இளைஞர்மணி

முந்தி இருப்பச்செயல் - 52: உலகை அறியும் திறன்

8th Jun 2021 06:00 AM | சுப. உதயகுமாரன்

ADVERTISEMENT


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவும், வட அமெரிக்காவும் முதலாளித்துவ மேற்கு நாடுகள் என்றும், பொதுவுடமை போற்றும் கிழக்கு நாடுகள் என்றும் பிரிந்து நின்றன. 
தத்தம் படைபலத்தையும், அணுவாயுதங்களையும் பெருக்கிக் கொண்ட இவ்விரண்டு குழுக்களும் ஒரு பெரும் பனிப்போரில் ஈடுபட்டன. 
முப்பதாண்டுகளுக்கு முன்னர், மேற்படி கிழக்கு நாடுகளில் கோலோச்சிய கொடுங்கோன்மை அரசுகள் மக்கள் ஆதரவையும், தங்கள் அதிகாரத்தையும் இழந்த போது, நமது உலகில் அடுத்த மாற்றம் நடந்தேறியது. அதுவரை நிலவி வந்த கிழக்கு--மேற்குப் பிரிவினை, வடக்கு-தெற்குப் பிளவாக மாறியது. 
தொழில்மயமாக்கப்பட்ட, பெரும்பாலும் வெள்ளையின மக்களைக் கொண்ட, "வளர்ந்த' வடக்கு நாடுகள்,  செல்வச் செழிப்பும், வசதி வாய்ப்புகளும் கொண்டவையாக விளங்குகின்றன. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட, கருப்பு, சிவப்பு, மஞ்சள், பழுப்பு நிற மக்களை உள்ளடக்கிய, "வளரும்' தெற்கு நாடுகள் போதிய செல்வமின்றி, வாய்ப்புகளின்றி, தாழ் நிலையில் தத்தளிக்கின்றன. இந்நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவம், வீட்டுவசதி, கல்வி, வேலை வாய்ப்பு எனும் அடிப்படை விடயங்களே போதிய அளவிலோ அல்லது தரமான வகையிலோ கிடைக்கவில்லை. 
வடக்கு நாடுகளின் "தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம்' என்னும் மும்மை முழு உலகையும் ஆக்கிரமித்திருக்கிறது. அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் உலக நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், உலக வர்த்தகம் போன்றவை "பணம்-இயந்திரம்-சந்தை' எனும் தாரக மந்திரத்தோடு இயங்குகின்றன. "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' எனும் முழக்கம் நமது இன்றைய உலகுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று. 
இந்த உலகை, இதன் ஏற்பாடுகளை நீங்கள் பல வழிகளில் புரிந்துகொண்டு எதிர்கொள்ளலாம். முக்கியமான மூன்று நிலைகளை ஒரு நேர்கோட்டில் அடையாளப்படுத்துவோம். 
இவ்வுலக ஏற்பாடுகள் ஏற்புடையனவாக இல்லை; இவற்றை மாற்றியமைத்தாக வேண்டும் என்று சிந்தித்து, செயல்படுவதை இடது கோடியில் சீர்திருத்தவாதம் என்று நிறுவலாம். இவ்வுலகு நன்றாகத்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது, இதனை இப்படியே தக்க வைத்துக் கொள்வதுதானே உசிதமானது என்றெண்ணுவதை பழமைவாதம் என்றழைத்து வலதுகோடியில் அடையாளப்படுத்தலாம். இவ்விரண்டு துருவநிலைகளுக்கும் இடையே, இங்கேயும் அங்கேயுமாகத் தெளிவின்றி ஊசலாடிக்கொண்டிருக்கும் தன்மையை அந்நேர்கோட்டின் மையப்புள்ளியில் அடையாளப்படுத்தலாம். இவற்றை இடதுசாரி, மையசாரி, வலதுசாரி அணுகுமுறைகள் என்று அழைக்கலாம். 

நம்முடைய இன்றைய உலகத்தை, அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை, ரத்தினச் சுருக்கமாக இப்படித்தான் விவரிக்க முடியும். இதனை நீங்கள் உள்வாங்கிக்கொண்டு, உங்களின் சமூக-பொருளாதார- அரசியல் நிலைப்பாட்டைத் தேர்ந்து கொள்ளுங்கள். 

இப்போது தனி வாழ்க்கை மற்றும் பொதுவாழ்க்கை எனும் இரண்டு வழிகள் உங்கள் முன் நீண்டு கிடக்கின்றன.

"தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் 
இவையுண்டு தானுண்டென்போன் 
சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன்!'
"தூய உள்ளம் அன்புள்ளம் சமத்துவ உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் "ஒன்றே எனும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! 
என்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ADVERTISEMENT

ஆனால் காலத்தினாற் செய்த  நன்றி,  சிறிதெனினும் ஒரு கடுகு உள்ளமும் தாயுள்ளமாய் பரந்து விரிய முடியும். அதே போல, ஒரு தாயுள்ளம் தகாத செயல்களால் தகைமை இழக்கும்போது, சிறுத்து கடுகு உள்ளம் ஆகிவிடும் ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது. 

எனவே உள்ளத்தின் அளவை விட, அதை உறங்கவிடாமல் பார்த்துக் கொள்வது, எப்போதும் விழித்திருக்கச் செய்வதுதான் மிகவும் முக்கியமானது. "பசித்திரு, தனித்திரு, விழித்திரு' எனும் வள்ளலார் பெருமானின் ஒப்பற்ற தாரக மந்திரம், இன்று நமது தவறுகளால் "விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு' என்று உருமாற்றம் அடைந்திருக்கிறது.

ஆம். உங்களின் உலகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று, பேராசை, மாசுபாடு, பருவநிலைத் தகர்ப்பு,  சாதியவாதம், மதவாதம், பெண்ணடிமைத்தனம், ஏழ்மை, வறுமை, வெறுப்பு, வன்முறை  என அந்நோய்களின் பட்டியல் நீண்டு கிடக்கிறது.
கோபம் கொண்ட பாரதி, அக்கினிக் குஞ்சாகக் கொதித்தெழுந்து,
"நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம் யாம்!' 
என்று சூளுரைப்பது போல, நீங்கள் கிளர்ந்தெழலாம்.
அல்லது கவிஞர் கண்ணதாசனின் பழைய பாடல் 
ஒன்றின் வரிகளைச் சொல்லி,
பொல்லாத உலகத்தில் கல்லாமல் புதுப் பாடம் கற்றேன்,
பொய்யாக வாழ்வோரை புகழ்ந்தாடும் கூட்டத்தைக் கண்டேன்,
சொல்லொன்று செயலொன்று இல்லாத பேர் இங்கு யாரப்பா?
என்று விரக்தியடைந்து விலகி நிற்கலாம்.
இவ்விரு துருவநிலைகளுக்கிடையே ஏராளமான செயல் வடிவங்களைக் கண்டுணர முடியும்.

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

என்றறைகிறது வள்ளுவம். நல்வழிகளை ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்குக; பல வழிகளில் ஆராய்ந்து கண்டாலும் அருளே நமக்குத் துணை. 

வியட்நாம் போர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தப் போரில் பெரும் அட்டூழியங்கள் புரிந்து கொண்டிருந்த அமெரிக்க அரசு தன்னுடைய அடாவடித்தனத்தை பல்வேறு பொய்களைச் சொல்லி நியாயப்படுத்திக் கொண்டிருந்தது. அதே நேரம், இரகசியமாக ஓர் ஆய்வையும் நடத்தி, தாங்கள் செய்து கொண்டிருப்பது அப்பழுக்கற்ற அநியாயம் என்கிற முடிவையும் எட்டியிருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்று, மேற்படி தகவல்கள் அனைத்தையும் அறிந்திருந்த டேனியல் எல்ஸ்பர்க்  எனும் ஓர் அமெரிக்கர் தன்னுடைய மனசாட்சியின் உந்துதலால், 1971-ஆம் ஆண்டு அத்தகவல்களை முன்னணி நாளிதழ்களில் வெளியிட்டார். 

உடனடியாகக் கைதுசெய்யப்பட்ட டேனியல் எல்ஸ்பர்க் 115 ஆண்டுகள் சிறையில் கழிக்கும் ஆபத்துடன் ஒரு பெரும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த வழக்கின் தன்மையை முழுமையாக அறிந்திருந்த, டேனியல் எல்ஸ்பர்க்குக்கு எதிராக அமெரிக்க அரசு கையாண்ட தவறான நடவடிக்கைகளை ஆய்ந்தறிந்த நீதிபதி, 1973-ஆம் ஆண்டு அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தார். 

நான் அமெரிக்காவில் நோட்ர டேம் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அங்கே உரையாற்றுவதற்காக டேனியல் எல்ஸ்பர்க் வருகை புரிந்தார். இந்தியாவில் பள்ளி மாணவனாக இருக்கும்போதே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த நான் மிகுந்த ஆர்வத்தோடு அவரது உரையைக் கேட்டேன். அவரின் உரையில் இந்தியாவும், மகாத்மா காந்தியும், அகிம்சைப் போராட்டமும் நீக்கமற நிறைந்திருந்தன. 

நிகழ்வு முடிந்ததும் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டுப் பேசினேன். என்னை ஒரு சக தோழனாகப் பாவித்து, அன்பொழுகப் பேசினார். வாஞ்சையோடு கைகுலுக்கிவிட்டு  அவர் விடைபெறும்போது, ""என் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?'' என்று கேட்டேன். அருகே நின்றிருந்த காரில் ஏறப்போன அவர், என் கைகளை மீண்டுமொருமுறை இறுகப்பற்றிக்கொண்டு, மெல்லிதாக சிரித்தவாறேச் சொன்னார்: ""சிறை செல்வதற்கான காரணம் ஒன்றைக் கண்டுபிடி!  

சிறை என்பது மேலோட்டமான ஓர் உருவகம்தான். அதன் கீழே ஓர் எளிய, ஆனால் ஆழமான கோட்பாடு புதைந்து கிடக்கிறது. அன்பு, கருணை, ஆதங்கம், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, கடமையுணர்வு என எல்லாமும் சரியான விகிதத்தில் கலந்து விரவிக் கிடக்கும் அந்த அற்புதமான உணர்வை, விழுமியத்தை ஒரே வார்த்தையில் வடித்தெடுக்கலாம்: கரிசனம்! வாழ்க்கை என்பதே கரிசனம் கொண்டிருப்பதுதானே! 

உங்கள் மீது கரிசனம் கொள்ளுங்கள்.
உங்கள் தன்மதிப்பின் மீது, கவுரவத்தின், 
கண்ணியத்தின் மீது கரிசனம் கொள்ளுங்கள்.
யாரையும் அடக்கி ஆளாமல், யாருக்கும் அடங்கி வாழாமல், சுதந்திரமாய் இருப்பதில் கரிசனம் கொள்ளுங்கள். 

உங்களோடு வாழ்வோர் அனைவர் மீதும் கரிசனம் கொள்ளுங்கள்.
நாட்டு நடப்புக்களில், உலக நிகழ்வுகளில் கரிசனம் கொள்ளுங்கள்.
அவற்றுக்கான அறவழித் தீர்வுகளில் கரிசனம் கொள்ளுங்கள். 

நாம் வாழும் மண் மீது கரிசனம் கொள்ளுங்கள்.

நீலக்கடல், நெடிய மலை, வான்மழை, வயல்கள் மீது கரிசனம் கொள்ளுங்கள்.
மரம், செடி, கொடி, மீன், விலங்கு, பறவைகள் மீது கரிசனம் கொள்ளுங்கள்.

உங்களின் தாயை ஈன்றப் பொழுதினும் பெரிதுஉவக்கச் செய்யுங்கள். உங்களை முந்தி இருப்பச் செய்த தந்தையை என்னோற்றான் கொல்? என்று ஊரார் வியக்கச் செய்யுங்கள்! கரிசனம் கொள்ளுங்கள்!

(நிறைவு பெற்றது)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com

Tags : Ability to know the world
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT