தை வரைந்த லியனார்டோ டாவின்சியின் பெயர் வெள்ளி கிரக திட்டங்களில்ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தில் ஒரு "மோனா வீனஸ்' காத்திருக்கிறது என நாங்கள் நினைக்கிறோம். அதை மனிதகுலம் அனைத்துக்குமான ஒன்றாக கண்டுபிடிக்க விரும்புகிறோம். அது அழகாக இருக்காதா என்ன'என்கிறார் நாசா விஞ்ஞானி டாக்டர் கார்வின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT