இளைஞர்மணி

வலிகளைக் கடந்து... வழிகளைக் காண்போம்!

8th Jun 2021 06:00 AM | - கே. பி. மாரிக்குமார்

ADVERTISEMENT

 

ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஒரு முனிவரும்   அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியை சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவேமுடியவில்லை.
அமைச்சர், அன்று காலையிலிருந்து நாள் முழுவதும் பயணம் செய்திருந்தார். மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்கு கோபம் அதிகமானது. நாய்களோ வெறித்தனமாக குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். 
பொறுமையிழந்து முனிவரை  எழுப்பிய அமைச்சர்,""என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று கேட்டார்.
முனிவரோ, தனது வழக்கமான பாணியில் கிண்டலுடன் பதில் கூறினார்: 
""அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை;  கோஷமிடவில்லை. அந்த நாய்களுக்கு இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை  பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்'' என்றார்.
""நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.
உடனே முனிவர், ""நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்து போராடுகிறீர்கள். அப்படி போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல, உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று உங்களுக்கு நீங்களே ஒரு நிபந்தனை போட்டுக் கொண்டீர்கள். நாய்கள் 
உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவதும் இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்கு சாத்தியமானதும் அதுதான். நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்'', என்றார் முனிவர்.
"இப்படியொரு உதவாக்கரை யோசனையை சொல்ல ஒரு முனிவரா?' என்று மனதுக்குள் பழித்தபடி அவ்விடத்தைவிட்டு போனார் அமைச்சர். ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து முனிவரைச் சந்தித்தார் அமைச்சர். 
""ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
முனிவர் நமக்குச் சொல்கிறார்: ""நம்மைச் சுற்றி இருப்பவற்றால் நாம் எரிச்சல் அடைந்தால், நம் கவனத்தை உள்முகமாகத் திருப்பி, எரிச்சலுக்கான காரணம் நாம்தான் என்பதை உணர்வோம். நமது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும்; அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை நமக்குள் நாம் விதித்திருப்போம். அதுதான் நமது எரிச்சலுக்குக் காரணம்... உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. எதிர்ப்பது வலுக்கும்''  என்கிறார்.
 இரண்டாம் அலை கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளும், தளர்வில்லா பொதுமுடக்கமும் பொதுமக்கள் அனைவரையும் ஒரு பீதிக்குள், மயான அமைதிக்குள் தள்ளியிருக்
கிறது. இளைஞர்கள் பலருக்கு வேலையில்லை. பலருக்கு நேரமிருந்தும் படிக்கின்ற சூழ்நிலை மற்றும் மனநிலையில்லை. இது சரியா? நாம் இப்படி விரக்தியால் முடங்கிக் கிடப்பதை விட, இந்த கிடைத்தற்கரிய நேரத்தைப் பயன்படுத்தி, நமது முன்னேற்றத்துக்கான அடித்தளத்தை ஏற்படுத்தவோ, வலுப்படுத்தவோ முயற்சிக்கலாம் அல்லவா? 
அந்தச் சிறுவனுக்கு பதின்மூன்று வயதில் படிப்பு முழுவதும் போச்சு. வீட்டில் ஏழ்மை. தொடர்ந்து பல நாட்களாகப் பசி. வேலை தேடித் தேடி அவனுக்கு அலுத்தும் போச்சு. ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்தச் சிறுவன்.
ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். வந்தவர் பையனிடம், ""டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப்  பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்'' என்றார்.
"ஆகா... இப்படி ஒரு வேலையா?' பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை ஏதாவது கிடைக்குமென நினைத்தவனின் கையில் பெரும்பணம். மகிழ்ந்தான் சிறுவன்.
 மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான் அந்தச் சிறுவன்.
அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். குதிரைக்காரனாக ஆரம்பித்து  குபேரனாகிவிட்ட  அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர். 
  கிடைக்கிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரன் குபேரனாகி இலக்கிய 
மாமேதையானதுபோல எல்லாருக்கும் வளர்ச்சியும் அதிசயமும் நடக்கத்தான் செய்யும். 

Tags : வழிகளைக் காண்போம்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT