இளைஞர்மணி

தேவையற்ற அழைப்புகள்... தப்பிக்க சில வழிகள்!

சுரேந்தர் ரவி

நாடு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் தொழில் நிறுவனங்களும் புதிய புதிய முறைகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிக்கின்றன.
வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு அவர்களுக்கு உள்ள எளிதான வழி செல்லிடப்பேசி. செல்லிடப்பேசி எண்ணுக்கு அழைத்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் பெரும்பாலான நிறுவனங்களும் தனிநபர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தனிநபர் ஒருவரின் தகவல் தொடர்புக்கு உரிய சாதனமான செல்லிடப் பேசி, இன்று தேவையற்ற அழைப்புகளுக்கு உரியதாகிவிட்டது. முன்பின் தெரியாத நபர்கள் செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு பேசுவது அதிகரித்துவிட்டது. செல்லிடப் பேசி ஒலிக்கும்போது, ஒருவர் தீவிரமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில், ஓய்வில் இருக்கலாம். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், செல்லிடப் பேசியில் எந்த நேரம் வேண்டுமானாலும் தொடர்பு கொள்வது அதிகரித்துவிட்டது. அத்தகைய தேவையற்ற அழைப்புகளைத் தடுப்பதற்கு செல்லிடப்பேசியிலேயே சில வசதிகள் உள்ளன.
இதுபோன்ற அழைப்புகளிலிருந்து தப்புவதற்காகஇந்திய அரசே ஒரு வலைதளத்தை நடத்தி வருகிறது.
"நேஷனல் டோன்ட் கால் ரிஜிஸ்ட்ரி' என்ற வலைதளத்தில் சென்று செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்து கொண்டால், அவசியமற்ற அழைப்புகளைத் தடுக்க முடியும். எனினும், இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
இந்த வலைதளத்தில் பதிவு செய்த சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகே இது நடைமுறைக்கு வரும். இதையும் கடந்து சில நிறுவனங்கள் செல்லிடப்பேசிக்குத் தொடர்பு கொள்ள வாய்ப்புகளும் உள்ளன. அவசியமற்ற அழைப்புகளைத் தடை செய்வதற்கு ட்ரூகாலர், ஏடி & டி கால் புராடெக்ட், ஸ்பிரிண்ட்/ டி - மொபைல் ஸ்காம் ஷீல்ட், வெரிஸான் கால் ஃபில்டர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்வதன் வாயிலாக தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்க முடியும். அவசியமற்ற அழைப்புகளைத் தவிர்ப்பதற்கு செல்லிடப்பேசியிலேயே சில வசதிகள் காணப்படுகின்றன.
ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஃபோன் மெனுவில் சென்று அதிலுள்ள 3 புள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் செட்டிங்ஸ் மெனுவில் காலர் ஐடி & ஸ்பேம் என்பதில் ஃபில்ட்டர் ஸ்பேம் கால்ஸ் என்ற வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த செல்லிடப்பேசிகளில் இந்த வசதி வேறுசில பெயர்களில் காணப்படும். சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த செல்லிடப்பேசிகளில் செட்டிங்ஸ் மெனுவில் காலர் ஐடி & ஸ்பேம் புரொடெக்ஷன் என்ற வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஐஓஎஸ் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், செட்டிங்ஸில் ஃபோன் மெனுவுக்குச் சென்று அதில் சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் சில எதிர்விளைவுகளும் உள்ளன. புதிய எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளையும் இது துண்டித்துவிடும். செல்லிடப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்கள், நாம் அழைத்த எண்கள் உள்ளிட்டவற்றிடமிருந்து வரும் அழைப்புகளை மட்டுமே இந்த வசதி அனுமதிக்கும். ரோபோகில்லர், ட்ரூகாலர் உள்ளிட்ட செயலிகளையும் பதிவிறக்கம் செய்து கொண்டால் தேவையற்ற அழைப்புகளைத் திறம்படத் தடுக்க முடியும்.
சில செல்லிடப்பேசி எண்களை நாமே தடை (பிளாக்) செய்ய முடியும். ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவோர் ஃபோன் மெனுவில் சென்று, தடை செய்யப்பட வேண்டிய எண்ணை சிறிது நேரம் அழுத்த வேண்டும். அதையடுத்து தோன்றும் வசதிகளில் பிளாக் / ரிப்போர்ட் ஸ்பேம் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் அந்த எண்ணிலிருந்து அழைப்புகள் வருவதைத் தடுக்க முடியும்.
இதே வழிமுறையைப் பயன்படுத்தி பல்வேறு எண்களைத் தடை செய்ய முடியும். ஏற்கெனவே தடை செய்யப்பட்ட எண்ணை நீக்குவதற்கும் செல்லிடப்
பேசியில் வழி உள்ளது. செட்டிங்ஸில் சென்று பிளாக்டு நம்பர்ஸ் என்ற வசதியில் தேவையான எண்ணைத் தடை செய்யவும், ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட எண்ணை நீக்கவும் முடியும்.
ஐஓஎஸ் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தடை செய்யப்பட வேண்டிய எண்ணைத் தேர்ந்தெடுத்து அதற்கு அருகில் உள்ள பொத்தானை அழுத்திய பின் தோன்றும் வசதிகளில் பிளாக் திஸ் காலர் என்ற வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட எண்கள் அடங்கிய தொகுப்பிலிருந்தும் குறிப்பிட்ட எண்களைத் தடை செய்ய முடியும். ஐஓஎஸ் செல்லிடப்பேசியிலும் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட எண்களை அதிலிருந்து நீக்க முடியும். இந்த வசதிகளைப் பயன்படுத்தி தேவையற்ற அழைப்புகள், அவசியமற்ற அழைப்புகள் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க முடியும். தொழில்நுட்பங்களைத் திறம்பட பயன்படுத்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT