இளைஞர்மணி

துருவித் துருவி ஆராய்பவரா நீங்கள்?

8th Jun 2021 06:00 AM | - ந.முத்துமணி

ADVERTISEMENT


எதையும் துருவித் துருவி ஆராய்பவரா நீங்கள்? உண்மையை பகுத்துணர்வதும், உறுதி செய்வதும்  உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? இந்தப் பண்புகள்  புலனாய்வுத்துறைக்குத் தேவையான பண்புகளாகும்.  கணக்கு வழக்குகளையும் இதே கண்ணோட்டத்தில்  நீங்கள் பார்ப்பீர்களா?   அப்படியானால்  உங்களுக்கு ஏற்ற   வேலைவாய்ப்புகளை இங்கே காணலாம்.

பட்டயக்கணக்காளர், அடக்கவிலை கணக்காளர்: பட்டயக்கணக்காளர்(சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) மற்றும் அடக்கவிலை கணக்காளர் (காஸ்ட் அக்கவுண்டன்ட்)  பணிகளில் ஈடுபட்டிருப்போர் கணக்கு தணிக்கை வேலையில் ஈடுபடுவார்கள். நிதிசார் தணிக்கையில், ஒரு நிறுவனம் அளிக்கும் கணக்கின் புள்ளிவிவரங்கள் துல்லியமாகவும், சரியாகவும் இருக்கின்றனவா? நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் விதிமுறைகளின்படி செலவிடப்பட்டுள்ளனவா? சரியாக வரி செலுத்தப்பட்டிருக்கிறதா? இருப்புநிலை அறிக்கை (பேலன்ஸ் ஷீட்) ஒளிவுமறைவில்லாமல் இருக்கிறதா? என்பனவற்றை ஆராய வேண்டும். 

கணக்கு தணிக்கையாளர்கள் சுட்டிக்காட்டும் சந்தேகங்கள், பிறழ்வுகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். இவை அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களாகும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கணக்கு தணிக்கையாளர், அடக்கவிலை கணக்காளர் பணிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் பட்டயக்கணக்காளர் பணியின் அடிப்படை பயிற்சிக்கு பதிவுசெய்துகொள்ளலாம். அடக்கவிலை கணக்காளர் பணியின் அடிப்படை பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் பதிவு செய்து கொள்ள வாய்ப்புள்ளது. 
இளங்கலைப் பட்டப்படிப்புக்கு பிறகு ஒரு சில நிபந்தனைகளுடன் நேரடியாக அடக்கவிலை கணக்காளர் பணிக்கும் செல்லும் வாய்ப்புள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்களை இந்திய பட்டயக்கணக்காளர் மையம் (https://www.icai.org), இந்திய அடக்கவிலை கணக்காளர் மையம் ( https://icmai.in ) ஆகியவற்றின் இணையதளங்களில் அறியலாம்.
குற்றவியல் ஆய்வாளர்: குற்றத்தின் அடிப்படை நோக்கம், குற்றவாளியின் நடத்தை, குற்றம் நிகழ்த்தப்பட்டவிதம், குற்றத்தைத் தடுக்க என்ன செய்திருக்க வேண்டும் போன்றவற்றை ஆய்வு செய்வதே குற்றவியல் ஆய்வாளரின் முக்கிய பணியாகும். குற்றச்செயல்களை குறைக்க எந்த வகையான வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதையும் ஆராய்ந்தறிவதும் இப்பணியின் முக்கிய நோக்கமாகும். 
குற்றவியலில் பட்டம் பெற்ற பிறகு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய முடியும். மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) போன்ற அரசு நிறுவனங்கள் தவிர, ஏராளமான தனியார் புலனாய்வு நிறுவனங்களிலும் வேலை செய்யலாம். குற்றச்செயல் நடந்த சம்பவ இடத்தை திறனாய்வு செய்வதும், குற்றங்களைப் புலனாய்வு செய்வதும், தனியார் புலனாய்வுப்பணிகளில் ஈடுபடுவதும் உள்ளிட்ட பலவகையான பணிகள் உள்ளன. இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் குற்றவியல் பாடத்தைப் படிக்கலாம்.
தடய அறிவியல் ஆய்வுப்பணி: புலனாய்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஏற்ற பணி. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு தடய அறிவியல் பேருதவியாக இருக்கும். ஐம்புலன்களால் நேரடியாகக் கண்டறிய முடியாத பல உண்மைகள், தடய அறிவியலின் கண்களில் புலப்படும். அது தான் இப்பணியின் முக்கியத்துவத்தை அதிகமாக்குகிறது. 
சீராலஜி, மனநோயியல்,   நோய்க்குறியியல்,  வனவிலங்கு தடயவியல், ஸ்பீச் சயின்ஸ்  போன்ற பல உட்பிரிவுகளைக் கொண்டது தடய அறிவியல். இந்த துறையில் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன.
எண்ம தடய அறிவியல்: தடய அறிவியல் துறையில் புதிதாக வளர்ந்துவரும், நல்ல எதிர்காலம் உள்ளது எண்ம தடய அறிவியல் (டிஜிட்டல் ஃபோரன்சிக் சயின்ஸ்). மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக வங்கி மற்றும் நிதிநிறுவனங்களில் அண்மைக்காலமாக முக்கியமான இடத்தை பிடித்துவருகிறது எண்ம தடயவியல். 
நிதிமோசடிவழக்குகளை புலனாய்வு செய்வதற்கு தடயவியல் தணிக்கையாளர்களை இந்திய வங்கிகள் சங்கம் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் தடயவியல் தணிக்கையாளர்களை பணிக்கு அமர்த்த தொடங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் தடயவியல் இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. 
 இது  தடயவியல் தணிக்கையாளர்களை நிரந்தரமான அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தி வருகிறது. தடய அறிவியலில் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்ட பிறகு, சொந்தமாக புலனாய்வு நிறுவனத்தைத் தொடங்கி அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கட்டணத்தை பெற்றுக்கொண்டு ஆலோசனைகள் வழங்கலாம். காசோலை, பத்திரம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களில் இடப்பட்டிருக்கும் கையெழுத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்கு கையெழுத்து புலனாய்வு நிபுணர்வுகளும் உருவாகி வருகிறார்கள்.
நுட்பத்திறன்: புலனாய்வுத்துறையில் வேலை செய்வோருக்கு தளராத ஊக்கம், சுறுசுறுப்பு, கவனத்தை ஒருமுகப்படுத்துதல், நடுநிலையான அணுகுமுறை ஆகியவை அவசிய தேவைகளாகும். வேலை நிமித்தமாக வழங்கக்கூடிய கருத்து, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், தற்செயலான அணுகுமுறை ஒத்துவராது. 
புலனாய்வுப்பணிகளில் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க நேரிடும். புலனாய்வுத் துறையில் ஏராளமான சவால்கள் குவிந்துகிடந்தாலும், அதற்கு ஈடுகொடுப்போருக்கு தகுந்த பிரதி பலன்கள் வந்துசேரும். உண்மையைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தோம் என்ற மனநிறைவு, பணி ஓய்வின்போது கிடைப்பது உறுதி. 

Tags : துருவித் துருவி ஆராய்பவரா நீங்கள்?
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT