இளைஞர்மணி

மூங்கில் இலை தேநீர்!

15th Jun 2021 06:00 AM | ந.ஜீவா

ADVERTISEMENT

 

தேநீர் அருந்தாத மக்கள் இருக்கும் நாடு என்று உலகத்திலேயே எதுவுமே இருக்காது என்றே தோன்றுகிறது. தேநீர் அருந்தும் பழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. உலகிலேயே அதிகமான அளவுக்கு தேநீர் அருந்தும் மக்கள் துருக்கி, அயர்லாந்து, பிரிட்டன், ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளனர். இந்தியாவிலும் தேநீர்ப் பிரியர்கள் அதிகம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திரிபுராவில் உள்ள ஓர் இளைஞர் வித்தியாசமான தேயிலை ஒன்றை தயாரித்து, பிரிட்டனுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக்கிறார். அவர் தயாரித்த தேயிலை, மூங்கில் இலை தேயிலை ஆகும்.

சமீர் ஜமாத்தியா என்ற அந்த இளைஞர் தன்னை "மூங்கில் தொழில்நுட்ப வல்லுநர்' என்று அழைத்துக் கொள்கிறார். திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள கர்ஜி என்ற ஊரைச் சேர்ந்தவர் சமீர்.

ADVERTISEMENT

திரிபுராவில் 3,246 சதுர கி.மீ.பரப்பளவில் மூங்கில் வளர்க்கப்பட்டுள்ளது. 21 வகையான மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. திரிபுராவின் வனத்துறையினரும், கிராமப்புற வளர்ச்சித்துறையினரும் இணைந்து கடந்த 2019- ஆம் ஆண்டு 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் புதிதாக மூங்கில்களை வளர்க்க அந்தப் பகுதியில் வாழும் மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதற்காக அந்த மக்களுக்கு ஊக்கத் தொகையும் அளித்து வருகின்றனர். திரிபுரா மக்களையும் மூங்கில்களையும் பிரிக்க முடியாது என்ற அளவிற்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது.

""எங்களுக்கும் மூங்கிலுக்குமான தொடர்பு வலுவானது. மூங்கிலாலான பல்வேறு பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். எனது தாத்தா சளி, இருமல், தலைவலி, உடல்வலி ஆகியவற்றைப் போக்க, மூங்கில் இலை உட்பட பலவிதமான மூலிகைகளையும், செடிகளையும் பயன்படுத்தி மருந்து தயாரித்துக் கொடுப்பார். அப்போதெல்லாம் அவற்றின் அருமை எங்களுக்குத் தெரியவில்லை. அவர் என்ன நோய்க்கு எந்த மூலிகையைப் பயன்படுத்தினார் என்பதைக் கூட நாங்கள் தெரிந்து கொள்ளவில்லை. இப்போது உலக அளவில் மூங்கிலின் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகிறது'' என்கிறார் சமீர்.

மூங்கிலைப் பல்வேறுவிதங்களில் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ள சமீருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவர் சீனாவில் உள்ள நான்ஜிங் பல்கலைக்கழகத்தில் மூங்கில் தொழில்நுட்ப பிரிவில் பட்டயப் படிப்புக்காக 2007-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். கல்வி உதவித்தொகை பெற முயன்று அது கிடைத்ததும், 2008-ஆம் ஆண்டு மூங்கில் தொழில்நுட்பத்தைக் கற்க சீனாவுக்குச் சென்றார் சமீர். இந்தப் பட்டயப்படிப்பின் கால அளவு 1 மாதமே. என்றாலும், சமீர் உடனே சீனாவில் இருந்து திரும்பிவிடவில்லை.

சீனர்கள், ஜப்பானியர்கள் மூங்கில் இலை தேநீரை அதிக அளவில் அருந்துவதைப் பார்த்திருக்கிறார். மூங்கிலைப் பயன்படுத்தி நிறையப் பொருள்கள் அங்கே செய்யப்படுவதையும் அவர் பார்த்திருக்கிறார். இது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள அவர் கம்போடியா, வியட்நாம், ஜப்பான் என்று பலநாடுகளுக்குச் சென்றிருக்கிறார். அவற்றை நேரில் பார்த்த பிறகே திரிபுராவுக்குத் திரும்பியிருக்கிறார்.

""இந்தப் பயணங்களின்போது, என் முழு ஆர்வமும், கவனமும் மூங்கில் தொடர்பான தொழில்நுட்பங்களைக் கற்பதிலேயே இருந்தது. எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு விஷயங்களை உள்வாங்கிக் கொண்டேன். நான் அங்கே பார்த்தவை எல்லாம் எனக்குத் திகைப்பூட்டும் அளவுக்குப் புதியனவாக இருந்தன. எனவே என் முழுநேரத்தையும் அவற்றைக் கற்பதற்காகவே செலவழித்தேன்'' என்கிறார் சமீர்.

வெளிநாடுகளிலிருந்து திரும்பியதும், அங்கே கற்றுக் கொண்டவற்றில் இருந்து மூங்கிலைப் பயன்படுத்தி நிறையப் பொருள்களைச் செய்ய வேண்டும் என்ற நிறைய ஐடியாக்கள் அவருக்குத் தோன்றியிருக்கிறது. அவற்றைச் சமீர் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.

அந்த முயற்சிகளில் உருவானதுதான் மூங்கில் இலை தேநீர்.

""மூங்கிலில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. எல்லா மூங்கில் இலைகளும் தேநீர் தயாரிக்கப் பயன்படுவதில்லை. குறிப்பாக "கனக் கய்ச்' என்ற மூங்கில் வகையின் இலைகள்தேநீர் தயாரிக்கப் பயன்படாது. எந்த வகை மூங்கில் இலைகள் தேநீர் தயாரிக்கப் பொருத்தமானவை என்பதை முதலில் நான் கண்டுபிடித்தேன். அதற்குப் பிறகு என் தயாரிப்புப் பணிகள் தொடங்கின' என்கிறார் சமீர்.

மூங்கில் இலைகளின் கொழுந்துதான் தேநீர் தயாரிக்கப் பயன்படும். முற்றிய இலைகள் பயன்படுவதில்லை.

""கொழுந்தாக உள்ள மூலிகை இலைகளைப் பறித்து, அவற்றைக் குறைந்தது ஏழு நாள்கள் நேரடி வெயிலில் படாமல் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு, அவற்றைக் கைகளினால் கசக்கி, சிறு துண்டுகளாக்க வேண்டும். தூள்வடிவில் மூங்கில் இலைகள் ஆனதும் அவற்றைப் பயன்படுத்தலாம். இதில் ரொம்ப ரொம்ப முக்கியம் நேரடி வெயில் படாமல் பார்த்துக் கொள்வதும், மழை ஈரம் காற்றில் கலக்காத நேரத்தில் காய வைப்பதும் ஆகும்'' என்கிறார் சமீர்.

சமீர் தயாரித்த 600 கிலோ மூங்கில் இலைத் தேயிலை பிரிட்டனுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் தில்லியில் உள்ள ஏற்றுமதியாளர்களின் மூலமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து ஏற்றுமதி செய்யும் ஒருவர் திரிபுராவுக்கு வந்து, மூன்று நாட்கள் தங்கியிருந்து எப்படி மூங்கில் இலையைத் தேயிலையாக மாற்றுவது என்பதற்குப் பயிற்சி பெற்றுச் சென்றுள்ளார்.

""மூங்கில் இலை பல்வேறு மருத்துவ குணங்கள் உடையது. அதில் ஆன்டிஆக்ஸிடென்ட்டுகள் நிரம்பியுள்ளன. ஆன்டிபயாடிக்ஸ்களும் உள்ளன. எனவே மூங்கில் இலைத் தேநீரை அருந்தினால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகும். இந்தத் தேநீர் உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். தோல் நோய்களைத் தடுக்கும். முடி உதிர்வதைத் தடுக்கும். சிறு குழந்தைகளுக்கு வரும் அல்ûஸமர் நோயைக் கட்டுப்படுத்தும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு உதவும்'' என்கிறார் சமீர்.

மூங்கிலைப் பயன்படுத்தி தற்போது சமீர் தயாரித்திருப்பது, மூங்கில் பீர்!

ADVERTISEMENT
ADVERTISEMENT