இளைஞர்மணி

நிறைகளால் நிறையட்டும் மனம்!

15th Jun 2021 06:00 AM | த.லாவண்ய சோபனா

ADVERTISEMENT

 

ஒரு வெற்று கோப்பையில் உள்ள காற்றை வெளியேற்ற வேண்டுமெனில் அதை மற்ற பொருளால் நிரப்புவதே சிறந்த தீர்வு. அதே போல் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை வெளியேற்ற நேர்மறை எண்ணங்களால் நிரப்பியாக வேண்டும். நமக்கு நாமே மனதார சொல்லிக்கொள்ளும் நேர்மறைச் சொற்றொடர்கள் உணர்வுகளாக மாற்றப்படும் போது உத்வேகம் பிறக்கிறது. 

இயற்கையின் ஈர்ப்பு விதிப்படி, மனமானது எதை நினைக்கின்றதோ அத்தகைய நிகழ்வுகளாலேயே அதிகம் ஈர்க்கப்படுகிறது. உதாரணமாக  இணையதளத்தில் நாம் சமையல் சம்பந்தமான நிகழ்வுகளைத் தேடுகிறோம் எனில், அடுத்த முறை அந்த சமையல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையே இணையம் நமக்குப் பரிந்துரைக்கும். அதுவே ஈர்ப்பு விதி. நீ எதை நினைக்கிறாயோ அதுவே உன்னைத் தேடி வரும்.  

ஒரு நாள் ஒரு காட்டு வழியே ஒரு தங்க வியாபாரி ஒருவன் பயணம் செய்தார். அப்பொழுது அங்கே ஒரு மூட்டை இருந்தன. அதைத் திறந்து பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 99 பொற்காசுகள் அதில் இருந்தன. அப்பொழுது அவர் மனதில் சந்தோஷத்தை விட சந்தேகம் தான் மேலிட்டது. "அதெப்படி 99 பொற்காசுகளைக் கொண்டு வருவார்கள்? இன்னும் ஒன்று இருந்திருக்க வேண்டுமே' என்று மனது கூறியது. அந்த ஒரு பொற்காசை தேடிக்கொண்டே காட்டுக்குள் சென்று தான் வந்த வழி மறந்து பரிதவித்து இறந்து போனார். சில நாட்களுக்குப் பின் அந்த வழியே ஒரு பிச்சைக்காரன் வந்தான். அவன் அந்தப் பையைப் பார்த்ததும் தங்கக் காசை அள்ளிக் கொண்டு ஓடி விட்டான். அதைக் கொண்டு தன் வாழ்வை சிறப்பாய் வாழ்ந்தான். இந்தக் கதையில் வரும் வியாபாரியைப் போல் பலர் தன் வாழ்வில் எது இல்லையோ, அதையே எண்ணி நொந்து வாழ்கிறார்கள். சிலர் பிச்சைக்காரனைப்போல் கிடைத்ததை மட்டும் எண்ணி மகிழ்வுடன் வாழ்கிறார்கள். வாழ்வில் நமக்கு அளிக்கப்பட்ட வரங்களைப் பார்க்கும் போது வாழ்வு வரமாகும்.  

ADVERTISEMENT

ஒரு முறை ஒரு மனிதன் தன்னுடைய வேலைப்பளு, பொருளாதாரம் என பல பிரச்னைகளால் அதிக மன அழுத்தத்தில் இருந்தான். அப்பொழுது தன் வீட்டிற்குச் சென்ற போது தன்னுடைய மணைவி பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.  உடனே அவளிடம், "" நமக்குத் திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. நீயும் இதையே தினமும் செய்கிறாய். இது உனக்கு மன அழுத்தத்தைத் தரவில்லையா?'' என்றான். அதற்கு அவள், ""நான் ஒன்றும் 14 வருடங்கள் மொத்தமாக சேர்த்து வைத்து பாத்திரம் கழுவவில்லையே? அன்றைய பாத்திரங்களை அன்றே சுத்தம் செய்து விடுகிறேன். இதில் என்ன இருக்கிறது?'' என்று பதிலளித்தாள். 

அன்று தான் அவனுக்குப் புரிந்தது தன்னுடைய மன அழுத்தத்திற்குக் காரணம், கடந்த கால கவலைகளையும், எதிர்கால பயத்தையும் மனதில் தேக்கி வைத்திருப்பதுதான் என்று. அன்று முதல் அன்றைய நாளில் நடக்கும் விஷயங்களை மட்டுமே மனதில் வைத்தான். வலிகளையும் வேதனைகளையும் விட, சாதனைகளையும், சந்தோஷங்களையும் மனதில் சேமிக்கத் தொடங்கினான். 

தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க சில வீரர்கள் சென்றிருந்தனர், அங்கு தங்களிடம் மோத இருப்பது தேசிய அளவில் முதலிடம் பெற்ற அணி என்று அறிந்ததும் இனி தாங்கள் ஜெயிப்பது கடினம் என அனைவரும் பயந்தனர். முதல் சுற்றில் அவர்கள் தோற்றுப் போனார்கள். இதைக் கண்ட பயிற்சியாளர் தன் வீரர்களை அழைத்து, "" இந்த முறை நீங்கள் அனைவரும் நான் கொடுக்கும் இந்த புதிய மட்டையால் விளையாடுங்கள்; இது ஒரு சித்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட அற்புதமான (பேட்) மட்டை. இதில் நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு பாலும், கோல் தான் என்றார். 

இதனால் உற்சாகம் பெற்ற வீரர்கள், அடுத்த சுற்றில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப் பற்றினார்கள். வீரர்களின் மனதில் தோல்வி எண்ணம் மேலோங்கிய போது பயம் படர்ந்து செயல்பாடு சுருங்கியது. வெற்றி பற்றிய எண்ணம் மேலோங்கிய போது நம்பிக்கை மேலோங்கி நட்சத்திரமாய் ஜொலித்தார்கள். இதுவே நேர்மறை எண்ணங்களின் சக்தி. 

டான் கிளிஃப்டன் என்ற உளவியலாளரின் கருத்துப்படி,  புகைபிடித்தல் ஒரு மனிதனின் வாழ்நாளைக் குறைப்பதை விட எதிர்மறை எண்ணங்கள் அவனது வாழ்நாளை அதிகம் குறைக்கின்றன. மேலும் நேர்மறையாக சிந்திப்பவர்களின் உடலில் ப4 எனப்படும் (ஹெல்ப்பர் செல்ஸ்) துணை செல்கள் அதிகம் உற்பத்தியாகி நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடும் என்கிறார். 

ஒரு மனிதனின் எதிர்மறை உனர்வுகளே அவனுக்கு எமனாகும் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்தது கொரியன் போரில் நிகழ்ந்த நிகழ்வு. போருக்குப் பின் சிறைபிடிக்கபட்ட அமெரிக்க வீரர்கள் கொரிய சிறையில் அடைக்கப் பெற்றனர். அவர்கள் உடலளவில் எந்தத் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை. ஆனால் அங்கு அதிக இறப்பு ஏற்பட்டது. ஏனெனில் அங்கு அவர்களுக்கு மனதளவிலான துன்புறுத்துதல் தரப்பட்டது. அவர்கள் தன்னைத் தானே குறைவாக மதிப்பிடும் பழக்கம் அவர்களிடம் புகுத்தப்பட்டது.

ம்பிக்கையில்லாத் தன்மை அவர்களை ஆட்கொண்டது. உதாரணமாக அவர்கள் வீட்டில் இருந்து வரும் அன்பைப் பரிமாறும் தபால்கள் எதுவும் அவர்களிடம் பகிரப்படவில்லை. ஆனால் இழப்பைப் பற்றிய, பொருளாதார மற்றும் உயிர் இழப்பைப் பற்றிய, தகவல்கள் உடனே கொண்டு சேர்க்கப்பட்டன. இதனால் தாம் எதற்காக வாழ வேண்டும் என்று எண்ணியே பலர் தனிமையில் இருந்து இறந்து போனார்கள். எதிர்மறை உணர்வுகள் மனிதனை எளிதில் கொல்லும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது.  

எதைப் பற்றி நாம் கவலைப்படுகிறோமோ அந்த கவலை நம் உடலையும் மனதையும் பாதிக்கும். ஆனால் அது நேர்மறையாக நடந்து விட்டதாக நம்பி அதைக் கற்பனை செய்து அந்த உணர்வில் நம்பிக்கை கொண்டால் அது நடக்கும் என்கிறது உளவியல். அதுவே "விஷுவலைசேஷன்' எனப்படும் கலை.  இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல.

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று'

என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே பாரதி கண்ட கனவு தான் அது. 

நேர்மறை எண்ணங்கள் மனிதனை வாழச் செய்யும்; எதிர்மறை எண்ணங்கள் வீழச்செய்யும். கரோனாவால் என்ன ஆகுமோ இவ்வுலகம்? என்று பயப்படுவதை விட, "உலகில் மீண்டும் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் நடந்தேறும், மனதில்  மகிழ்ச்சி பொங்கும்' என நம்பிக்கை கொள்வதே நமக்கும், உலகிற்கும் சிறப்பாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT